

வரலாற்றைத் திரித்தல், வெறுப்புப் பிரச்சாரம் போன்ற விஷயங்களெல்லாம் வலதுசாரிகளின் அரசியல் உத்திகளில் ஒன்று. இந்தியாவில் நேரு மீது வலதுசாரி அமைப்புகள் வெறுப்பை உமிழ்வதும் இவற்றின் ஒரு பகுதிதான். காலங்காலமாக அவை இதைச் செய்துவருகின்றன. இப்போது பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சூழலில் அவை இன்னும் உத்வேகம் பெற்றிருக்கின்றன.
சமீபத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பு கேரளத்தில் நடத்தும் ‘கேசரி’ என்ற மலையாள இதழ் நேரு மீது விஷத்தை உமிழும் கட்டுரையைப் பிரசுரித்திருக்கிறது. கோபாலகிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையின் மைய தொனியே ‘காந்திஜிக்குப் பதிலாக நேருவைத்தான் கோட்சே குறிவைத்திருக்க வேண்டும்’ என்பதுதான். ‘காந்திஜியை வணங்கிவிட்டுத்தான் கோட்சே துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டார். காந்தியின் முதுகில் குத்திவிட்டு அவருக்கு நேராகக் கும்பிடுபோட்ட நேருவைப் போல கோட்சே செய்யவில்லை’ என்றெல்லாம் கோபால கிருஷ்ணன் பிதற்றியிருக்கிறார். கடும் கண்டனங்கள் எழுந்ததும் ஆர்எஸ்எஸ் இயக்கம், ‘இந்தக் கருத்து தங்களுடைய அமைப்பின் கருத்தல்ல, தனிநபருடையது’ என்று சொல்லியிருக்கிறது.
வரலாற்றில் எவருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அதேபோல, ஒரு பத்திரிகையில் வெளியாகும் ஒவ்வொரு வரியும் அந்தப் பத்திரிகையின், அல்லது அந்தப் பத்திரிகையை நடத்தும் அமைப்பின் பார்வையை வெளிப்படுத்துகிறது என்றும் சொல்லிவிட முடியாதுதான். ஒரு ஜனநாயக ஊடகம் என்பது பல்வேறு கருத்துகளுக்கும் இடமளிப்பதுதான். நாம் இந்த சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் அங்கீகரிக்கிறோம். அதே சமயம், இப்படியான விமர்சனங்கள், விவாதங்கள், பின்னுள்ள நோக்கங்கள் நேர்மையாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்க வேண்டும். எந்தக் கொலையை யார் செய்திருக்க வேண்டும், யார் யார் கொலை செய்யப்பட்டிருந்தால் நாடு நன்றாக இருந்திருக்கும் என்ற வக்கிரச் சிந்தனையெல்லாம் நிச்சயம் ஆரோக்கியமான மனங்களிலிருந்து வெளிவராது.
ஒரு சமூகத்தின் மீதோ, தங்கள் சித்தாந்தத்துக்கு ஒத்துவராதவர்கள் மீதோ தொடர்ந்து வெறுப்பு முத்திரையைக் குத்துவது, அதையே தங்களுடைய இயக்கத் தொண்டர்களின் மனங்களில் ஆழமாக விதைப்பது, ஏதாவதொரு கட்டத்தில் அது வெளிப்பட்டு விபரீதமானதும், இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று நழுவுவதும்தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தொடர் செயல்பாடாக இருந்துவருகிறது.
இந்தக் கட்டுரையை எழுதிய கோபாலகிருஷ்ணன் பாஜக சார்பில் கேரள மாநிலத்திலிருந்து மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டவர் என்ற ஒரு தகவல் போதும் இந்தக் கட்டுரையின் பின்னுள்ள நோக்கங்களை அம்பலப்படுத்துவதற்கு.
ஆங்கிலேயர் ஏற்படுத்திய பிரச்சினைகளுடன், சாதி, மதரீதியான பிரச்சினைகள், வறுமை என்று சிதறுண்டு கிடந்த இந்தியாவை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்கு நேருவின் பங்கு மிக முக்கிய மானது. இந்தியாவின் பன்மைத்தன்மையை நேசிக்கும் நேரு போன்ற ஒருவர் அப்போது பிரதமராகியிருக்காவிட்டால் நாடு சிதறி சின்னாபின்னமாகியிருக்கும். நேருவின் வழிமுறைகளும் கொள்கை களும் இன்றைக்கும் இந்த நாட்டின் ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்கும் கவசமாகத் திகழ்வதை மறந்துவிடலாகாது. ஆர்எஸ்எஸ்ஸும் சரி கோபாலகிருஷ்ணன்களும் சரி காந்தி, நேரு போன்றவர்கள் மீது வெறுப்பைக் கக்கும் வகையில் இன்னும் எத்தனை கட்டுரைகளை வேண்டுமானாலும் எழுதட்டும். ஆனால், அவர்கள் இப்படியெல்லாம் எழுதுவதற்கான ஜனநாயக வெளியை ஏற்படுத்தியவர்கள் அந்தத் தலைவர்கள்தான் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.