

வெனிசுலாவின் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் அமைதியின்மை பெரும் கவலையை உருவாக்குகிறது. ஒருகாலத்தில் பொருளாதார மாற்றுக்கான நம்பிக்கைகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்ட நாடு, வெகு சீக்கிரம் பெரும் பொருளாதாரப் புயலில் சிக்கித் தத்தளிக்கிறது.
முன்பு பெட்ரோலிய எண்ணெய் விற்பனை மூலம் கிடைத்த வருமானம், வெனிசுலாவில் சமூகநலத் திட்டங்களை வரம்பின்றிச் செயல்படுத்த உதவியாக இருந்தது. இப்போதோ சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலையில் தொடர்ந்து ஏற்பட்ட சரிவால், வருமானம் குறைந்து கடுமையான வறுமையில் நாடு சிக்கியிருக்கிறது. அத்தியாவசியப் பண்டங்களுக்குக்கூடக் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. உணவு தானியங்கள், மருந்துகளின் விலை உச்சம் தொட்டிருக்கின்றன. எங்கும் மின்வெட்டு. நாடு அடிக்கடி இருளில் மூழ்குகிறது. இதன் காரணமாக அரசு அலுவலகங்கள் வாரத்துக்கு இரு நாட்களுக்கு மட்டுமே செயல்படுகின்றன. நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் குற்றங்கள் பெருகிவிட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாகப் போராட்டம் நடத்துகின்றனர்.
வெளிநாடுகளிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அரசு திண்டாடுகிறது. கடன் தவணை கட்டாமல் சர்வதேச அரங்கில் அவமானப்படக் கூடாது என்பதற்காக அத்தியாவசியப் பண்டங்களின் இறக்குமதிக்குக்கூட அரசு தடை விதித்துவிட்டது. “நாட்டுக்கு எதிராக ‘பொருளாதாரப் போர்’ தொடுக்கப்பட்டிருப்பதால் இப்படியாகிவிட்டது” என்கிறார் அதிபர் நிகோலஸ் மதுரோ. மக்களைக் கவர்ந்த தலைவர் ஹியூகோ சாவேஸால், தனக்குப் பிந்தைய அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மதுரோ. கடந்த டிசம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்குக் கிடைத்த வெற்றியால் உற்சாகமடைந்துள்ள எதிர்க்கட்சிகள், அதிபர் பதவியிலிருந்து மதுரோவை அகற்றியே தீருவது என்று தீவிரமாகச் செயல்படுகின்றன.
மதுரோவைப் பதவியிலிருந்து விலகக் கோரி 18.5 லட்சம் பேர் கையெழுத்திட்டிருக்கின்றனர். இந்தக் கையெழுத்துகள் மோசடியானவை என்று மதுரோ கூறுகிறார். எதிர்க்கட்சிகளோ “மதுரோவுக்கு உண்மையை எதிர்கொள்ளும் திராணி இல்லை” என்கின்றன. அதிபர் பதவியில் மதுரோ தொடரலாமா, வேண்டாமா என்ற கருத்தறியும் வாக்கெடுப்பை வரும் ஜனவரி மாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டவருமான ஹென்ரிக் கேப்ரைல்ஸ் வலியுறுத்தியிருக்கிறார். மக்கள் அக்கருத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் மதுரோ பதவி விலக வேண்டும், இப்போது துணை அதிபராக இருப்பவர் அதிபர் பதவியை 2019 வரையில் வகிக்க நேரும்.
இப்போதைய கேள்வி எல்லாம் இந்த அரசியல் நடைமுறைகள் தானாக நடந்து முடிகிற நிலையில் வெனிசுலா இருக்கிறதா என்பதுதான். காலமும் மக்களுடைய பொறுமையும் வேகமாகக் கரைகிறது. தன்னை வஞ்சிக்கப்பட்டவராகவோ, எதிரிகளின் இலக்குக்கு ஆளானவராகவோ காட்டிக்கொண்டு மதுரோவால் இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே நீடிக்க முடியும் என்று தெரியவில்லை.
அதிபருக்கு ஆதரவாக ராணுவமும், உச்ச நீதிமன்றமும் இருக்கின்றன. உள்நாட்டு, வெளிநாட்டு அச்சுறுத்தல்களைச் சமாளிக்க நெருக்கடிக் கால அதிகாரமும் அவரிடம் இருக்கிறது. அரசியல் பதற்றத்தைத் தணிக்க சர்வதேச சமரச முயற்சி எதையாவது மதுரோ நாட வேண்டும். உணவுப் பண்டங்கள், மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை உடனடியாகப் போக்க வேண்டும். இல்லையென்றால், சாவேஸ் ஒருபோதும் நினைத்திராத அவலங்கள் வெனிசுலாவை வந்து சேரக் கூடும்!