

தமிழ்நாட்டில் இப்போது நிலவும் வறட்சி காரணமாக கரும்பு மகசூல் பெருமளவு குறையும் என்று தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன. அத்துடன் 2017-ம் ஆண்டுக்கான புதிய நடவையும் குறைத்துக்கொண்டு வருகின்றனர். மத்திய அரசில் உள்ள உணவு, வேளாண் அமைச்சக அதிகாரிகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய சர்க்கரைப் பொருளாதாரம் ஏற்கெனவே பிரச்சினைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.
2016-17 சர்க்கரைப் பருவத்தில் மொத்தம் 203 லட்சம் டன் சர்க்கரைதான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கிடைத்த அளவுடன் ஒப்பிட்டால் இது 20% குறைவு. ஆண்டுதோறும் தேவைப்படும் சர்க்கரையின் அளவோடு ஒப்பிட்டால் 15% குறைவு. கரும்பு விளைச்சல் மற்றும் சர்க்கரை உற்பத்தி ஆகியவை குறையும் என்று தொடர்ந்து தகவல்கள் வருவதால், சர்க்கரையின் சில்லறை விற்பனை விலை 22% அதிகரித்து, கிலோ ரூ.42 ஆக உயர்ந்திருக்கிறது. சர்க்கரை விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு வழக்கமான எதிர் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது. சர்க்கரைக் கையிருப்பு வரம்பைக் குறைத்தும், ஏற்றுமதியாகும் சர்க்கரைக்கு வரி விதித்தும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதே வேளையில், நல்ல சர்க்கரையைச் சர்வதேசச் சந்தையில் குறைந்த விலையில் இறக்குமதி செய்ய அனுமதித்தல், சர்க்கரை மீதான இறக்குமதித் தீர்வையைத் தள்ளுபடி செய்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் தவிர்க்கப் பார்க்கிறது. இப்படிச் செய்வது கரும்பு சாகுபடியாளர்கள், சர்க்கரை ஆலைகள் என்று இரண்டு தரப்பையும் பலத்த அதிருப்திக்கு உள்ளாக்கிவிடும்.
கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து சர்க்கரை உற்பத்தி உபரியாகி, கையிருப்பும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. சந்தையில் சர்க்கரையின் விற்பனை விலை வீழ்ச்சி அடைந்தால், உற்பத்தியாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும். உற்பத்திக்கு ஆகும் செலவைவிட, விற்பனை விலை குறைவாக இருக்கும்போது சர்க்கரையை விற்பதால் நஷ்டம்தான் ஏற்படும். 2016-17-ம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி எவ்வளவாக இருக்கும் என்று கணக்கிட்ட சர்க்கரைத் தொழில்துறை, இறுதியாக 30 லட்சம் டன்கள் குறைவாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.
சர்க்கரை என்பது பருவகாலப் பயிர். அக்டோபர் தொடங்கி மார்ச் வரையிலான காலத்தில் அதன் உற்பத்தி உச்சபட்சத்துக்குச் செல்லும். எனவே, இறக்குமதி சர்க்கரை மீதான தீர்வையைக் குறைப்பது, பொதுச் சந்தைக்கு வழங்கும் சர்க்கரையின் அளவை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். கரும்பு சாகுபடியாளர்களும், சர்க்கரையை வாங்கும் நுகர்வோர்களும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கையை அரசு எடுத்தாக வேண்டும்.
இப்போது நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி ஆட்சிதான் நடக்கிறது என்பதால், கரும்பு சாகுபடிக்கு நிலங்களை முன்கூட்டியே ஒதுக்குவது, ஆல்கஹால் மற்றும் பாகுக் கழிவு போன்றவற்றைக் கொண்டுசெல்வதற்கான தடைகளை விலக்குவது என்ற நடவடிக்கைகளை எடுப்பது எளிதாக இருக்கும். இதனால், விவசாயிகளுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைக்கும்.