Published : 06 Nov 2013 08:53 AM
Last Updated : 06 Nov 2013 08:53 AM

வரியும் தொப்பையைக் குறைக்கும்!

மென்பானங்கள், நொறுக்குத் தீனிகள் மீது வரி விதிக்கிறது மெக்ஸிகோ. ‘‘அரசுக்கு வருவாயைப் பெருக்குவதற்காக அல்ல; மக்களிடத்தில் கொஞ்சமாவது விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்’’ என்பதே நோக்கம் என்று சொல்லியிருக்கிறார் அதிபர் என்ரிகோ பென்யா நியத்தோ.

உலகிலேயே தொந்தி பெருத்த ஆண்கள் அதிகம் உள்ள நாடாகி விட்டது மெக்ஸிகோ. அமெரிக்காவை அவர்கள் மிஞ்சிவிட்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு - வேளாண்மை அமைப்பின் (எப்.ஏ.ஓ.) சமீபத்திய புள்ளிவிவரப்படி மெக்ஸிகோவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 32.8% பேர் தொப்பையர்கள். எப்போதும் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 31.8% ஆக இருக்கிறது.

என்ன காரணம்?

சாப்பாட்டோடு எப்போதும் சோடா உள்ளிட்ட மென்பானங்கள் தேவைப்படுகிறது மெக்ஸிகோகாரர்களுக்கு. கூடவே, இடைவிடாத நொறுக்குத் தீனி. சராசரியாக ஓராண்டுக்கு ஒரு மெக்ஸிகர் 163 லிட்டர் மென்பானத்தைக் குடிக்கிறார். உடல் உழைப்பு குறைந்துவிட்ட நவீன வாழ்க்கை முறையின் பின்னணியில், இப்படிச் சாப்பிடுவதே சாபக்கேடாகிவிடுகிறது. சூறையாடும் நீரிழிவுநோயின் பாதிப்புக்குச் சின்ன உதாரணம்: மெக்ஸிகோவில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் வயதுக்கு மீறிய எடையோடு இருக்கிறார்கள்; 9.2% பேர் நீரிழிவுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது.

என்ரிகோ பென்யா நியத்தோ நொறுக்குத் தீனிகள் மீது 8% வரியைக் கொண்டுவருகிறார். இதேபோல, மென்பானங்கள் மீதும் லிட்டருக்கு ஒரு பேசோ வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.

அரசின் இந்த முடிவு இரு விதமான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. ‘‘இந்த வரிகள் அரசின் வருமானத்தைப் பெருக்குவதற்காகத்தானே தவிர, மக்களின் தொந்தியைக் குறைக்க அல்ல’’ என்கின்றன எதிர்க் கட்சிகள். ‘‘இப்படி வரி விதிப்பதால், 10% முதல் 20% விலை உயரும். சாமானிய மக்கள் கூடுதல் சுமையோடு சாப்பிட்டுக் குடிப்பார்கள். அவ்வளவுதான் நடக்கப்போகிறது’’ என்கிறார்கள் மென்பானங்கள், நொறுக்குத்தீனி தயாரிப்பாளர்கள்.

அமெரிக்கப் பேராசிரியர் கெல்லி பிரௌனெல் 1990-களில் பரிந்துரைத்த வரி இது. மது, புகையிலை மாதிரி சத்தில்லாத உணவு வகைகளுக்கும் கூடுதல் வரி. முன்னதாக, ஹங்கேரி, பிரான்ஸ், டென்மார்க் ஆகியவை இத்தகைய வரியை விதித்துள்ளன. அங்கும் இதே விமர்சனங்கள். வரிவிதிப்பு மட்டுமே தீர்வாக முடியாது என்றாலும், மக்களின் நுகர்வில் அது மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது.

மெக்ஸிகோ 2011-ல் மட்டும் சுகாதாரத்துக்கு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.2% அளவுக்குச் செலவிட்டது. இதில் பெரும்பாலான தொகை நீரிழிவு நோய்க்கானது. தொழில் வளர்ச்சி, வரி வருமானம் என்ற பெயரில் மக்களிடம் புதிய உணவு வகைகளை எந்த விசாரணையுமின்றி அனுமதிக்கும் அரசாங்கங்கள் பின்னாளில், சீரற்ற உணவுப் பழக்கத்தை மாற்ற என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதற்கு இன்றைய உதாரணம் மெக்ஸிகோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x