Published : 19 Aug 2016 08:51 AM
Last Updated : 19 Aug 2016 08:51 AM

நாமும் அவர்கள் ஆக வேண்டியதில்லை!

நாட்டின் 70-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை உள்நாட்டுக்கு இணையாக இம்முறை சர்வதேச கவனத்தையும் பெற்றிருக்கிறது. பிரதமர் மோடி நிகழ்த்தும் மூன்றாவது சுதந்திர தின உரை இது. தன்னை ஒரு பேச்சாளராக மட்டுமல்லாமல், தேர்ந்த நிர்வாகியாகவும் காட்டிக்கொள்ளும் வழக்கமான அஸ்திரத்தையே இம்முறையும் அவர் தேர்ந்தெடுத்தார். வழக்கம்போல, தன் அரசு ஆற்றிவரும் பணிகளை அவர் நீளமாகப் பட்டியலிட்டார். மோடியின் முதலாவது ஆண்டு உரை நிலையான, ஆக்கபூர்வமான மாற்றத்தை மையப்படுத்தி அமைந்திருந்தது. இரண்டாவது ஆண்டு உரை, சமூகப் பிளவுகளை எதிர்கொள்வதற்கான தீர்வாக வளர்ச்சி முழக்கத்தை மையப்படுத்தி அமைந்திருந்தது. இந்த ஆண்டு உரையோ இந்திய வெளியுறவுக் கொள்கையின் போக்கில் நிகழும் மாற்றங்களை வெளிப்படுத்துவதை மையப்படுத்துவதுபோல அமைந்திருக்கிறது.

இந்த சுதந்திர தின உரையில், உள்நாட்டு விவகாரங்களைத் தாண்டி வெளிநாட்டு விவகாரங்களையும் தொட்டார் பிரதமர் மோடி. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாகக் கலவரங்கள் நீடித்துவரும் நிலையில், பலுசிஸ்தான் தொடர்பான தன்னுடைய சமீபத்தியப் பேச்சுக்கு பலுசிஸ்தானியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு நிலவியதைத் தன்னுடைய சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார் மோடி.

காஷ்மீர் கலவரச் சூழல், வன்முறைகளின் பின்னணியில் பாகிஸ் தான் மேற்கொண்டிருக்கும் வேலைகள் இந்திய மக்கள் அறியாதது அல்ல. சமீப காலமாக இஸ்லாமாபாத்திலிருந்து வரும் சமிக்ஞைகள் பற்றியெரியும் தீயில் மேலும் மேலும் எண்ணெயைக் கொட்டும் வகையிலேயே இருக்கின்றன. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், ஐநா சபைக்கு காஷ்மீர் விவகாரம் தொடர்பாகக் கடிதம் எழுதினார். காஷ்மீரில் இந்தியப் படைகளால் கொல்லப்பட்ட பிரிவினைவாதி புர்ஹான் வானியைத் தியாகி என்று அவருடைய அரசு வர்ணித்தது. புர்ஹான் வானியைக் கௌரவிக்க பாகிஸ்தான் அரசு துக்க நாள் அனுஷ்டித்தது. இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியான ஹபீஸ் சயீத் போன்றவர்கள் தம் மண்ணில் வசதியான இடத்தில் உட்கார்ந்துகொண்டு இந்தியாவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்த ஊக்குவித்தது. சார்க் மாநாட்டுக்குச் சென்ற இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவமதித்ததோடு, இந்த ஆண்டின் பாகிஸ்தான் சுதந்திர தினத்தை காஷ்மீருக்கு அர்ப்பணிப்பதாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரைப் பேசவிட்டு வேடிக்கை பார்த்தது இவையெல்லாமும் சேர்ந்து பிரதமரைச் சீண்டிவிட்டிருக்கலாம்.

ஒரு இந்தியப் பிரதமர் தன்னுடைய சுதந்திர தின உரையில், அந்நிய நாடு ஒன்றின் விவகாரத்தை நேரடியாக இப்படிக் குறிப்பிட்டுப் பேசுவது இதுவே முதல் முறை. காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்தும் பாகிஸ்தான் இதேபோன்று செயல்பட்டால், இந்தியாவும் பலுசிஸ்தான் விவகாரத்தில் அதுபோலவே செயல்பட முடியும் என்பதே பாகிஸ்தானுக்குப் பிரதமர் மோடி உணர்த்த விரும்பிய செய்தி என்பதுபோலத் தோன்றியது. காஷ்மீரிகளின் பிரிவினை முழக்கத்தை பாகிஸ்தான் சர்வதேச அளவில் பிரச்சினையாக்குவதுபோல, பலுசிஸ்தானியர்களின் பிரிவினை முழக்கத்தை இந்தியா சர்வதேச அளவில் பிரச்சினையாக்கும் உத்தி அடிப்படையில், காஷ்மீர் விவகாரத்தை நாம் அமைதியாகத் தீர்க்க எந்த அளவுக்கு உதவும் என்பதை யோசிக்க வேண்டும். இது போன்ற விவகாரங்களில் ‘நம்மாலும் முடியும்!’ என்று உணர்த்தும் வகையில் இப்படி வெளிப்படையாக முஷ்டி முறுக்குவது உளவியல்ரீதியில் எதிர்த் தரப்புக்குக் கொடுக்கப்படும் எச்சரிக்கை உத்திகளில் ஒன்றுதான் என்றாலும், பிரதமர் மோடி இந்த வகை உத்தியைத் தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

ராஜாங்கரீதியிலான சாதனைகள் பெருமளவில் பேச்சுவார்த்தை யிலும், பொதுத்தளத்தில் அமைதியிலும் நிகழ்த்தக் கூடியவை. இப்படி யான முஷ்டி முறுக்கல்கள் இரு தரப்புகளுக்கு இடையேயான பதற் றத்தை மேலும் அதிகரிக்கச் செய்வதோடு, வெறுப்பையும் விதைக்கும். மேலும், பாகிஸ்தானைப் போன்ற ஒரு நாட்டில், சுயநல அரசியல் அறுவடைக்காக இந்திய வெறுப்பை வளர்த்தெடுக்கும் உள்நாட்டுக் கசப்புச் சக்திகளுக்கு இது போன்ற நகர்வுகள் மேலும் தீனி போடும். பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தம்முடைய முன்னோடிகளான வாஜ்பாய், மன்மோகன் சிங் இருவரின் அணுகுமுறைகளையும் கொஞ்சம் நினைவுகூர்தல் நல்லது. எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுவதும் ஏனைய இடங்களில் அமைதி காப்பதுமே உயரிய ராஜதந்திரம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x