Published : 14 Feb 2017 09:08 AM
Last Updated : 14 Feb 2017 09:08 AM

ஈரான் - அமெரிக்க உறவில் கசப்பு கூடாது!

நவீன ஏவுகணை ஒன்றைச் சோதித்துப் பார்த்தது என்பதற்காக ஈரான் மீது புதிய தடைகளை விதித்திருக்கிறது அமெரிக்கா. இது பராக் ஒபாமா அதிபராகப் பதவி வகித்த காலத்துக்கு முன்பிருந்த விரோத நிலைக்கு இரு நாடுகளையும் கொண்டு செல்கிறது. ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது, அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிக்காக ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று ஈரானை அமெரிக்கா எச்சரித்தது நினைவுகூரத்தக்கது.

பராக் ஒபாமா இந்த மனப்போக்கைக் கைவிட்டு, அரசியல்ரீதியாகச் சிந்தித்து சுமுக நிலையை உருவாக்கினார். ஈரானுடன் பேச்சு நடத்தி, அணுசக்தித் தயாரிப்பில் ஈரான் தொடர்ந்து ஈடுபட சமரச உடன்பாடு கண்டார். சர்வதேச அளவில் சிக்கலாகிக்கொண்டிருந்த ஒரு பிரச்சினையை ராஜதந்திரத்துடன் தீர்த்தார். அந்த உடன்பாட்டை இஸ்ரேல் கடுமையாகக் கண்டித்தாலும், ஐரோப்பிய நாடுகளுடனான உறவை ஈரான் சீர்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்திக்கொள்ளவும், பிற நாடுகளுடன் வர்த்தகத்தைப் பெருக்கவும் உதவியது. இதனால் ஈரானிய மக்களின் துயர்கள் குறையத் தொடங்கின. அமெரிக்காவும் ஈரானும் இணைந்து இராக்கில் ‘ஐஎஸ்’ இயக்கத்துக்கு எதிராகப் போரிட்டன. அத்துடன் அணுசக்தி சாதக ஒப்பந்தம், ஈரானில் உள்ள மிதவாதிகளின் கரங்களை வலுப்படுத்தியது. இப்போது அதிபர் டொனால்டு ட்ரம்ப் காட்டும் விரோதம் இந்தப் பலன்களையெல்லாம் சீர்குலைத்துவிடும் என்ற அச்சம் ஏற்படுகிறது.

இரண்டுக்கும் மேற்பட்ட நாடுகளால் கையெழுத்திடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்வது ட்ரம்புக்கு எளிதாக இருக்காது. சவுதி அரேபியா, இஸ்ரேல் என்ற இரு மேற்காசிய நட்பு நாடுகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த விரும்புகிறார் ட்ரம்ப் என்று தோன்றுகிறது. இது ஆபத்தையே விளைவிக்கும்.

2003 - ல் இராக் இருந்த நிலையில், ஈரான் இப்போது இல்லை. ஈரான் இந்தப் பகுதியில் பிராந்திய சக்தியாகத் திகழ்கிறது. அதன் செல்வாக்கு இராக்கிலிருந்து சிரியா வரையிலும் லெபனானிலிருந்து ஏமன் வரையிலும் பரவியிருக்கிறது. மேற்காசியப் பகுதியில் அரசியல் ஸ்திரநிலை ஏற்பட வேண்டும் என்றால், ஈரானின் ஒத்துழைப்பு அவசியம். அதைப் பகைத்துக்கொள்வதால் நன்மை ஏற்படாது. இப்போது அங்கே உள்ள ஸ்திரமற்ற நிலைக்குக் காரணமே, சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பனிப்போர்தான். சவுதியுடன் சேர்ந்துகொண்டு ஈரானுக்கு அமெரிக்கா குறிவைத்தால், தனக்கு எதிரான நாடுகளில் ஈரான் எதிர்வினை புரிவதில்தான் அது முடியும். இராக்கில் இன்னமும் நிலைகொண்டிருக்கும் ‘ஐஎஸ்’ இயக்கத்தை அடியோடு வீழ்த்த ஈரானின் ஒத்துழைப்பு எல்லா நாடுகளுக்கும் தேவை. இந்த உண்மைகளைப் பார்க்க ட்ரம்ப் தவறினால், இப்போதுள்ள நிலையைவிட மேற்காசியா மேலும் குழப்பத்தில் ஆழ்ந்துவிடும். ஈரானின் அமைதி இன்றைக்கு ஈரானின் அமைதி மட்டும் அல்ல என்பதை ட்ரம்ப் உணர வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x