

மருத்துவமனை கட்டுவதற்கென அரசிடமிருந்து பொதுநிலத்தை வாங்கிக்கொண்டு, ஏழைகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தவறிய ஐந்து பெரிய தனியார் மருத்துவமனைகள் ரூ.600 கோடியை இழப்பீட்டுத் தொகையாகச் செலுத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தனியார் மருத்துவமனைகள் கட்டிக்கொள்ள அரசுக்குச் சொந்தமான நிலங்களை நிபந்தனையுடன் தருவது வழக்கமாக இருக்கிறது. இவ்வாறு இடம் பெற்ற பெருநிறுவனங்கள், ஏழைகளுக்குப் புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் 25%, உள் நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் 10% பேருக்குச் சிகிச்சை தர வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால், பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் இந்த நிபந்தனையை அமல்படுத்துவதே இல்லை. எனவே, இந்த நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்கும் லாபத்திலிருந்து இந்த நஷ்டஈட்டைத் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
மருத்துவத் தொழில் என்பது சேவைத் துறையில் இடம்பெற்றிருப்பது. ஆனால், இந்தியாவில் மொத்த செலவினத்தில், மருத்துவத் துறையில் அரசின் செலவு வெறும் மூன்றில் ஒரு பங்குதான் என்றும், தனியாரின் பங்களிப்புதான் அதிகம் என்றும் உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. இது விரும்பத் தக்கதல்ல; அரசு மருத்துவத்துக்கான செலவை அதிகப்படுத்த வேண்டும். அரசிடம் போதிய நிதி இல்லை என்பது உண்மையாகவே இருந்தாலும், மக்களுடைய மருத்துவச் சிகிச்சைக்கு அதிகம் ஒதுக்க வேண்டும் என்ற முனைப்பு அரசுக்கு அவசியம் இருக்க வேண்டும்.
மருத்துவத்துக்காகச் செலவிடப்படும் தொகையில் 86% மக்களுடைய சொந்தப் பணம். எனவே, ஏழைகளில் ஒரு சிலருக்காவது இலவச சிகிச்சை செய்யும் எண்ணம் தனியார் மருத்துவமனைகளுக்கு - அதிலும் பெருநிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளுக்கு - இயல்பாகவே இருக்க வேண்டும். அப்படியான உணர்வு இல்லாத சூழலில் அதை உருவாக்குவது அரசின் கடமையாக மாறுகிறது.
அரசு நிலங்களையும் இதர சலுகைகளையும் பெற்று பெரிய மருத்துவமனைகளைக் கட்டும் தனியார் நிறுவனங்கள், ஏழைகளுக்குக் கட்டாயம் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறும் சட்டம் ஏதும் இதுவரை தேசிய அளவில் இயற்றப்படவில்லை.
டெல்லியில்கூட சட்டமாக இல்லாமல், நிலம் கொடுத்தபோது விதித்த நிபந்தனையைச் சுட்டிக்காட்டித்தான் இலவச சிகிச்சை வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு எங்கெல்லாம் நிபந்தனைகளுடன் நிலம் வழங்கப்பட்டதோ அங்கெல்லாம் ஏழைகளுக்கு அளிக்கப்படும் இலவச சிகிச்சைகளை அரசு அமைப்புகள் அவ்வப்போது தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும். 2007-ல் டெல்லி தனியார் மருத்துவமனைகளின் அலட்சியம் குறித்துப் பொதுநலன் கோரும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், மருத்துவமனைகளின் தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு விவரங்களையும் சிகிச்சை அளித்த நோயாளிகளின் பட்டியலையும் பெற்று விரிவாக ஆராய்ந்து, சிகிச்சை தரப்படாததைக் கண்டுபிடிக்க இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஏழைகள் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறுவதை உறுதி செய்யும் அதே சமயத்தில், அரசு வேறு சில நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். நாடு முழுவதும் மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் அது எளிதில் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். அத்துடன் மருந்து மாத்திரைகளுக்காகவும் அறுவைச் சிகிச்சைகளுக்காகவும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவும் ஆகும் செலவையும் கணிசமாகக் குறைக்க நடைமுறைகளை வகுக்க வேண்டும். எப்படியும் இந்நாட்டில் சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் ஒரு உயிர்கூடப் போகக் கூடாது எனும் நிலையை உருவாக்குவது ஆட்சியாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சபதம்!