கடவுச்சீட்டுக்கான விதிகள் சீர்திருத்தம் வரவேற்புக்குரியது!

கடவுச்சீட்டுக்கான விதிகள் சீர்திருத்தம் வரவேற்புக்குரியது!
Updated on
1 min read

கடவுச்சீட்டு வழங்குவதற்கான நிபந்தனைகள் பலவற்றை நீக்கி, விதிகளைத் தளர்த்தி, நல்ல முற்போக்கான மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவந்திருப்பது வரவேற்புக்குரியது. இந்தச் சீர்திருத்தங்கள் எப்போதோ செய்யப்பட்டிருக்க வேண்டும். கடவுச்சீட்டு பெறுவதற்காக விண்ணப்பிக்கும் மனுதாரர் மேற்கொள்ள வேண்டிய அலைச்சலான பல நடைமுறைகள் இப்போது நீக்கப்பட்டிருக்கின்றன.

கடவுச்சீட்டு கேட்டு மனு அளிப்பவர் இன்னொருவரின் பெயர் அல்லது முகவரியைக் கொடுத்து ஆள்மாறாட்டம் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே, முன்பெல்லாம் பல்வேறு நடை முறைகள் பின்பற்றப்பட்டன. இப்போது 'ஆதார்' அட்டையின் வருகைக்குப் பின், நிறையச் சங்கடங்கள் குறைக்கப் பட்டிருக்கின்றன. அதேபோல, குழந்தைகளைத் தன்னுடன் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல தாய் மனு அளித்தால், குழந்தையின் தந்தையிடமிருந்தும் சம்மதம் பெறும் வகையில் கையொப்பம் பெற வேண்டும் என்று பிடிவாதம் காட்டப்படும். இப்போது புதிய சீர்திருத்தத்தின்படி, தனித்து வாழும் கணவனோ, மனைவியோ குழந்தைக்குக் கடவுச்சீட்டு கேட்டு விண்ணப்பித்தால், அம்மா அல்லது அப்பா ஒருவரின் கையெழுத்து போதும் என்று விதி எளிதாக்கப்பட்டிருக்கிறது.

குழந்தைக்குக் கடவுச்சீட்டு கேட்டு விண்ணப்பித்தால், தாய் அல்லது தகப்பன் பெயரை மட்டும் எழுதினால் போதும். திருமணம் நடந்ததற்கான சான்றிதழ், மணவிலக்கு பெற்றதற்கான நீதிமன்ற ஆணையின் நகல் போன்றவை அளிக்கப்பட வேண்டும் என்ற விதியும் நீக்கப்பட்டுவிட்டது. கடவுச்சீட்டு கேட்டு விண்ணப்பிக்கும்போது சான்றுரை வழக்கறிஞர் அல்லது மாஜிஸ்திரேட் அதற்குச் சான்றொப்பம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்பட்டுவிட்டது. அளிக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மை என்று மனுதாரரே சுயமாகச் சான்றளித்துக்கொள்ளலாம் என்பதாக விதி எளிதாக்கப்பட்டுவிட்டது.

கடவுச்சீட்டு விண்ணப்பத்துடன் பிறப்புச் சான்றிதழை அளிக்க வேண்டும் என்ற பிரிவும் நீக்கப்பட்டிருப்பது முக்கியமான சீர்திருத்த நடவடிக்கையாகும். ஆதார் அடையாள அட்டை அல்லது வருமான வரித்துறை அளிக்கும் பான் அட்டை போன்றவையே போதும் என்று புதிய விதி கூறுகிறது. காரணம், இவ்விரண்டிலும் பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெற்றவர்கள் இல்லாத ஆதரவற்ற குழந்தைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் இனி தேவையில்லை. ஆதரவற்றோர் இல்லம் அல்லது குழந்தைகள் நல இல்லம் ஆகியவற்றின் நிர்வாகி குழந்தையின் பிறந்த நாள் குறித்து அளிக்கும் அறிவித்தலே சான்றாக ஏற்கப்படும். அதேபோல தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள் விஷயத்திலும் வெள்ளைத் தாளில் சுய அறிவித்தல் மூலம் வயதுச் சான்று வழங்கலாம். சாதுக்கள், சந்நியாசிகள் குடும்பங்களைத் துறந்து பிறப்புச் சான்று உள்ளிட்ட உலக பந்தங்களையும் துறந்துவிடுவதால், அவர்களுடைய பிறந்த தேதி குறித்து அவர்களுடைய குரு அல்லது வழிகாட்டிகள் அளிக்கும் சான்றை ஏற்கலாம் என்றும் அனுமதிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு எரிச்சலூட்டும் பல்வேறு விதிகளும் நிபந்தனைகளும் பெரும்பாலும் இப்போது நீக்கப்பட்டுள்ளது பாராட்டத் தக்கது. சீர்திருத்த நடவடிக்கை மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். தொடர வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in