Published : 27 Nov 2014 09:17 AM
Last Updated : 27 Nov 2014 09:17 AM

சாதிவாரிக் கணக்கெடுப்பில் என்ன தவறு?

சாதிய உணர்வுகளும் சாதி அடிப்படையிலான சமூக நிலைப்பாடுகளும் நிரம்பிய நாட்டில், சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுக்கப்படுவது தேவையற்றதுதான். ஆனால், அரசின் கல்வி நிறுவனங்களிலும் அரசு அலுவலகங் களிலும் வாய்ப்பைப் பெற சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவதால், சாதிவாரிக் கணக்கெடுப்பு ஒரு வகையில் அவசியமாகிறது. மக்களுடைய சமூக முன்னேற்றத்தை அளவிட வேண்டும் என்றால், எந்தெந்த சாதியைச் சேர்ந்தவர்கள் நன்கு படித்து பட்டதாரியாகியிருக்கிறார்கள், எத்தனை பேர் அரசு வேலையில் சேர்ந்திருக்கிறார்கள், அதிகாரிகள் எத்தனை பேர், சொந்த வேலை செய்வோரில் சமூகத்தின் உயர் நிலைக்கு வந்தவர்கள் எத்தனை பேர் என்றெல்லாம் கணிக்க சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம். இதே கருத்தைத் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களும் எதிரொலித்திருக்கிறார்கள்.

சாதி அடிப்படையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆட்சியில் இருப்போரின் நிர்வாக அதிகாரத்தில் தலையிடும் உரிமையில் நீதிமன்றம் தலையிட முடியுமா, முடியாதா என்ற ஒரு அம்சத்தை மட்டும் அலசிப் பார்த்து, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சாதி அடிப்படையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியதை எதிர்த்து வழக்காடிய மத்திய அரசும், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையமும் இப்போது நடந்துவரும் 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக ஏன் எதையும் உச்ச நீதிமன்றத்தில் கூறவில்லை என்று தெரியவில்லை. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எப்படியிருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிடுவது, தங்களுடைய அதிகார வரம்பில் தலையிடும் விஷயம் என்று சுட்டிக்காட்டுவதுதான் மத்திய அரசின் நோக்கம் என்று அறிய முடிகிறது.

சமூக, பொருளாதார, சாதிப் பின்னணிகளுடன் மக்கள்தொகையைக் கணக்கெடுக்கும் பணி 2011 ஜூன் முதல் நடந்துவருகிறது. அந்தக் கணக்கெடுப்பில் முக்கியமாகப் பார்க்கப்படுவது தாழ்த்தப்பட்டோர் அல்லது பட்டியல் இனத்தவர் சாதிகளும் பழங்குடி இனத்தவரின் சாதிகளும்தான். இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் சாதிகள்குறித்துத் தகவல்கள் தரப்பட்டாலும் அவை அறிக்கையில் இடம்பெறுமா என்பது தெரியவில்லை.

இடஒதுக்கீடு தொடர்பாக வழக்குகள் வரும்போதெல்லாம், எந்த அடிப்படையில் இந்த இடங்கள் ஒதுக்கப்படுகின்றன அல்லது கேட்கப்படு கின்றன, ஒரு குறிப்பிட்ட சாதியில் மொத்தம் எத்தனை பேர் இருக் கின்றனர், அவர்களில் எத்தனை பேர் கல்வி பெறாமல் இருக்கின்றனர், எத்தனை பேர் அரசு வேலைவாய்ப்பு பெறாமல் இருக்கின்றனர் என்றெல்லாம் தெரியாமல், எப்படி இடஒதுக்கீடு கேட்கப்படுகிறது என்றெல்லாம் நீதிமன்றங்கள் கேட்டதுண்டு.

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இப்போதுள்ள நிலையிலேயே தொடர வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அதே சமயம், தான் திரட்டும் சாதிவாரித் தரவுகளை அது என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை. அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்டவற்றால் எந்தெந்தப் பிரிவினர் பலன் அடைகின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தத் தரவுகளை அரசு பயன்படுத்திக்கொள்ளும் என்று தெரிகிறது. அரசின் நலத்திட்டங்களால் ஒவ்வொரு சாதியும் எந்த அளவுக்குப் பயனடை கிறது என்பதைத் தெரிந்துகொள்ள 2011 கணக்கெடுப்பு உதவக்கூடும். எப்படியும் சமூகநீதியிலிருந்துதான் சமத்துவ சமுதாயத்துக்கான பயணத்தைத் தொடங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x