

இந்திய அறிவியல் சிந்தனையாளர்களுக்குப் பயன்தரக் கூடிய ஒரு நல்ல நடவடிக்கையை அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக் குழு சமீபத்தில் எடுத்தது. சண்டிகரில் உள்ள கிருமியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியை அது பணிநீக்கம் செய்தது. அறிவியல் நடைமுறைகளில் தவறுகளைச் செய்து, அந்நிறுவனம் உருவாக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை அறிவியல் ஆய்விதழ்களுக்குச் சமர்ப்பித்ததற்கே இந்தத் தண்டனை. இது அறிவியலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கைதான்.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஆய்விதழ் ‘பிளோஸ் ஒன்’. அதில் இந்த நிறுவனம் சார்பில் 2013-ல் மூன்று கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவற்றின் தரவுகள் உண்மையானவை அல்ல என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரிந்தது. பணிநீக்கம் செய்யப்பட்ட விஞ்ஞானிக்கு ‘தரவுகளைத் தவறாகச் சித்தரித்த’தில் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும், அவரின் அறிவியல் நெறிமுறையில் சிக்கல்கள் இருக்கின்றன என்பது தெளிவு. தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் அறிவியல் நடைமுறைகளில் மோசடிகள் செய்தவர்கள் உண்டு. அத்தகையோரோடு ஒப்பிட்டால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள டாக்டர் ஸ்வரன்ஜித் கமோத்ரா செய்துள்ள தவறு அவ்வளவு மோசமானது அல்ல என்று கருத்தும் இருக்கவே செய்கிறது. ஆனாலும், ஒரு ஆய்வுக் குழு உருவாக்கிய தரவுகளுக்கு அதன் மூத்த உறுப்பினர் பொறுப்பேற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமற்றது அல்ல.
அமெரிக்காவில், ஆராய்ச்சிகளுக்கான தார்மிக நெறிமுறைகள் நடைமுறையில் உண்டு. ஒரு அறிவியலாளரின் ஆய்வு எப்படி இருக்க வேண்டும் என்ற வழிகாட்டு விதிகள் அங்கு தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. ஒருவர் தனது ஆய்வு நடைமுறைகளில் பல முறை தவறிழைத்திருந்தால், அவர் தண்டிக்கப்பட்டாக வேண்டும் என்பது அவற்றில் முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்று.
பொதுவாக, இப்படியான விஷயங்கள் மூடி மறைக்கப்படுவதே இதுவரை இந்திய அணுகுமுறை. மாறாக, முழுதாக விசாரித்து நடவடிக்கை எடுப்பது என்று இப்போது ஒரு ஆய்வு நிறுவனம் எடுத்திருக்கும் முடிவு நம்பிக்கை ஊட்டுகிறது. இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தைப் பற்றியும் நாம் பேசியாக வேண்டும். ஆய்விதழ்களின் ஆசிரியர்களுக்கு இத்தகைய விவகாரங்களில் பல சிரமங்கள் உண்டு. அறிவியல் கட்டுரைகளின் நம்பகத்தன்மையில் சந்தேகம் வந்தால், அவற்றை முழுமையாக விசாரித்துப் பார்க்க அவர்கள் விரும்பினால் செய்ய முடிவதில்லை. அவற்றைச் சமர்ப்பித்த ஆய்வு நிறுவனங்கள் வழக்கமாக விசாரணை முயற்சிகளுக்கு உடன்படுவதில்லை. சில இந்திய விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வுகளின் நடைமுறைகளில் செய்த மோசடிகள் ஒருபோதும் அம்பலப்படுத்தப்படாமல் தப்பிக்க இதுவே காரணம். இத்தகைய போக்குகள் மாற அதற்கேற்ற சூழலை உருவாக்கிடல் முக்கியம்.
அமெரிக்காவைப் போல நாமும் இங்கு ஒரு ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்கலாம். விஞ்ஞான நடைமுறைகளில் தவறு செய்வதை அது முறையாக விசாரிப்பதற்கான எல்லா அதிகாரங்களையும் அளிக்கலாம். விசாரணையில் தவறுகள் தெரியவந்தால், அதற்குரிய தண்டனைகளை விதிக்க அதை அனுமதிக்கலாம். விஞ்ஞான நடைமுறைகளில் தவறுகள் நடப்பதைத் தடுக்கவும் ஆய்வில் தார்மிக நெறிமுறைகளை வலுப்படுத்தவும் இத்தகைய நடவடிக்கைகள் அவசியம். அப்போதுதான் உண்மையான ஆய்வு நெறிமுறைகளைப் பின்பற்றி ஆய்வு செய்பவர்களைப் பாதுகாக்க முடியும். விஞ்ஞானக் கட்டுரைகள் என்ற வேடத்தில் உலவும் குப்பைகளையும் ஒழித்துக்கட்ட முடியும்.