Published : 03 Mar 2014 09:21 AM
Last Updated : 03 Mar 2014 09:21 AM

வெளிச்சம் தெரிகிறது

வியன்னா பேச்சுவார்த்தை ஈரானை வெளிச்சத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது. ஈரானின் அணுசக்தித் துறைச் செயல்பாடுகள், அதன் அணுசக்தித் திட்டம் தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இணைந்து நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய, இறுதி ஒப்பந்தத்துக்கான கட்டமைப்பை இருதரப்பும் ஏற்றுக்கொண்டதைத் தெளிவுபடுத்துகிறது.

இந்த இடைக்கால அறிக்கையின்படி, ஈரான் இனி 20% திறனுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத் தயாரிப்பை நிறுத்திவிடும். இதே அளவுக்குக் கையிருப்பில் வைத்திருக்கும் யுரேனியத்தின் திறனை அது நீர்த்துப்போகச் செய்துவிடும். எஞ்சியதைச் செறிவூட்ட இயலாத அளவுக்கு மாற்றிவிடும். நடான்ஸ், போர்டோ ஆகிய இடங்களில் உள்ள அணு உலைகளின் யுரேனியங்களைச் செறிவூட்டாது. இப்போதுள்ள இயந்திரங்களைப் பழுதுபார்ப்பதற்கான கருவிகளை மட்டுமே அது தயாரிக்கும். அராக்கில் இருக்கும் கனநீர் அணுநிலையத்தின் செயல்பாடுகளை நிறுத்திவைக்கும். யுரேனியத்தைச் செறிவூட்டும் வசதிகளை இனி எந்த இடத்திலும் அது புதிதாக மேற்கொள்ளாது. எல்லாவற்றுக்கும் மேலாக, சர்வதேச அணுசக்தி முகமை நடான்ஸ், போர்டோவில் உள்ள அணுநிலையங்களை அன்றாட அடிப்படையில் நேரில் பார்த்துச் சோதனைகள் நடத்தலாம். இதேபோல, அராக்கில் உள்ள அணு உலையை மாதம் ஒருமுறை பார்த்து வரலாம்.

இந்த வாக்குறுதிகளை ஈரான் நிறைவேற்றினால், இனி ஈரான் மீது அணுசக்தி தொடர்பாக எந்தவிதத் தடை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாட்டோம் என்று மேற்கத்திய நாடுகள் உறுதியளித் துள்ளன. அத்துடன் ஈரானுக்கு, நிறுத்திவைத்திருந்த 420 கோடி அமெரிக்க டாலர்கள் எண்ணெய் வருவாய் அளிக்கப்படும். விலையு யர்ந்த ஆபரணக் கற்கள், பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்படும். ஈரானின் மோட்டார் வாகனத் துறைக்கும் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் தேவையான பொருட்களையும் தொழில்நுட்ப சேவைகளையும் உலக நாடுகளிடமிருந்து பெறலாம். ஈரானிடமிருந்து இப்போது இறக்குமதி செய்துவரும் கச்சா பெட்ரோலிய எண்ணெய் அளவை மேற்கத்திய நாடுகள் அப்படியே தொடரும்.

மேற்கத்திய நாடுகள் இந்தப் பேச்சில் திருப்தி அடைந்திருக்கின்றன. ஆனால், இஸ்ரேலுக்கு இன்னமும் சந்தேகம் தீரவில்லை. அதேபோல, ஈரானைப் போட்டியாளராகவே பார்க்கும் சவூதியும் இந்த முன்னேற்றங்களை எச்சரிக்கையுடனே பார்க்கிறது. அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் இது எதிரொலிக்கலாம். குறிப்பாக, ஈரானின் ஏவுகணைத் திட்டங்களையும் கண்காணிக்கும் நிபந்தனையை ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் என்ற இஸ்ரேலின் முக்கிய கோரிக்கை இடம்பெறலாம்.

அவரவர் சுயநலன் சார்ந்த நோக்கங்களே இத்தகைய பேச்சுவார்த்தை களின் அடிநாதம் என்றாலும், உலக நாடுகள் இந்தப் பேச்சுவார்த்தையை உற்றுநோக்கக் காரணம், ஈரானின் மறுமலர்ச்சியும் ஈரானியர்களின் மறுவாழ்வும்தான். கூடவே, போரில்லா உலகுக்குப் பெரும் எதிரியான அணு ஆயுதங்களுக்கு முடிவுகட்டுவதும். அந்த நோக்கம் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டின் சுயநல நோக்காலும் சிதைந்துவிட இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தையில் சர்வதேசம் இடம் அளித்துவிடக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x