Published : 02 Sep 2016 09:49 AM
Last Updated : 02 Sep 2016 09:49 AM

உயிர் காக்க வருபவரைக் காப்போம்!

இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித் திருப்பதற்கு முக்கியக் காரணம், காயமடைந்தவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் போவதுதான். 2015-ல் மட்டும் சாலை விபத்துகளில் 1,46,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கு உள்ளா னவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், அவர்களில் 50% பேரைக் காப்பாற்றியிருக்கலாம் என்கிறது 2006-ல் சட்ட கமிஷன் வெளியிட்ட அறிக்கை.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி வழங்குவதற்கும், அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கும், ஏன் மருத்துவமனை, காவல் நிலையங்களுக்குத் தொலைபேசி மூலம் தகவல் தருவதற்குக்கூடப் பலர் தயங்குவதற்குக் காரணம், போலீஸ் விசாரணையில் சிக்கி, சங்கடப்பட நேரிடுமோ என்ற அச்சம்தான். மேலும், சட்ட நடைமுறைகளால் தங்களுக்குத் தொந்தரவு ஏற்படும் என்றும் பலர் பயப்படுகிறார்கள். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் பலருக்கு உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்காமல் போவதற்கு இது காரணமாக அமைந்துவிடுகிறது. விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவுபவர்களுக்குச் சட்டரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது இதற்காகத்தான்.

விபத்துகளின்போது உதவ முன்வருபவர்களைக் காப்பது தொடர்பாக நாடாளுமன்றம் இதுவரை எந்த ஒரு சட்டத்தையும் இயற்றவில்லை. எனினும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, பல தன்னார்வ அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, விபத்துகளின்போது உதவுபவர்களைக் காப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்தது. இவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, இதில் ஒரு முக்கியமான பிரிவை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் சேர்த்திருக்கிறது. அதன்படி, உதவ முன்வருபவர் அளிக்கும் வாக்குமூலம் சட்டபூர்வமான சாட்சியமாக எடுத்துக்கொள்ளப்படும். சாட்சியம் தேவைப்படும்பட்சத்தில், அது ஒரே தடவை நடத்தப்படும் ஆய்வின் மூலம் பதிவுசெய்யப்பட வேண்டும். சாட்சிகளாக முன்வர விரும்புபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அவர்கள் தங்களது சொந்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றோ, சாட்சியாக இருக்க வேண்டும் என்றோ போலீஸார் வற்புறுத்தக் கூடாது.

காயமடைந்தவர்களை அழைத்துவருபவர்களை மருத்துவமனைகள் நீண்ட நேரம் காக்கவைக்கக் கூடாது என்றும் காயமடைந்தவர்களைச் சிகிச்சைக்காக அனுமதிப்பதற்கோ அல்லது பதிவுசெய்வதற்கோ பணம் செலுத்த வேண்டும் என்று அவர்களை அழைத்து வருபவர்களிடம் வற்புறுத்தக் கூடாது என்றும், பெயர், முகவரி போன்ற அடிப்படை விவரங்களைத் தாண்டி சங்கடப்படுத்தும் கேள்விகளை அவர்களிடம் கேட்கக் கூடாது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது.

இதுபோன்ற வழிகாட்டு நெறிமுறைகளும், எளிமைப்படுத்தப்பட்ட நடை முறைகளும் வரவேற்கத் தக்கவைதான். இருப்பினும், இதுவரை, சில மாநிலங்கள்தான் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத் தியிருக்கின்றன. எல்லா மாநிலங்களும் இவற்றை அமல்படுத்த வேண்டும்.

அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த காவல் துறையினர், மருத்துவர்கள், போக்கு வரத்துத் துறை அதிகாரிகள், நீதிபதிகள் என்று விபத்துகள் தொடர்பான நடைமுறைகளுடன் தொடர்புள்ளவர்களை இந்த வழிகாட்டு நெறிமுறையின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பது அந்த நோக்கத்தில்தான். சக மனிதர் மீதான பரிவுடனும், பொறுப்புடனும் உதவ முன்வருபவர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே எல்லாமே எளிதாய் நிறைவேறும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x