Published : 14 Jul 2016 08:45 am

Updated : 14 Jun 2017 14:41 pm

 

Published : 14 Jul 2016 08:45 AM
Last Updated : 14 Jun 2017 02:41 PM

காவல் துறையின் வெறியை எப்படித் தணிக்கப்போகிறோம்?

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தினர் மீது, பகலில் கடைவீதியில் பலரும் பார்த்திருக்க காவல் துறையினர் மூன்று பேர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மக்களை அதிர வைத்தி ருக்கிறது. நகை வாங்கச் சென்ற கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட தகராறை விலக்கிவிடச் சென்ற காவலர்கள், தங்கள் பேச்சை அவர்கள் கேட்காததால் தாக்கியதாகக் காரணம் சொல்லியிருக்கிறார்கள். இதேபோல, சென்னை - திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் பெண் காவலரால் தாக்கப்பட்டிருக்கிறார். அதிர்ச்சியில் சிகிச்சை பெறாமல் வீடு திரும்பிய அப்பெண்ணுக்கு, வழியிலேயே பஸ்ஸில் பனிக்குடம் உடைந்திருக்கிறது. காவல் துறையினர் இதற்கும் காரணமும் பதிலும் வைத்திருக்கிறார்கள். இந்த இரு சம்பவங்களிலும் காவல் துறையினரின் மனிதத்தன்மையற்ற, மிருகத்தனமான தாக்குதலுக்கு உள்ளானவர்களின் வலி மிகுந்த வார்த்தைகளைக் கேட்கக் கூடிய மனசாட்சி உள்ள எவரும், “சம்பந்தப்பட்ட காவலர்களை உடனடியாக நிரந்தரப் பணிநீக்கம் செய்ய வேண்டும்” என்றே கோருவார்கள். ஆனால், இதுவரை இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரும் தாற்காலிகப் பணிநீக்கம்கூடச் செய்யப்படவில்லை. செங்கம் காவலர்கள் கண்துடைப்பாகப் பணி மாறுதல் மட்டும் செய்யப்பட்டிருக்கிறார்கள்; திருவல்லிக்கேணி காவலர் மீது அந்த நடவடிக்கைகூட இல்லை. இது உணர்த்தக்கூடிய செய்தி என்ன? இதெல்லாம் காவல் துறையினருக்கு மிக சகஜமான ஒன்று என்பதுதானே?

உண்மை அதுதான். நிகழ்தகவின் மோசமான கண்ணியில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் இந்த இரு சம்பவங்களிலும் கேமராவிடம் சிக்கிக்கொண்டார்கள் என்பதைத் தவிர, காவல் துறை உயரதிகாரிகளுக்கோ அரசுக்கோ இதில் அதிர்ச்சி எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. சில மாதங்களுக்கு முன்புகூடப் பார்த்தோமே, தஞ்சாவூர் மாவட்டத்தில், வங்கிக் கடன் தவணையைச் செலுத்தத் தவறிய விவசாயியிடம், காவல் துறையினர் எப்படித் தன் கொடுங்கோன்மையை வெளிப்படுத்தி, அவமானப்படுத்தினர் என்பதை! இப்படியான சம்பவங்களில் ஈடுபட்ட காவலர்களின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் மனிதத்தன்மையற்ற மேலாதிக்க உணர்வுக்கும் கொஞ்சமும் குறைவில்லாத தவறு, இப்படியானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத உயரதிகாரிகளினுடையது; அரசினுடையது!


நம்முடைய அரசியல், சமூகச் சூழலில் காவல் துறையினர் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றுகிறார்கள்; கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், இந்தப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர வேண்டிய பொறுப்பும் காவல் துறை வசமே இருக்கிறது. மேலும், நம்மூரில் என்றைக்கும் மன அழுத்தத்தில் உள்ள காவலர் ஒரு அரசியல்வாதியை அடித்தார்; அமைச்சரின் உறவினரைத் தாக்கினார் என்பதான செய்திகள் பார்க்கக் கிடைப்பதில்லையே! அப்படியென்றால், நெருக்கடி நிலையும் மன அழுத்தச் சூழலும்கூட ‘இடம் - பொருள் - ஏவல்’ பார்த்துத்தானே வெடிக்கின்றன? எது சாமானியர்களைப் பார்த்து வெடிக்க வைக்கிறது? காவல் துறையில் மேலிருந்து பரவும் இந்த அலட்சியம். அது கொடுக்கும் தைரியம். மூன்று நாட்களாக மக்கள் பொதுத்தளத்தில் இதுபற்றி கவலையோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அதிகாரிகள், இன்னமும் சிறு சலனமும் காட்டாமல் இந்நிகழ்வுகளைக் கடக்க முயற்சிக்கிறார்கள் என்றால், அது கீழே இருக்கக்கூடியவர்களுக்கு என்ன மாதிரியான சமிக்ஞைகளைக் கொடுக்கும் என்பது உயரதிகாரிகளுக்குப் புரியாதா?

