ஒரு சம்பவம் இரு பிரச்சினைகள்

ஒரு சம்பவம் இரு பிரச்சினைகள்
Updated on
1 min read

மென்பொருள் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை - அது தொடர்பாக நான்கு வெளிமாநிலத் தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம், தேசிய அளவில் நாம் எதிர்கொள்ளும் இரு பிரச்சினைகளை வெளிப்படுத்துகிறது.

முதலில் பெண்களின் பாதுகாப்பு. பணி நேரத்தின் வரையறைகள் முற்றிலும் மாறிவிட்ட தகவல் தொழில்நுட்பக் காலம் இது. ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் இரவு - பகல் வேறுபாடு இல்லாமல் பணிபுரிகிறார்கள். ஆனால், எவ்வளவு முன்னேறி விட்டோம் என்று கூறிக்கொண்டாலும், பெண்களின் பாதுகாப்பு நிலை கவலைக்குரியதாகவே இருக்கிறது.

உயிரிழந்த பெண் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர் என்பதால், பெரிதுபடுத்தப்படுகிறது என்று சொல்கிறார்கள். அப்படியல்ல. அரசாங்கம் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அளிக்கும் முக்கியத்துவம் ஆகட்டும், தகவல் தொழில்நுட்பத் துறை பெண் ஊழியர்களுக்கு அளிக்கும் இடம் ஆகட்டும், ஏனைய துறைகளைக் காட்டிலும் பெண்களுக்குப் பாதுகாப்பான பணிச் சூழல் அங்கு கிடைக்கிறது என்று நம்புகிறோம்.

ஆனால், அங்கேயே நம்முடைய பாதுகாப்பு இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது. எனில், இன்னும் படிப்படியாகக் கீழே இறங்கினால், சமூகத்தின் அடித்தளத்தில் யாராலும் பொருட்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்படும் துப்புரவுப் பெண் தொழிலாளர்களுக்கெல்லாம் என்ன பணிப் பாதுகாப்புச் சூழல் இருக்கிறது என்கிற கேள்வியை எழுப்புகிறது இந்தச் சம்பவம்.

இரண்டாவது, புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான கண்ணோட்டம். காவல் துறையினர் இந்தச் சம்பவத்தில் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி இருக்கின்றனர். குறிப்பாக, பணியாற்றிய இடத்துக்குக் கொஞ்ச தூரத்திலேயே உமாவின் சடலம் 10 நாட்களாகக் கிடந்தும்கூடக் காவல் துறைக்கு அது தெரியாமல் போனது காவல் துறையின் அலட்சியப் போக்கைத் தோலுரித்திருக்கிறது.

இத்தகைய சூழலில், இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று வெளி மாநிலத் தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பது மனித உரிமை ஆர்வலர்களின் விமர்சனங்களில் வெளிப்படும் சந்தேகத்தைப் பரிசீலிக்கவைக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் வங்கிக் கொள்ளைச் சம்பவங்கள் நடந்தபோது, காவல் துறையினர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாயினர். அப்போது கொள்ளையர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறை, கையோடு மாநிலம் எங்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களைக் காவல் நிலையங்களுக்கு வரச்சொல்லி, அடையாளப் பதிவு நடத்தியது.

மறுநாளே வேளச்சேரியில், ஐந்து வடகிழக்கு மாநில இளைஞர்களை என்கவுன்டரில் சுட்டுக்கொன்றது. வங்கிக் கொள்ளைப் புலனாய்வு விசாரணை இப்படித்தான் முடிந்தது. இப்போதும் அதன் தடங்கள் வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது.

பொருளாதாரச் சமனின்மையால் தொழிலாளர்கள் இடப்பெயர்வு என்பது உலகம் முழுவதுமே நடக்கிறது. ஆனால், இங்குதான் இப்படி இடம்பெயரும் தொழிலாளர்கள் பதிவுசெய்யப்படுவதும் இல்லை; அவர்களுக்கான உரிமைகள் தரப்படுவதும் இல்லை. தொழிலாளர் துறை மூலம் கையாளப்பட வேண்டியவர்கள் அவர்கள். மாறாக, காவல் துறையின் மூலம் கையாளப்படுவதும் அவர்கள் மீது குற்றக் கண்ணோட்டம் பரப்பப்படுவதும் மோசமான விளைவுகளேயே உருவாக்கும்.​

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in