பாகிஸ்தான் சொல்ல வரும்சேதி என்ன?

பாகிஸ்தான் சொல்ல வரும்சேதி என்ன?
Updated on
1 min read

மும்பை குண்டுவெடிப்புத் தாக்குதலுடன் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மீது பாகிஸ்தான் அரசு மேற்கொண்டிருக்கும் பல நடவடிக்கைகள், இந்தியா பாகிஸ்தான் இடையிலான பிரச்சினையில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஐநா பாதுகாப்பு ஆணையத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இருக்கும் ஹபீஸ் சயீத், கடந்த இரண்டு வாரங்களாக, தடுப்புக் காவலிலும் வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டிருக்கிறார். அவருடன் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஒரு பிரிவான ஜமாத் - உத் - தாவாவைச் சேர்ந்த நான்கு பேர் மீதும் இதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஐந்து பேரும் ‘வெளிநாட்டுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டோர்’ பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் அந்நாட்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஹபீஸ் சயீத் வைக்கப்பட்டார். அத்துடன், ஹபீஸ் சயீதுக்கும் மற்றவர்களுக்கும் வழங்கப்பட்டிருந்த ஆயுத உரிமங்கள் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன. ஹபீஸ் சயீத் காவலில் வைக்கப்பட்டதை முழுமையாக ஆதரித்திருக்கும் பாகிஸ்தான் ராணுவம், ‘தேச நலன் சார்ந்த ஒரு கொள்கை முடிவு’ என்று அதைக் குறிப்பிட்டிருக்கிறது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்தியாவும் ஓரளவு வரவேற்றிருக்கிறது; ‘தர்க்கபூர்வமான முதல் நடவடிக்கை’ என்று குறிப்பிட்டிருக்கிறது என்றாலும், பாகிஸ்தானின் இந்நகர்வுகளை எந்த அளவுக்கு நம்பகத்தன்மையோடு பார்ப்பது என்று தெரியவில்லை. ஏனென்றால், ஹபீஸ் சயீத் மீதான இந்த நடவடிக்கை புதிய முயற்சியோ, தீவிரமான நடவடிக்கையோ அல்ல. 2001 முதல் குறைந்தபட்சம் ஐந்து முறை அவர் காவலில் வைக்கப்படுவதும், பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுவதுமாக இருக்கிறார்.

அத்துடன், மும்பை குண்டுவெடிப்புத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் அவர் கைதுசெய்யப்பட்டபோது, முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. கைதுக்கான காரணமும் சொல்லப்பட்டது. இந்த முறை அப்படி எதுவும் நடக்கவில்லை. ஐநா பட்டியல் தொடர்பாக பாகிஸ்தான் நிஜமாகவே அக்கறை காட்டியிருந்தால், 2008-ல் ஹபீஸ் சயீதின் பெயரும், ஜமாத் - உத் - தாவா அமைப்பின் பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றபோதே இந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கும்.

இந்த வாரம் பாரிஸில் நடக்கவிருக்கும் நிதி அதிரடிப் பணிப் படை அதிகாரிகளின் கூட்டத்தில், பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதி திரட்டுதல் தொடர்பான அறிக்கையை அந்நாடு தாக்கல் செய்ய வேண்டிய சூழலில், ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையின் அர்த்தம் என்ன என்றும், அதன் மூலம் இந்தியாவுக்கு அது விடுக்கும் சேதி என்ன என்றும் உடனடியாகக் கணிக்க முடியவில்லை. என்றாலும், பாகிஸ்தானை உள்ளபடியே ஹபீஸ் சயீத் உள்ளிட்ட பயங்கரவாத மூளைகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கையை நோக்கித் தள்ளுவதற்கு இந்தியாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. சர்வதேச அழுத்தத்தை இந்தியா உருவாக்க வேண்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in