

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் பெரும்பாலும் ஊகித்துவிடும்படியாகவும் சுவார சியம் இல்லாமலும்தான் இருந்துவருகிறது. 1969-ல் காங்கிரஸ் கட்சியின் ‘அதிகாரபூர்வ வேட்பாள’ராக நிறுத்தப்பட்ட நீலம் சஞ்சீவ ரெட்டியை, இந்திரா காந்தியின் ஆதரவுடன் போட்டியிட்ட வி.வி. கிரி தோற்கடித்த தேர்தலைத் தவிர! பொதுவாகவே எதிர்க் கட்சிகள் சார்பில் சம்பிரதாயத்துக்காகப் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதும், அவர் தோற்பதும்தான் வழக்கமாக நடந்துவருகிறது.
இந்நிலையில், ஜூலை 17-ல் நடைபெறும் தேர்தலில் நீண்டநாட்களுக்குப் பிறகு பரபரப்பான சூழல் உருவாகும் என்று தெரிகிறது. பாஜகவைப் பொறுத்தவரை அதிக வாக்குகள் கொண்ட கட்சி என்பதாலும் தோழமைக் கட்சிகளின் ஆதரவு இருப்பதாலும், அக்கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். தெலங்கானா ராஷ்டிர சமிதி, அதிமுக இரண்டுமே பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கத் தயார் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளன. பாஜக முன்னிறுத்தும் வேட்பாளர் ஏற்புடையவராக இருக்கும்பட்சத்தில் பிஜு ஜனதா தளம்கூட ஆதரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம், சர்ச்சைக்குரிய வேட்பாளர் நிறுத்தப்பட்டால் இந்த நிலைமை மாறும்.
2007 குடியரசுத் தலைவர் தேர்தலில், தங்களுடைய மாநிலத்தவர் என்பதால் பிரதிபா பாட்டீலை ஆதரித்து வாக்களித்தது பாஜகவின் நீண்ட காலத் தோழமைக் கட்சியான சிவசேனை. இப்போது சிவசேனையும் சிரோமணி அகாலி தளமும் பாஜகவின் செயல்களால் அதிருப்தி அடைந்துள்ளன. பாஜக நிறுத்தும் வேட்பாளரை ஏற்க முடியாவிட்டாலோ, காங்கிரஸ் கூட்டணி நிறுத்தும் வேட்பாளரை நிராகரிக்க முடியாவிட்டாலோ தங்களுடைய முடிவை அவை மாற்றிக்கொண்டுவிடும்.
வேட்பாளரை பாஜக முதலில் அறிவிக்கட்டும் என்று காத்திருக்கும் காங்கிரஸ், மறுபுறம் தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனையைத் தொடங்கிவிட்டது. திமுக, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆகியவற்றின் ஆதரவையும் பெற முடியும். காங்கிரஸ் தேர்வு செய்யும் வேட்பாளர் சிறந்தவராக இருந்தால் அதன் எல்லா தோழமைக் கட்சிகளும் ஆதரிக்கும். இல்லையென்றால் சில கட்சிகள் பாஜக நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.
தீவிர அரசியலில் இல்லாத, மக்களிடையே நன்கு அறிமுகமான, எல்லா கட்சிகளாலும் விரும்பப்படும் அளவுக்குத் தகுதியும் திறமையும் உள்ள ஒருவரை நிறுத்த காங்கிரஸ் திட்டமிடக்கூடும்.
இப்போதிருக்கும் நிலையைப் பார்த்தால் இருதரப்பும் கலந்து பேசி, கருத்தொற்றுமை அடிப்படையில் வேட்பாளரைத் தேர்வு செய்ய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அரசியல் கணக்குகள்தான் இந்தத் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கும் என்பதால் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது!