

பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்து எரிபொருளாக வாகனங் களில் பயன்படுத்துவதை விரைவாக அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கூறியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. பெட்ரோலில் 22.5% அளவு வரை எத்தனாலைக் கலக்க வேண்டும் என்று மத்திய சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி விரும்புகிறார். வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழல், கோடிக்கணக்காகச் செலவு செய்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை போன்ற வற்றைக் கணக்கில்கொண்டால், இருவருடைய யோசனைகள் வரவேற்கத் தக்கவைதான். ஆனால், இதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
சர்க்கரை ஆலைகளில் கரும்பைப் பிழியும்போது, கரும்புச் சாறுடன் துணைப் பொருளாகக் கிடைப்பது எத்தனால். மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும்கூட இதைப் பயன்படுத்துகின்றன. பெட்ரோலில் எத்தனாலைக் கலப்பது பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதற்கான முக்கியக் காரணம், அதன் விலையை நிர்ணயம் செய்வதில் இருக்கும் குழப்பம்தான். இதன் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக விலை கேட்கின்றன. பெட்ரோல் நிறுவனங்கள் அந்த விலையை ஏற்க மறுக்கின்றன.
இப்போது, பெட்ரோல் விலையைப் போல இரண்டு மடங்கு விலையில் எத்தனால் விற்கப்படுகிறது. எனவே, பெட்ரோலில் 5% எத்தனால் கலந்தால்கூட பெட்ரோலின் விலையை உயர்த்த வேண்டியிருக்கும். மேலும், இது தரும் ஆற்றல், பெட்ரோல் தரும் ஆற்றலைவிட மூன்றில் ஒரு பங்கு குறைவு. எனவே 10% எத்தனாலை பெட்ரோலில் கலந்தால், எரிபொருளின் எரிதிறன் கணிசமாகக் குறைவதுடன் விலையும் அதிகமாக இருக்கும்.
கடந்த 10 ஆண்டுகளாகவே பெட்ரோலில் 5% அளவுக்கு எத்தனாலைக் கலக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால், வெற்றி கிட்டவில்லை. மோடி அரசு அதை 3 முதல் 4% வரையில் கலக்க வேண்டும் என்ற கருத்தில் வெற்றி பெற்றி ருக்கிறது. ஆனால், இது நாடு முழுக்க ஒரே மாதிரியான அளவில் இல்லை. இப்போதுள்ள மோட்டார் வாகனங்களில் நான்கில் மூன்று மடங்கு பைக், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்கள்தான். அவற்றில் 10% எத்தனால் கலந்த பெட்ரோலை அப்படியே ஊற்றி ஓட்ட முடியாது. அவற்றின் இன்ஜின்களில் இதற்கேற்ற மாற்றங்களைச் செய்தாக வேண்டும்.
அதிகபட்சம் 5% எத்தனாலை பெட்ரோலில் கலந்தால் மட்டுமே இப்போது பயன்பாட்டில் இருக்கும் பழைய கார்களில் பயன்படுத்த முடியும். அதற்கும் மேல் சேர்க்கப்பட்டால் இன்ஜின்களில் கோளாறு ஏற்பட்டுவிடும். அத்துடன் எத்தனால் கலப்பு அமலுக்கு வருமானால், புதிய கார்களில் அதற்கேற்ற மாறுதலுடன் இன்ஜின்களைத் தயாரிக்க வேண்டியிருக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இவ்விஷயத்தில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான முடிவு எடுக்கப்பட வேண்டியிருக்கும். இல்லாவிட்டால், மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் வாகனங்கள் திணற நேரிடும். அத்துடன், எத்தனால் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்க வேண்டும். அதற்கு கரும்புச் சாகுபடிச் செலவும், கரும்பு பயிரிடும் பரப்பளவும் சாதகமாக இருக்க வேண்டும். இத்தனை சிக்கல்கள் இருப்பதால், இதுதொடர்பாக முழுமையான ஆய்வுசெய்வதுடன், சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களின் ஆலோசனையையும் பெற்ற பின்னரே இதில் இறங்க வேண்டும். இல்லையேல், இந்த யோசனை வெற்றிபெறுவது கடினம்!