

தகவல் தொடர்பு வசதிகள் மேம்பட்டதாலும் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்ததாலும், உலகமே இப்போது கிராமமாகச் சுருங்கி விட்டதை நேரில் பார்க்கிறோம். உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அடுத்த நொடியே அதைத் தெரிந்துகொள்ளவும் பார்த்துக்கொள்ளவும் முடிகிறது. பூமிப் பரப்புக்கு மேலே மழைக் காலத்துத் தும்பிகளைப்போல கணக்கற்ற செயற்கைக்கோள்கள் உலகை அங்குல அங்குலமாக மேய்ந்துகொண்டிருக்கின்றன. தகவல் தொடர்புக்காக என்று கூறப்பட்டாலும் உளவு பார்ப்பதையும் ஒருங்கிணைக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. உள்ளூர் தபால்காரருக்குச் சிக்காத சந்து முனைகளைக்கூட ‘கூகுள் மேப்’ கூட்டிப்போய்க் காட்டுகிறது. இப்படிப்பட்ட சூழலில், எண்ணெய்த் துரப்பணப் பணிகளில் சீன நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது என்று உள்துறை அமைச்சகம் பெட்ரோலிய அமைச்சகத்துக்கு அறிவுரை கூறியிருப்பதைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா என்ற கேள்வியே எழுகிறது.
முன்பு ஒருமுறை தகவல் தொழில்நுட்பத் துறையில் சீன நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது என்று இதே துறை ஆலோசனை வழங்கியிருந்தது. சீனாவுடன் எவ்வளவுதான் நட்பு பாராட்டினாலும் இருதரப்பு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டாலும் தொழில், வர்த்தக உறவுகளை வளர்த்துக்கொண்டாலும் அடிநாதமாக சீனத்தின் மீது இருக்கும் அச்சமும் அவநம்பிக்கையும் மறையவே இல்லை என்பதையே இது காட்டுகிறது. இந்த அச்சத்தையும் முன்னெச்சரிக்கையையும் தவறானது என்று ஒட்டுமொத்தமாகக் கூறிவிட முடியாது. அருணாசலப் பிரதேசத்திலும் காஷ்மீர எல்லைப் பகுதியிலும் அதன் ராணுவம் அடிக்கடி வந்துபோவதும் கூடாரம் அமைப்பதும் உள்ளூர இருக்கும் சந்தேகத்தை விசிறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், நம்முடைய நட்பு நாடு அல்லது நமக்கு விரோதமான நாடு அல்ல என்று நாம் நினைத்த நாடுகளே நமக்கு உலைவைக்கிற காரியங்களில் ஈடுபட்டதை ‘விக்கிலீக்ஸ்’ அம்பலம் மூலம் தெரிந்துகொண்டோம். கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் இந்தியர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்கள் தொடர்பாகத் தாங்கள் திரட்டிய தகவல்களை அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு முகமையிடம் பகிர்ந்துகொண்டதைப் பார்த்தோம். நம்மால் என்ன செய்ய முடிந்தது?
எந்த ஒரு நாடாக இருந்தாலும் சரி - அது நம்முடைய நட்பு நாடோ, நமக்கு எதிராகச் செயல்படும் நாடோ - முன்னெச்சரிக்கையோடு அணுகுவதும் அதற்கேற்ப நம்முடைய பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளை முடுக்கிவிடுவதுமே புத்திசாலித்தனமான அணுகுமுறை. அதேசமயம், எந்த ஒரு நாட்டிடம் இருந்தும் கிடைக்கக்கூடிய ஆக்கபூர்வமான பங்களிப்புகளைப் புறக்கணித்துவிடக் கூடாது, குறிப்பாக அண்டை நாடுகளிடம். மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, சீன நிறுவனங்கள் பல மடங்கு எண்ணெய்த் துரப்பணப் பணிகளைச் சிக்கனமாக நமக்கு முடித்துக்கொடுக்க முடியும். இந்தத் துறையில் சீனர்களின் நிபுணத்துவம், தொழில்திறமை ஆகியவற்றுடன் குறைந்த செலவில் முடிக்கும் ஆற்றலையும் நாம் பயன்படுத்திக்கொள்வது அவசியம். ஒரு விஷயத்தைத் தொடங்கும்போதே அச்சத்துடனும் முன்முடிவுகளோடும் அணுகுவது வளர்ச்சிக்கு அல்ல; இழப்புக்கே வழிவகுக்கும்!