காவல் துறைக்கு மனித உரிமைகளைச் சொல்லிக்கொடுங்கள்!

காவல் துறைக்கு மனித உரிமைகளைச் சொல்லிக்கொடுங்கள்!
Updated on
1 min read

திருப்பூர், சாமளாபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் மதுக் கடைகளைத் திறப்பதை எதிர்த்துப் போராடியவர்கள் மீது போலீஸார் நடத்தியிருக்கும் கொடூரத் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் மீது ஈவிரக்கமற்ற வகையில் நடத்தப்பட்ட இந்தக் கண்மூடித்தனமான தாக்குதல், காணொலிப் பதிவுகளாகத் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ஒரு பெண்ணின் கன்னத்தில் ஓங்கி ஓங்கி அறையும் காட்சி நம்முடைய காவல் துறையினர் இன்று வன்முறையில் எவ்வளவு ஊறிப்போயிருக்கிறார்கள் என்பதற்கான சிறு உதாரணம். நியாயமான கோரிக்கையுடன் ஜனநாயக முறையில் போராடிய மக்கள் மீது அத்துமீறி நடத்தப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல் கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் மது விற்பனையை அரசே கையில் எடுத்துக்கொண்ட பிந்தைய இந்த 14 ஆண்டுகளில் மதுப் பழக்கம் ஒரு நோயாகவே இங்கு பரவியிருக்கிறது. குடிநோயின் விளைவாகப் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குடும்பங்கள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில், குடிக்கு எதிராகப் போராடுவதில் இயல்பாகவே பெண்கள் முன்னிற்கிறார்கள்.

நெடுஞ்சாலை அருகில் உள்ள மதுக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. படிப்படியாக மதுக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாக உறுதியளித்த தமிழக அரசு, இந்த உத்தரவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், நெடுஞ்சாலைப் பகுதிகளுக்குப் பதிலாக குடியிருப்புப் பகுதிகளில் மதுக் கடைகளைத் திறக்கும் முயற்சியில் அது இறங்கியிருப்பது, இந்த விஷயத்தில் இரட்டை அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதை அது மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.

அறவழியில் செல்லும் பொதுமக்களைத் தாக்கும் உரிமை போலீஸாருக்கு இல்லை. குறிப்பாக, போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை அப்புறப்படுத்தும் பணியிலோ, கட்டுப்படுத்தும் பணியிலோ பெண் போலீஸார்தான் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு சர்ச்சைக்குள்ளாகிவரும் தமிழகக் காவல் துறை, வழக்கம்போல இங்கும் மோசமான நிலையைக் கையாண்டிருக்கிறது. காவலர்களைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் அதிகாரியே இப்படியான அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது, காவல் துறை இன்னும் காலனியாதிக்க மனோபாவத்திலேயே உறைந்துபோயிருப்பதன் அடையாளமே அன்றி வேறில்லை.

போராட்டத்தை அடுத்து மதுக் கடையை அகற்றுவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். தாக்குதலில் ஈடுபட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபடுவோரை எப்படி அணுகுவது என்று தமிழகக் காவல் துறைக்கு உளவியல் ஆலோசனையும் பயிற்சியும் அளிக்க வேண்டும்.

குடியிருப்புப் பகுதிகளில் மதுக் கடைகளைத் திறக்கும் நடவடிக்கைகளை அரசு முற்றிலுமாகக் கைவிட வேண்டும். தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் உள்ள எல்லா மதுக் கடைகளையும் இழுத்து மூடுவதற்கான நடவடிக்கைகளை முழு மூச்சில் மேற்கொள்ள வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in