தலைமை மாற்றம்தான் தீர்வா?

தலைமை மாற்றம்தான் தீர்வா?
Updated on
2 min read

குஜராத்தின் புதிய முதல்வராக விஜய் ரூபாணி பதவியேற்றுவிட்டார். முதல்வராகப் பதவியேற்கும் வாய்ப்பு வந்தபோதிலும் அதை மறுதலித்துவிட்டார் அமித் ஷா. மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியின் தேசியத் தலைவர் என்ற முறையில், ஒரு மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்பது அரசியல்ரீதியான பின்னடைவு என்று அவர் கருதுவதில் ஆச்சரியமில்லை. அதேசமயம், தன்னுடைய ஆதரவாளரை அப்பதவியில் அமர்த்துவதற்குக் கிடைத்த இந்த வாய்ப்பை அவர் தவறவிடவில்லை. தனக்கு விசுவாசமானவரான விஜய் ரூபாணியை அமித் ஷா தேர்வுசெய்தது, கட்சியின் எல்லா மட்டங்களிலும் அவரது ஆதிக்கம் நிலவுவதையும், குஜராத் தொடர்பாக முடிவெடுப்பதில்கூட பிரதமர் நரேந்திர மோடியிடம் அவருக்கு செல்வாக்கு இருப்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.

அமித் ஷாவைப் போலவே விஜய் ரூபாணிக்கும் அரசு நிர்வாகத்தைவிடக் கட்சி நிர்வாகத்தில்தான் கூடுதல் அனுபவம் இருக்கிறது. முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றுள்ள ரூபாணி, முதல்வருக்கான போட்டியில் நிதின் படேலை முந்திவிட்டார். துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள நிதின் படேல் குஜராத்தின் ஆதிக்க சாதியான படேல் சமூகத்தைச் சேர்ந்தவர். ரூபாணியோடு இணைந்து நிதின் படேல் இணக்கமாகச் செயல்படுவாரா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

அமித் ஷா தனது அரசியல் உத்திகளை நிறைவேற்றக்கூடியவர்களையே குஜராத் அரசாங்கத்தில் வைத்திருக்க விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இவ்விஷயத்தில் முடிவெடுக்கும் பொறுப்பை அமித் ஷாவிடமே மோடி முழுமையாக ஒப்படைத்ததுதான் ஆச்சரியம். ஆனந்திபென்னை முதல்வராகத் தேர்வுசெய்தது மோடிதான். ஆனால், ஆனந்திபென் தலைமையிலான குஜராத் அரசு சரியாகச் செயல்படாததால், இந்த முறை அமித் ஷாவே புதிய முதல்வரைத் தேர்வுசெய்யட்டும் என்று அவர் நினைத்திருக்கலாம்.

இடஒதுக்கீடு கோரிய படேல் சமூகத்தினரின் போராட்டம் பாஜகவின் வாக்குவங்கியைச் சேதப்படுத்தியிருக்கிறது. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் படேல் சாதியினரின் வாக்குகள் முழுவதையும் பெறுவது சிரமம் என்று கட்சித் தலைமை நினைக்கிறது. இந்நிலையில், படேல் சமூகத்தைச் சேர்ந்த ஆனந்திபென்னுக்குப் பதிலாக, அதே சமூகத்தைச் சேர்ந்த இன்னொருவரை முதல்வராக்குவது சரியான முடிவாக மோடிக்கோ அமித் ஷாவுக்கோ தோன்றியிருக்காது. ஒரு குறிப்பிட்ட சாதிக்கு அதிக முக்கியத்துவம் தருவது நல்லதல்ல என்றும் அக்கட்சி நினைத்திருக்கலாம்.

கட்சிக்குள் சரிசெய்ய வேண்டிய பிரச்சினைகள் குஜராத்தில் பாஜகவுக்கு நிறைய உள்ளன. முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் வெளியில் சொல்லிக்கொண்டதைப் போல தானே முன்வந்து பதவி விலகிவிடவில்லை. குஜராத்தில் உருவாகியுள்ள பிரச்சினைகளும் மோடி, அமித் ஷாவிடமிருந்து வந்த நெருக்குதல்களும்தான் அவரை அந்த முடிவை நோக்கித் தள்ளின. அவருக்கு 75 வயது ஆகிறது என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால், 2014-ல் மோடி அவரிடம் ஆட்சியை ஒப்படைத்தபோது அவர் மீது இருந்த எதிர்பார்ப்பு இப்போது மாறிவிட்டது என்பதுதான் உண்மை. படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டத்தை அவர் கையாண்ட விதமும், தலித் மக்கள் நடத்திவரும் போராட்டமும், ஆட்சியை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மோடி-அமித் ஷாவிடம் விதைத்துவிட்டன.

தலைமை மாற்றம் குஜராத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்பது ஒரு நம்பிக்கைதான். ஆனால், குஜராத்தில் பாஜகவுக்கு உருவாகியுள்ள பிரச்சினைகள் வெறும் தலைமை மாற்றத்தால் மட்டும் சரிசெய்யக்கூடியவை அல்ல என்பதுதான் நிதர்சனம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in