

சோமாலியாவிலும் லிபியாவிலும் ஒரே சமயத்தில் இரு முக்கியத் தாக்குதல்களை நடத்திவிட்டு, சேதமின்றித் திரும்பியிருக்கின்றன அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப் படைகள். சோமாலியத் தாக்குதல் கென்ய வணிக வளாகத்தில் கடந்த மாதம் அல்-ஷபாப் நடத்திய தாக்குதலுக்குத் தலைமை வகித்த இக்ரிமா முகம்மதுவைக் குறிவைத்து நடத்தப்பட்டது. அவர் பதுங்கியிருந்த வீட்டை நோக்கி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், அல்-ஷபாப் இயக்கத்தினருக்குக் கணிசமான சேதம் ஏற்பட்டிருக்கிறது. எனினும், இக்ரிமா முகம்மதுவின் நிலை என்னவென்பது தெரியவில்லை. லிபியத் தாக்குதல், 1998-ல் தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்கத் தூதரகங்கள் தாக்கப்பட்டு, 220-க்கும் மேற்பட்டோர் கொல்லப்படக் காரணமாக இருந்த அபு ஆனாஸ் அல் லிபியைக் குறிவைத்து நடத்தப்பட்டது. அவர் உயிரோடு பிடிக்கப்பட்டிருக்கிறார்.
இந்தத் தாக்குதல் விவரங்களை வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி வழக்கம்போல் "உலகில் எங்கு பயங்கரவாதம் தலைதூக்கினாலும் அமெரிக்கா அதற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்" என்று கூறியிருக்கிறார்.
சோமாலியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு என்ற ஒன்று இல்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் அங்கு பெயரளவுக்காவது ஒரு நிர்வாகம் உருவாகியிருக்கிறது. சோமாலியாவும் கென்யாவும் அண்டை நாடுகள். அல்-ஷபாப் உள்ளிட்ட பயங்கரவாதிகளும் அகதிகளுமாக சோமாலியாவின் உள்நாட்டுக் கலவரம் கென்யாவையும் கடந்த பத்தாண்டுகளாகப் பாதித்துவருகிறது. தவிர, சோமாலியா இருக்கும் நிலையில் அல்-ஷபாப் போன்ற வலுவான ஓர் இயக்கத்தைத் தனியாக அது எதிர்கொள்ளவும் முடியாது. இத்தகைய சூழலில் கென்யா, உகாண்டா, எத்தியோப்பியா, புரூண்டி நாடுகளை உள்ளடக்கிய ஆப்பிரிக்க ஒன்றியப் படை சோமாலியாவில் முகாமிட்டிருக்கிறது. இந்தப் படைக்கான ஆயுதங்கள் உள்ளிட்ட எல்லா உதவிகளையும் அமெரிக்கா செய்கிறது. இந்தப் படையைப் பின்வாங்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் கென்யாவிலிருந்து தங்கள் கொடூரத் தாக்குதல்களைத் தொடங்கியிருக்கிறது அல்-ஷபாப்.
அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் பயங்கரவாதி களை ஒழிக்கப் பயன்படலாம். அவர்களுடைய உருவாக்கத்தைத் தடுக்க முடியாது. உண்மையில் பயங்கரவாத இயக்கங்கள் பெரிய நாடுகளாலேயே வளர்த்தெடுக்கப்படுகின்றன. நைல் நதி நீர் முழுக்கத் தனக்கு மட்டுமே வேண்டும் என்ற நோக்கில் எத்தியோப்பியாவில் குழப்பம் ஏற்படுத்த எகிப்து அளித்த உதவிகளும்தானே அல்-ஷபாப் வளர்ச்சிக்குக் காரணம்? அமெரிக்கா உருவாக்கிய கலாச்சாரத்தின் நீட்சிதானே இது? இப்போதும்கூட அல்-ஷபாப்பின் ஆரம்ப வளர்ச்சிக்கு அமெரிக்க உளவுத் துறையின் நிதியும் உதவியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. காலங்காலமாக வல்லரசுகள் யுத்தம் நடத்துவது தாம் வளர்த்த தீமைகளின் நிழல்களோடுதான். நிழல்களை மட்டும் அழித்தல் சாத்தியம்தானா?