

தமிழக விவசாயிகளைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது கோமாரி. கால்நடைகள் எதிர்கொள்ளும் உயிர்க்கொல்லி நோய் இது. கால்நடைகள் உணவை உட்கொள்ளாத நிலை, அசைபோடாமல் நிற்பது, அதிக தாகத்துக்குள்ளாகி எப்போதையும்விடத் தண்ணீர் அதிகம் குடித்தல், வாயிலிருந்து நுரை கலந்த நீர் ஒழுகுதல், வாயின் உட்பகுதி நாக்கு மற்றும் கால் குளம்புகளின் நடுப்பகுதி, மடி ஆகிய இடங்களில் கொப்புளங்கள் தென்படுதல் ஆகியவை கோமாரிக்கான அறிகுறிகள்.
எப்போதெல்லாம் அரசாங்கங்கள் கொஞ்சம் அலட்சியமாக இருக்கின்றனவோ அப்போதெல்லாம் கொள்ளைநோயாக மாறி, கொன்று குவித்திருக்கிறது கோமாரி. அமெரிக்கா 1914-ல் அசட்டையாக இருந்தபோது, கோமாரியால் 1.7 லட்சம் ஆடு மாடுகள், பன்றிகள் பாதிக்கப்பட்டன. 1924-ல் நோயைக் கட்டுப்படுத்த 1.09 லட்சம் பண்ணை விலங்குகள், 22,000 மான்களைக் கொன்றது அமெரிக்கா. இங்கிலாந்து 1967-ல் அசட்டையாக இருந்தபோது, 4.42 லட்சம் கால்நடைகள் கொல்லப்பட்டன. 1997-ல் தைவானும் 2005-ல் சீனாவும் 2010-ல் ஜப்பான், கொரியாவும் கோமாரியை எதிர்த்துப் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. தமிழகத்தில் 1960-களில் கோமாரி பெரும் தாக்குதல் நடத்தியிருக்கிறது. அதற்குப் பின் இப்போதுதான் பெரிய அளவில் அது தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோமாரி பரவினாலும் கிருஷ்ணகிரி மாவட்டமும் காவிரி டெல்டா மாவட்டங்களும் அதிக பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்திருக்கின்றன; ஆனால், அதிகாரிகள் அரசிடம் தவறான தகவலைச் சொல்லி மறைக்கிறார்கள்’’ என்கிறார்கள் விவசாயிகள். காவிரி மாவட்டங்களிலும் இதே கதைதான். ‘‘தரங்கம்பாடி வட்டம், கிடாரங்கொண்டானில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடு - கன்றுகள் பலியாகியிருக்கின்றன’’ என்கிறார்கள். மனிதர்களின் மரணத்தையே அதிகாரிகள் எப்படி மறைப்பார்கள் என்பதை நமக்கு ‘டெங்கு அனுபவங்கள்’ சொல்லும். வாயில்லா ஜீவன்களின் மரண ஓலத்தை மறைத்துப் புதைப்பதா கடினம்?
தமிழக அரசு ஏற்கெனவே ‘கோமாரி நோய்த் தடுப்புத் திட்டம்’ மூலம் களத்தில் இறங்கிவிட்டது; ஆனால், எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல. விவசாயிகள் செய்வதறியாது பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். மாடுகளின் நாக்கை அறுத்தல், அருகிலுள்ள ஏரி, குளங்களில் மணிக்கணக்கில் நிற்கவைத்தல் என்று காதுக்கு எட்டும் கைவைத்தியங்களில் இறங்குகின்றனர். கால்நடைகள் பலியாவதைக் கட்டுப்படுத்தும் சரியான சிகிச்சை, மருந்துகள் பற்றிய விவரம் விவசாயிகள் இடையே பிரச்சாரங்கள் மூலம் கொண்டுசெல்லப்பட வேண்டும். வட்டங்கள்தோறும் 24 மணிநேர நோய்க் கட்டுப்பாட்டு மையங்களைத் திறக்க வேண்டும். கால்நடைகள் இறப்பு எண்ணிக்கை மறைக்கப்படாமலிருக்க, ‘ஊராட்சிக் கால்நடைகள் இறப்புப் பதிவு முறை’ நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இறக்கும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட வேண்டிய நேரம் இது; அதாவது மழை, முழு வேகம் எடுக்கும் முன்!