

வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. தமிழகத் தின் பல நகரங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டிவிட்டது. வறட்சி, குடிநீர் பற்றாக்குறையின் தீவிரம் தெரியத் தொடங்கிவிட்டன. கடந்த சில ஆண்டுகளாகவே அக்னி நட்சத்திரத்துக்கு முன்னதாகவே கொளுத்த ஆரம்பிக்கும் வெயில், அதற்குப் பிறகும்கூட சில வாரங்களுக்குத் தொடர்கிறது. கடுமையான அனல் காற்று ஏப்ரல் முதல் ஜூன் வரையில் வீசுவது வழக்கமாகிவிட்டது. இந்தியப் பெருங்கடலிலும் பசிபிக் பெருங்கடலிலும் வெப்பநிலை அதிகரிப்பதால், அதன் துணை விளைவாக அனல் காற்று முன்பைவிட வலுவாகவும் நெடிதாகவும் இருக்கப்போகிறது. பசுங்குடில் இல்ல வாயுக்களின் அதிகரிப்பு இதை மேலும் தீவிரப்படுத்தும். கடந்த ஆண்டு அனல் காற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டு அளவான 2,040-ல் பாதிதான் என்றாலும், இந்த உயிரிழப்புகளையும் தடுக்க மத்திய - மாநில அரசுகள் விரிவான செயல்திட்டங்களைத் தீட்டி அமல்படுத்த வேண்டும். மாவட்டங்கள், நகரங்கள் அளவில் இவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
தேசியப் பேரிடர் நிர்வாக ஆணையம், இந்திய வானிலைத் துறை உதவியுடன் மாநிலங்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை ஏற்றிருப்பது நம்பிக்கை ஊட்டுகிறது. 2003-ல் ஐரோப்பிய நாடுகளில் இப்படியொரு நிலை ஏற்பட்டு, ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தனர். பிரான்ஸில் மட்டும் 14,800 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, போக்குவரத்து, மருத்துவம், பொதுப்பணித் துறை என்று எல்லா துறைகளும் ஒருங்கிணைந்து மக்களை எச்சரிப்பது, மீட்பது, மருத்துவ உதவிகளைச் செய்வது என்று ஐரோப்பாவில் செயல்பட்டன. கடுங் கோடையில் பயிர்கள் கருகும். காடுகளில் குடிநீரின்றி விலங்குகள் மக்கள் வசிப்பிடங்களுக்கு வந்துவிடும். மூங்கில் காடுகள் உரசித் தீப்பற்றி எரியும். அணைகளின் நீர்மட்டம் வேகமாகக் குறைவதால், புனல்மின் நிலையங்களில் மின்உற்பத்தி நின்றுவிடும். அதே வேளையில் குளிரூட்டிகள், மின்விசிறிகள் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தத் தொடங்குவதால் மின் நுகர்வும் அதனால் தேவையும் அதிகரிக்கும். அதிக வெப்ப நிலை, அனல் காற்று குறித்து வானொலி, தொலைக்காட்சிகளில் முன்கூட்டியே மக்களுக்கு எச்சரிக்க வேண்டும். மக்களும் அந்த எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தக் கூடாது. பேருந்துகளுக்காக மக்கள் காத்திருக்கும் இடங்கள் போன்றவற்றில் நிழல் கூரைகள் அமைக்கப்பட வேண்டும்.
கோடை வெப்பத்தில் விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. அவற்றுக்குத் தேவையான குடிநீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அரசும் மக்களும் இணைந்தே செய்யலாம். வனப் பகுதிகளில் வறட்சியால் தவிக்கும் விலங்குகளுக்குப் போதுமான நீராதாரங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். கடும் வெயிலில் சிக்குபவர்களுக்கு உதவி செய்ய தன்னார்வத் தொண்டர்கள் தயார்படுத்தப்பட வேண்டும். பொது அவசரத் தொலைபேசி எண்களைக் கூட உருவாக்கலாம். கடும் கோடைக்கும் அனல் காற்றுக்கும் பலியாகி மக்கள் இறப்பதைத் தடுப்பதில்தான் மாநில அரசுகளின் வெற்றியே இருக்கிறது.