

இராக் பயங்கரவாத இயக்கங்களிடையே உறைந்திருக்கும் வன்மம், குரூரத்துக்குக் கொஞ்சமும் சளைத்தது அல்ல, தன்னிடம் உறைந்திருக்கும் வன்மமும் குரூரமும் என்று சொல்லாமல் சொல்கிறது இராக் அரசு. சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு நாளன்றுகூட மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கும் இராக், இந்த ஆண்டு இதுவரை 140 பேருக்கு மரணத்தைத் தந்திருக்கிறது. கடந்த ஆண்டில், 123 பேர். இந்த ஆண்டின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 40% அதிகம். இன்னும் 900 பேர் தண்டனை விதிக்கப்பட்டு, மரணத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள். இராக் அரசின் போக்கை விமர்சித்தால், காட்டுமிராண்டித்தனம் என்கிற வார்த்தைகூட மென்மையானதாகிவிடும் என்று தோன்றுகிறது.
இராக் ஆட்சியாளர்கள் மரண தண்டனையை நியாயப்படுத்த சொல்லும் முக்கியமான காரணம், பயங்கரவாதத்தை மரண தண்டனைகள் கட்டுப்படுத்தும் என்பது. இராக்கின் வாதம் அபத்தம் என்பதைத் தொடர்ந்து நிரூபிக்கின்றன அங்கு ஒவ்வொரு நாளும் நடக்கும் தாக்குதல்கள். ஐ.நா. சபையின் கணக்குப்படி இராக் குண்டுவெடிப்புகளில் கடந்த ஆண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,238. இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் மட்டும் இந்த எண்ணிக்கை 5,740. கடந்த மூன்று ஆண்டுகள் கணக்குடன் ஒப்பிட்டால், 2011 குண்டுவெடிப்பு மரணங்களைப் போல இரண்டு மடங்கு மரணங்களைக் கடந்த ஒன்பது மாதங்களிலேயே சந்தித்திருக்கிறது இராக்.
யதார்த்தம் இதுதான்: மனித வெடிகுண்டுகளாகச் செயல்படத் தயாராகக் காத்திருப்பவர்களை மரண தண்டனை எந்த அளவுக்கு அச்சுறுத்திவிடும்?
இராக் அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். ‘வரைமுறை இல்லாமல், ஒரே சமயத்தில் டசன் கணக்கில் மரண தண்டனைகளை நிறைவேற்றுவதைப் பார்க்கும்போது, இராக்கின் நீதித் துறை எவ்வளவு புரையோடிப்போயிருக்கிறது என்பதை உணர முடிகிறது’ என்கிறது நவநீதம் பிள்ளையின் அறிக்கை. மனித உரிமைகள் ஆணையம் இராக்குக்கு எதிராகப் பேசுவது இது முதல் முறை அல்ல. கொடும் சட்டங்கள், பலவீனமான நீதிமுறை, தரம் தாழ்ந்த விசாரணைகள், துன்புறுத்திப் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து இராக் அரசை விமர்சித்துவருகிறது மனித உரிமைகள் ஆணையம். மேலும், இராக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பல குற்றவாளிகளின் மீதான குற்றச்சாட்டுகள், பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படும் ‘மிகக் கடுமையான குற்றம்’ என்ற வரையறைக்குள்கூட வராதவை என்பதும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், தன் குரூரச் செயல்பாடுகளை எந்தச் சலனமும் இல்லாமல் தொடர்கிறது இராக் அரசு.
பயங்கரவாதிகள் கையில் துப்பாக்கிகளும் குண்டுகளும் இருக்கின்றன - கொல்கிறார்கள்; அரசாங்கத்தின் கையில் சட்டமும் தூக்குக்கயிறும் இருக்கின்றன - கொல்கிறது. இரண்டுக்கும் என்ன வேறுபாடு?