

தமிழக மக்கள் 2016-ல் தேர்ந்தெடுத்த சட்டசபை நீடிக்குமா; உருக்குலைந்துபோய் மக்கள் மீது இன்னொரு தேர்தல் திணிக்கப்படுமா என்று தமிழக மக்களைப் பதற்றத்தில் ஆழ்த்திவிட்டது கடந்த சில வாரத் தமிழக அரசியல் நகர்வுகள். முதல்வர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம் விலகியது, சசிகலாவை அதிமுக தன்னுடைய சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தது, பன்னீர்செல்வம் தன்னிடம் வற்புறுத்தி ராஜிநாமாவைப் பெற்றார்கள் என்று சொல்லி சசிகலாவுக்கு எதிராக அணிதிரட்ட ஆரம்பித்தது, தன் கட்டுப்பாட்டுக்குள் சட்டப்பேரவை உறுப்பினர்களை வைத்துக்கொள்வதற்காக கூவத்தூர் தனியார் விடுதியில் அவர்களை சசிகலா தரப்பு கூட்டிச் சென்று வைத்துக்கொண்டது, இரு தரப்புகளும் ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியது, எதுபற்றியும் வாய் திறக்காமல் ஆளுநர் அமைதி காத்தது, இதனிடையே 'ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அனைவரும் குற்றவாளிகள்' என்று கூறி, சசிகலாவின் முதல்வர் கனவை உச்ச நீதிமன்றம் உடைத்தெறிந்தது, அதிமுகவின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தது என்று எந்த ஒரு நிகழ்வுக்கான பின்னணியும் அதைச் செயல்படுத்த மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறைகளும் ஜனநாயகம் பெருமிதம் கொள்ளத்தக்க வகையில் அமையவில்லை. பழனிசாமி பெரும்பான்மை கோரிய அன்று, கால் நூற்றாண்டில் இல்லாத அளவுக்குத் தமிழக சட்டப்பேரவையில் வன்முறைச் சூழல் உருவானது இந்நடவடிக்கைகளின் உச்சம். பிரதான கட்சிகள் இரண்டுமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய நிலைக்குத் தம்மைத் தாழ்த்திக்கொண்டிருப்பதை எப்படி நொந்துகொள்வது?
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆளும்கட்சி - எதிர்க்கட்சி இடையே காணப்பட்ட இணக்கமும் மாநிலத்தின் பிரச்சினைகளில் ஆளும் தரப்புடன் சேர்ந்து எதிர்த்தரப்பும் ஒருங்கிணைந்து செயல்பட்ட ஆக்கபூர்வ அணுகுமுறையும் தமிழக மக்களைப் பெரிதும் கவர்ந்தது. ஆளும் கட்சிக்குள் பிளவுச் சூழல் உண்டானபோது, இரு தரப்புகளில் ஒரு தரப்பை ஆதரித்து ஆளும்கட்சியை உடைப்பது, ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவது, குதிரை பேர முயற்சிகளில் ஈடுபடுவது போன்ற முயற்சிகளில் இறங்காமல், "இது அவர்களுடைய பிரச்சினை; திமுக ஒருபோதும் கொல்லைப்புறம் வழியே ஆட்சியில் அமராது" என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்தது திமுக மீதான மதிப்பை மேலும் உயர்த்தியது. ஆனால், இச்செயல்பாடுகள் உண்டாக்கிய மதிப்பு அத்தனையும் உடைத்து நொறுக்கியது, முதல்வர் பழனிசாமியின் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடந்தபோது திமுகவினர் நடந்துகொண்ட முறை. பழனிசாமி தரப்பு வெல்ல போதிய எண்ணிக்கை பலம் இருக்கிறது என்று தெரிந்துவிட்ட நிலையில், ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி சட்டப்பேரவையின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்ற முனைப்பே திமுகவின் செயல்பாட்டில் தெரிந்தது. திமுகவினர் காகிதங்களைக் கிழித்துப் பறக்கவிட்டனர், சபாநாயகரின் மேஜையை உடைத்தனர், மைக்கை உடைத்தனர், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தனர்; பேரவைத் தலைவர் அவையிலிருந்து வெளியேற முற்பட்டபோது, அவரைச் சூழ்ந்துகொண்டும், இழுத்தும் கோஷமிட்டனர். பின்னர், திமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர். அவர்கள் கூடவே காங்கிரஸாரும் சென்றதும், அவையில் அதிமுகவின் இரு பிரிவினர் மட்டுமே இருந்தார்கள். பெரும்பான்மையை நிரூபிக்க 117 பேர் ஆதரவு தேவை என்ற நிலையில், பழனிசாமிக்கு ஆதரவாக 122 பேரும் எதிராக 11 பேரும் வாக்களித்தனர். விளைவாக, பழனிசாமி வென்றார்.
இந்த வாக்கெடுப்பில் பழனிசாமியை ஆதரித்து வாக்களித்த சிலர், கட்சித் தலைமையின் மிரட்டல் காரணமாக அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்ற கருத்தில் உண்மைகூட இருக்கலாம். ஆனால், அதற்காக இதை ரகசிய வாக்கெடுப்பாகத்தான் நடத்தியிருக்க வேண்டும் என்ற வாதத்தில் வலு இல்லை. இந்த அரசு ஜனநாயக விரோதமாகச் செயல்படுகிறது என்று கருதினால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு சட்டப்பேரவைக்குள்ளும் வெளியிலும் உள்ளபடி நிறைய வேலைகள் இனிமேல்தான் உள்ளன. அதில் ஈடுபடுவதற்கு முன்னதாக அவருடைய கட்சியில் அவர் முதலில் சீர்திருத்தங்களைத் தொடங்க வேண்டும். உண்மையில் இன்றைய திமுக தன்னிடத்தில் களையெடுத்துக் கொள்ள வேண்டிய ஆட்களையும் குறைகளையும்கூட அன்றைய நாள் அவர்களுக்கே உணர்த்தியிருக்கிறது என்றும் கூடக் கூறலாம்.
மிகுந்த இக்கட்டான தருணத்தில் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார் பழனிசாமி. அவருக்கு வாழ்த்துகள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதலாக தமிழக அரசின் செயல்பாடுகள் உறைந்திருக்கும் சூழலில் முழுவீச்சில், வேகமாக அரசு இயந்திரத்தை முடுக்கிவிட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது அவருடைய அரசு. பழைய அமைச்சரவையேதான் தொடருகிறது என்பதால், புதிய அரசுக்கான தேன்நிலவுக் கால அவகாசத்தை விமர்சகர்களிடமிருந்தோ மக்களிடமிருந்தோ அவர் எதிர்பார்க்க முடியாது. அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற கையோடு, அதிமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் சில அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதும், அதே வேகத்தில் மாநிலத் தேர்தல் ஆணையத்திடமிருந்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வந்திருப்பதும் நல்ல தொடக்கம். வேகமாகவும் மாநில நலன்சார் பிரச்சினைகளில் ஒற்றுமையாகவும் செயல்பட வேண்டும் இரு தலைவர்களும்!