மீண்டுவரட்டும் லிபியா!

மீண்டுவரட்டும் லிபியா!

Published on

உள்நாட்டுப் போரில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் லிபியாவிலிருந்து நல்ல சமிக்ஞையொன்று வந்திருக்கிறது. ஐநாவின் ஆதரவுபெற்ற லிபிய அரசு அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முடிவெடுத்திருக்கிறது. லிபியாவின் திரிபோலியை மையமாகக் கொண்டு இயங்கும் அரசின் பிரதமர் ஃபயாஸ் அல்-சராஜ், ஐநாவின் உதவியுடன் தேசிய அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யலாம் என்று கூறியிருக்கிறார்.

2011-ல் லிபியாவின் அப்போதைய சர்வாதிகாரி முகம்மது கடாஃபிக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்த பிறகு, அந்நாடெங்கும் குழப்பம் நிலவ ஆரம்பித்தது. நேட்டோ படையினரின் ஊடுருவலால் அதிபர் பதவியிலிருந்து கடாஃபி தூக்கியெறியப்பட்டார். ஆனால், நான்கு தசாப்தங்களாக அவரால் ஆளப்பட்ட லிபியாவில் அதற்குப் பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை உள்நாட்டவர்களாலும் சரி, அந்நிய சக்திகளாலும் சரி நிரப்பவே முடியவில்லை. தற்போது லிபியாவில் இரண்டு அரசாங்கங்கள் உள்ளன. டப்ருக் அரசு லிபிய தேசிய ராணுவத்தின் ஆதரவு பெற்றது. திரிபோலியைத் தலைநகராகக் கொண்டு இயங்கும் அரசுக்கு சர்வதேச அங்கீகாரம் இருக்கிறது. பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராகத் தான் போரிடுவதாகவும், தன் தலைமையின் கீழ் லிபியாவை ஒருங்கிணைக்கப்போவதாகவும் ஹஃப்தார் கூறிக்கொள்கிறார். அல்-சராஜோ தன்னுடைய அரசுதான் சட்டபூர்வமானது என்கிறார்.

அல்-சராஜின் அரசைக் கவிழ்ப்பதற்காகத் தனது ராணுவத் துருப்புகளை திரிபோலி நோக்கி ஹஃப்தார் செலுத்தியதுதான் தற்போதைய பிரச்சினைக்குக் காரணம். திரிபோலி நகரத்துக்குக் கிழக்கிலும் தெற்கிலும் ஹஃப்தாரின் படைகள் போரிடுகின்றன, நகரத்துக்கு வெளியில் அரசுக்கு ஆதரவான படைகளால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். சர்வதேச நாடுகளின் வேண்டுகோள்களை மீறியும் இரண்டு தரப்புகளுமே போர்நிறுத்தம் செய்ய மறுத்துவந்தன. அமெரிக்கா, எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் ஹஃப்தாருக்கு ஆதரவாக இருக்கின்றன. துருக்கி, கட்டார் இரண்டும் திரிபோலி அரசை ஆதரிக்கின்றன. ஆட்சி மாற்றத்தால் ஏற்படும் போர்களால் ஒரு நாட்டில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு லிபியா ஓர் உதாரணம். இராக், லிபியா போன்ற நாடுகளில் ராணுவத்தால் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்தது வேண்டுமானால் எளிதாக இருந்திருக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு புதிய தேசத்தைக் கட்டமைப்பது எளிதல்ல; அது ராணுவ சக்தியைக் கொண்டு செய்யப்படக்கூடியதுமல்ல.

எண்ணெய் வளம் மிகுந்த லிபியாவில் ஊடுருவி, அங்குள்ள வெவ்வேறு ராணுவங்களுக்கு ஆதரவு வழங்கிவரும் அமெரிக்கா, பிரிட்டன், வளைகுடா நாடுகள் போன்றவை லிபியாவின் தற்போதைய பிரச்சினைக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம், தற்போதைக்காவது தங்களது குறுகலான புவியரசியல் நாட்டங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்தப் போரால் அங்கே கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் பயங்கரவாதக் குழுக்களை அடக்கியாண்டு, அந்நாட்டில் அமைதி ஏற்பட உதவ வேண்டும். இந்நிலையில் போர்நிறுத்தம் ஏற்பட்டு, அதை எல்லாத் தரப்புகளும் மதித்து நடந்தால் மட்டுமே பிரதமர் அல்-சராஜின் யோசனையானது ஒரு புதிய தொடக்கமாக அமையும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in