ஆங்கிலேயர் காலத்தில் அரசின் அடியாளாகப் பழக்கப்பட்ட காவல் துறைக்கு மனித உணர்வூட்டுவது தொடர்பாக, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். 1964 காவல் துறைத் தலைவர்கள் மாநாட்டிலேயே ‘பிரம்படி’ தொடர்பாக தெளிவான விதிகள் வலியுறுத்தப்பட்டன. அதன்படி, நம் அண்டை மாநிலமான கேரளத்தில் காவலர்களுக்கு அந்நாட்களில் பிறப்பிக்கப்பட்ட நிலை ஆணை இங்கு நினைவுகூர வேண்டியது. “ஓரிடத்தில் தடியடி நடத்த வேண்டிய கட்டாய நிர்ப்பந்தம் உருவாகும்போதுகூட, காவலர்களின் தடிக்கும், கூட்டத்தினரின் உடலுக்கும் இடையே அரை அடி இடைவெளி இருக்க வேண்டும்” என்பது அந்த விதிகளில் ஒன்று. அதாவது, பொதுமக்களை ஓங்கி அடிப்பதுகூடத் தவறு. அதேபோல, தலையிலோ, எலும்புகளிலோ தாக்கக் கூடாது என்பதும் தெளிவான வரையறை. செங்கத்தில் நம் காவலர்கள் எப்படித் தாக்கினார்கள்; தடியை எவ்வளவு தூரம் ஓங்கி ஓங்கி அடித்தார்கள் என்பதற்கெல்லாம் காணொளி ஆதாரங்கள் இருக்கின்றன.

தமிழகத்தில் ஆண்டுக்குச் சுமார் 700 தடியடிச் சம்பவங்கள் நடக்கின்றன. தவிர, காவல்துறை ஆவணங்களிலேயே பதிவாகாத பல பலப்பிரயோகங்களும் உண்டு. செங்கத்தில் நடந்தது கலவரமல்ல, ஒரு குடும்பப் பிரச்சினை. தம்பதியைத் தாக்கியதோடு, கூடி நின்ற பொதுமக்களையும் விரட்டி விரட்டி அடித்திருக்கிறார்கள் காவலர்கள். பொதுமக்கள் மீது இவ்வளவு மிருகத்தனமான வெறி எங்கிருந்து வருகிறது? எல்லோரும் பார்த்திருக்கும் சூழலில் பொது இடத்திலேயே அந்த வெறி இவ்வளவு தைரியமாக இயங்கும் என்றால், காவல் நிலையத்தில், யார் பார்வைக்கும் உட்படாத தனியறையில் எப்படி இயங்கும்? மனசாட்சியுள்ள ஒருவர் இதை எப்படிக் கடக்க முடியும்?

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 32 லட்சம் குற்றங்கள் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குகளாகப் பதிவாகின்றன. இவற்றில், சுமார் 10% சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்கின்றன. ஆனால், காவல் துறை மீதான வழக்குகள் பதிவாவது அரிதினும் அரிதாகவே நடக்கிறது. அண்டை மாநிலமான கேரளத்தோடு ஒப்பிட்டால், அங்கு ஆண்டுதோறும் காவலர்களுக்கு எதிராக சுமார் 4,000 புகார்கள் பெறப்படுகின்றன. அவற்றில் சுமார் 400 சம்பவங்களில் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் காவல் துறைக்கு எதிராகப் பெறப்படும் புகார்களின் எண்ணிக்கையே வெறும் 400-க்குள்தான் இருக்கிறது. இவற்றில் 20 சம்பவங்கள்கூட வழக்காகப் பதியப்படுவதில்லை. ஆட்சியில் இருப்பவர்களின் கைப்பாவையாகக் காவல் துறை செயல்படுவதற்கான பிரதி உபகாரமாகவே பல விஷயங்கள் காற்றோடு காற்றாகப் போய்விடுகின்றன. விளைவாக, நாளுக்கு நாள் நம் காவல் துறையின் வெறி ஏறிக்கொண்டே இருக்கிறது.

மக்களுக்காகத்தான் இயங்குகிறது காவல் துறை. ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். மக்களின் அமைதி, மக்களின் பாதுகாப்பு, மக்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதே காவல் துறையின் அடிப்படைக் கடமை. இந்த உணர்வைக் காவல் துறையிடம் வளர்த்தெடுக்க வேண்டும் என்றால், காவல் துறைச் சீரமைப்புப் பணியை இனியும் தள்ளிப்போடக் கூடாது. சீரமைப்புப் பணியில் பொதுமக்களை எப்படி அணுகுவது, அவர்களுடன் எப்படி உறவைப் பேணுவது, மனித உரிமைகள் எந்த அளவுக்கு முக்கியமானவை என்பதான பண்புகளையெல்லாம் கற்றுக்கொடுப்பதும் காவல் துறையை அரசியலுக்கு அப்பாற்பட்ட சுயேச்சையான, தன்னதிகாரம் மிக்க அமைப்பாக மாற்றுவதும் நீண்ட கால அளவில் செயல்படுத்த வேண்டிய செயல்திட்டம். இப்படியான அத்துமீறல்களில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுப்பது உடனடியானது.

தமிழகக் காவல் துறை இயக்குநர் இந்த விவகாரத்தில் பதில் சொல்லக் கடமைப்பட்டவர். அவர் உரிய நடவடிக்கையை எடுக்காத சூழலில், அவர் மீதும் சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு காவல் துறையைத் தன் வசம் வைத்திருக்கும் முதல்வரினுடையது!


காவல் துறையின் வெறிஎப்படித் தணிக்கப்போகிறோம்?

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x