

ஒருவழியாக டெல்லி முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால். கேஜ்ரிவாலுடன் மணீஷ் சிசோடியா, சோம்நாத் பாரதி, சத்யேந்திர குமார் ஜெயின், ராக்கி பிர்லா, கிரீஷ் சோனி, சௌரவ் பரத்வாஜ் ஆகியோரும் அமைச்சரவையில் அமர்கின்றனர்.
அரசியல் நாடகங்களுக்கு முடிவில்லைதான். சொன்னபடி, ஆம்ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தாலும், முதலில், “ஆம்ஆத்மி ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு” என்று சொன்ன காங்கிரஸ், இப்போது “பிரச்சினைகளின் அடிப்படையிலேயே ஆதரவு” என்கிறது. “முந்தைய அரசின் ஊழல்கள் விசாரிக்கப்படும்” என்கிற கேஜ்ரிவாலின் அறிவிப்பும் காங்கிரஸைப் பதற்றத்தில் தள்ளியிருக்கிறது.
“ஆம் ஆத்மி - காங்கிரஸ் உறவை அரசியல் கூட்டணியாகக் கருத முடியாது. தேர்தல் வாக்குறுதிகளில் பல்வேறு கனவுத் திட்டங்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. அவற்றால் ஈர்க்கப்பட்டு மக்கள் அக்கட்சிக்கு வாக்களித்துள்ளனர். அத்திட்டங்கள் நிறைவேறினால் டெல்லிக்கு நல்லது என்றே காங்கிரஸும் கருதுகிறது. அதனால், நல்லெண்ணத்தின் அடிப்படையில் காங்கிரஸ் ஆதரவு தருகிறது. இந்த ஆதரவு, பிரச்சினை அடிப்படையிலானது மட்டுமே என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த விரும்புகிறது” என்கிறார் சந்தீப் தீட்சித்.
“ஆம் ஆத்மி கட்சிக்குக் கண்மூடித்தனமாக காங்கிரஸ் ஆதரவு கொடுக்காது” என்கிறார் ஜெயராம் ரமேஷ்.
“ஊழலுக்கு எதிராகப் போராடுவது எந்தவொரு முதல்வருக்கும் கடமைதான். ஆனால், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் யாரேனும் ஈடுபட்டால், அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்” என்று கூறியிருக்கிறார் அர்விந்தர் சிங் லவ்லி.
கேஜ்ரிவாலும் அசரவில்லை. “காங்கிரஸ் ஓர் ஊழல் கட்சிதான். அதனுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. அவர்களது ஆதரவோடு ஆட்சி அமைக்கிறோம். டெல்லியில் இன்னோர் உடனடித் தேர்தலைத் தவிர்க்கும் முயற்சி இது. ஒரு வேளை காங்கிரஸ் எங்களுக்கு அளித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டால், அவர்கள்தான் வில்லன்கள் ஆவார்கள்” என்று கூறியிருக்கிறார்.
இவ்வளவுக்கு இடையிலும், தன் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளாமல், பெரும்பான்மை மக்களின் எண்ணப்படி, காங்கிரஸ் ஆதரவோடு ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பது வரவேற்கத்தக்கது. “ஆடம்பர பங்களாக்கள் வேண்டாம்; படாடோபமான வாகன அணிவகுப்புகள், தடபுடல் பாதுகாப்பு ஏற்பாடுகள் வேண்டாம்” என்கிற கேஜ்ரிவாலின் எளிமை அறிவிப்புகள் கவனம் ஈர்க்கின்றன. நல்லெண்ணத்தையும் நன்னம்பிக்கையையும் தோற்றுவிக்கின்றன. அதேசமயம், இந்த எதிர்பார்ப்பே கேஜ்ரிவால் எதிர்கொள்ளும் பெரும் சவால். அவரே முன்பு சொன்னதுபோல, “ஆம்ஆத்மி சின்ன தவறு செய்தாலும் அது வரலாற்றுத் தவறாக அமையும்.”
ஒருவகையில் காங்கிரஸும் இந்த ஆதரவின் மூலம் புலி வாலைப் பிடித்திருக்கிறது. இந்த ஆட்சி மோசமாக இருந்தாலும், ஆட்சியைத் தொடர முடியாமல் கவிழ்ந்தாலும் அதன் முழுப் பழியும் காங்கிரஸ் மீதே விழும். எனவே, சோதனை ஆம்ஆத்மி கட்சிக்கு மட்டும் அல்ல; காங்கிரஸுக்கும் சேர்த்தேதான்.