

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்பை முதல் முறையாகச் சந்திக்கவிருக்கிறார். 2014-ல் அவர் அமெரிக்கா சென்றபோது, முந்தைய 20 ஆண்டுகளில் இந்தியா - அமெரிக்கா இடையில் தொடர்ந்து உறுதியடைந்துவந்த உறவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வியூக உறவை வளர்ப்பதில் அப்போதைய அதிபர் ஒபாமா காட்டிய தனிப்பட்ட ஈடுபாடும் அந்தப் பயணத்தை எளிதாக்கின.
சர்வதேச உறவைப் பொறுத்தவரையில் இன்றைக்கு நரேந்திர மோடி புதியவர் அல்ல. எனினும், இன்றைக்கு அமெரிக்காவில் நிலவரம் முன்பைப் போல் இல்லை. சர்வதேச உறவு விஷயத்தில் அதிகக் கடுமை காட்டிவருகிறார் ட்ரம்ப். அவரது ஆட்சியில் வெளியுறவுக் கொள்கைகள் எப்படி இருக்கும் என்று எளிதில் கணிக்க முடியாத நிலைமை உருவாகியிருக்கிறது.
அதேசமயம், பிரதமர் மோடியிடம் இரண்டு முறை பேசியிருக்கும் ட்ரம்ப், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரையும் இந்தியாவுக்கு அனுப்பிவைத்தார். ஆனால், காப்புவரித் தன்மை, குடியேற்றம், பணியாளர் விசா போன்ற விஷயங்களில் இந்தியாவை விமர்சித்திருக்கிறார். தனது சொந்தக் கடமைகளை நிறைவேற்ற அமெரிக்காவிடமிருந்து பில்லியன் கணக்கில் நிதியுதவி பெற்றதாகவும் குற்றம்சாட்டி, பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியிருக்கிறது. உலகத் தலைவர்களைச் சந்திக்கும் விஷயத்தில் இந்தியாவுக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லை. ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் சீனா, துருக்கி போன்ற நாடுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த முறை, இந்திய வம்சாவளியினரை அதிக அளவில் பங்கேற்கச் செய்யும் நிகழ்ச்சிகள் இருக்காது என்பதை, குடியேற்ற விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டின் பிரதிபலிப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
சூழல்கள் மாறியிருக்கும் நிலையில், இரு நாடுகளின் அதிகாரிகளும் சந்தித்துப் பேசுவதைவிடவும், தலைவர்கள் இருவரும் சந்தித்துப் பேசுவதற்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. பெரிய அறிவிப்புகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் இரு தரப்பிலிருந்தும் வெளிப்படுத்தப்படவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு நடவடிக்கை, கடல்வழிப் போக்குவரத்து வசதி, வணிகம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். எனினும், இந்தச் சந்திப்பின் மூலம் ராணுவ ஒத்துழைப்பு, அதிக அளவில் ராணுவத் தளவாடங்கள் வாங்குவது, ஆப்கானிஸ்தான் விவகாரம், நீண்டகாலமாக செயல்படுத்தப்படாத அணுசக்தி ஒப்பந்தம் போன்ற விஷயங்களுக்குத் தீர்வுகாண்பது அவசியம். இரு நாட்டு உறவில் ட்ரம்பின் ஈடுபாடு எத்தகையது என்பதை உணர மோடிக்கு இது உதவும். அத்துடன், உலக அரசியலில் ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்றதன்மையை எதிர்கொள்வதற்கும் இந்தியாவுக்குப் பயன்படும்.