விஞ்சும் கேலிக்கூத்துகள்

விஞ்சும் கேலிக்கூத்துகள்
Updated on
1 min read

தெலங்கானா விவகாரத்தில் ஆரம்பக்கட்டக் கேலிக்கூத்துகளை இறுதிக்கட்டக் கேலிக்கூத்துகள் விஞ்சிவிட்டன. தனி தெலங்கானாவுக்கான போராட்டத்தை எதிர்கொள்வதில் அதன் ஆரம்பக்கட்டத்திலிருந்து காங்கிரஸ் தடுமாறியது. எனவே, ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு மசோதாவுக்கான வாக்கெடுப்பை மிக மோசமாக அது கையாண்டது ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் அல்ல. ஆந்திரத்தைப் பிரிப்பதில் உள்ள முக்கியமான பிரச்சினைகளில் கருத்துவேறுபாடுகள் தீர்க்கப்படுவதில் பெரும் தோல்விகள் ஏற்பட்டன. இவற்றோடு ஒப்பிடும்போது, மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியபோது நிலவிய குழப்பம், அமளி போன்றவையெல்லாம் பெரிய விஷயங்களே இல்லை. கூடவே, மேற்கண்ட மசோதா மக்களவையில் நிறைவேறும் தினத்தில் லோக்சபா தொலைக்காட்சி மக்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை நிறுத்திக்கொண்டது. தெலங்கானா விவகாரத்தின் இறுதிக்கட்ட விளையாட்டில் இதெல்லாம் ஒரு சிறிய விஷயம்தான். குட்டிக்கரணங்கள், அரசியல் உள்நோக்கம் உள்ள செயல்பாடுகள் போன்றவையெல்லாம் தெலங்கானா விவகாரத்தின் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸின் செயல்திட்டங்களாக இருந்தன. தேர்தல்களை மனதில்கொண்டே காய்கள் நகர்த்தப்பட்டன. எல்லாவற்றையும் இறுதிக்கட்டத்துக்காக விட்டுவைத்ததே ஒரு ராஜ தந்திரம்தான். காலத்தையும் இழுத்தடிக்கலாம், நாடாளுமன்றத்தில் விவாதத்தையும் தவிர்த்துவிடலாம். அதற்காகத்தான் எல்லாம். கடந்த சில நாட்களாக தெலங்கானா மசோதாவை முன்வைத்து மக்களவையில் அரங்கேறிய வன்முறைக் காட்சிகளும், அதன் விளை வாக நாடாளுமன்றம் முடங்கியதும் காங்கிரஸ் கட்சி மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் தவறுகளின் உச்சக்கட்ட விளைவுகள்தான்.

இந்த மோசமான நிகழ்வுகளில், பா.ஜ.க-வின் மிரட்டல் அரசியலும் இரட்டை வேடமும் வெளிப்பட்டதற்கு வேண்டுமானால், காங்கிரஸ் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆந்திரத்தை இரண்டாகப் பிரிக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் தலையிடுவதற்கு முன்பிருந்தே பா.ஜ.க. தெலங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. ஆனால், கடைசியில் காங்கிரஸுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காக இந்த விவகாரத்தில் இரட்டை நாக்குடன் பேச ஆரம்பித்தது. பா.ஜ.க-வை இக்கட்டான நிலைக்கு காங்கிரஸ் தள்ளியதும் பா.ஜ.க. வேறு வழியின்றி மசோதாவுக்கு ஆதரவளித்தது. இரண்டு கட்சிகளும் ஒன்றுக்கொன்று தங்கள் உள்நோக்கங்களை நன்கு அறிந்தவை. மசோதா நிறைவேறவில்லை என்றால், அடுத்த கட்சியின் மீது பழியைப் போட்டுவிடலாம் என்பதுதான் அந்த உள்நோக்கம்.

இறுதியில், பா.ஜ.க. பணிந்தது. மசோதா நிறைவேறாதபட்சத்தில் தனி தெலங்கானா, சீமாந்திரா ஆகிய இரு தரப்பு ஆதரவாளர்களிடமிருந்து காங்கிரஸைத் தனிமைப்படுத்திவிடலாம் என்று ஆந்திரத்தில் ஆதிக்கம் இல்லாத பா.ஜ.க. கணக்குப் போட்டிருந்தது. ஆனால், அப்படி மசோதா நிறைவேறாதபட்சத்தில் பா.ஜ.க-வின் இரட்டை வேடத்தால்தான் மசோதா நிறைவேறவில்லை என்று காங்கிரஸ் பழிபோட்டுவிடும் என்றும் பா.ஜ.க. அஞ்சியது. இறுதியில், மசோதா நிறைவேறாததற்கு அடுத்த கட்சிகளின் மீது பழியைப் போடுவதைவிட மசோதா நிறைவேறியதற்கான பெருமையைப் பங்குபோட்டுக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு இரு கட்சிகளும் வந்தன. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறுவதில் இரு கட்சிகளும் எந்த விதத்தில் கூட்டுசேர்ந்தாலும் அந்த சேர்க்கையின் விளைவாக கிடைக்கப்போவது தர்மசங்கடம் மட்டும்தான்.​

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in