

பாங்காக் நகரில் சமீபத்தில் நடந்த பருவநிலை மாற்றம் பற்றிய ஐநா கட்டமைப்பு ஒப்பந்த மாநாட்டில், பசுங்குடில் வாயு வெளியேற்றம், இயற்கைப் பேரிடர்கள் உள்ளிட்ட பிரச்சினைகளில் ஏழை நாடுகளுக்கு உதவும் வகையில் விதிமுறைகளை உருவாக்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை ஏற்க ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மறுத்திருக்கும் நிலையில், பருவநிலை மாறுதலை எதிர்கொள்வதற்குத் தேவையான நிதியை வழங்குவதில் அமெரிக்கா உள்ளிட்ட சில வளர்ந்த நாடுகள் ஆர்வம்காட்ட மறுக்கின்றன.
பாரீஸ் ஒப்பந்தத்தின்படி வெள்ளம், புயல், வறட்சி உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களின்போது உதவ, வளரும் நாடுகளுக்காக
2020-ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலரைத் திரட்டும் பொறுப்பு பணக்கார நாடுகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
பருவநிலை மாறுதலின் கடும் விளைவுகளை எதிர்கொள்ளும் ஆபத்தான நிலையில் இருக்கும் நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், நிதி வழங்குவது பணக்கார நாடுகளின் கடமை. பருவநிலையில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான வளர்ச்சித் திட்டங்கள் மூலம், தங்கள் குடிமக்களின் மேம்பாட்டுக்குப் பணக்கார நாடுகள் உதவியிருக்கலாம். ஆனால், வளி மண்டலத்தில் கரியமில வாயு மிகக் கடுமையாக அதிகரிக்க அந்நாடுகளே முக்கியக் காரணம். இவ்விஷயத்தில், வளரும் நாடுகளுக்குத் தேவைப்படும் நிதி உதவி, தொழில்நுட்பங்களை வழங்க பணக்கார நாடுகளை நிர்ப்பந்திக்கும் வகையிலான விதிமுறைகள் உருவாக்கப்படுவதுதான் இன்றைய தேவை.
பசுங்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் விஷயத்தில் இந்தியா மீதும் சீனா மீதும் சர்வதேச அளவில் அழுத்தங்கள் நிலவுகின்றன. இவ்விஷயத்தில் இரு நாடுகளும் தங்கள் பொறுப்பை உணர்ந்தே செயல்படுகின்றன. 2010 ஆண்டுவாக்கில் இந்தியாவின் வருடாந்திரக் கரியமில வாயு வெளியேற்றத்தின் அளவு 2.136 மில்லியன் டன்னாக இருந்தது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பருவநிலை மாற்றம் பற்றிய ஐநா கட்டமைப்பு ஒப்பந்த மாநாட்டில் தெரிவித்த இந்தியா, 2005-2010 காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கரியமில வாயு வெளியேற்றத்தின் அளவு 12% குறைந்ததையும் சுட்டிக்காட்டியது. பாரீஸ் ஒப்பந்தத்தைப் பின்பற்றும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும், பருவநிலை விஷயத்தில் வளரும் நாடுகளை வழிநடத்தும் பொறுப்பும் இருக்கிறது.
மேற்கு அண்டார்டிகாவில் பனிப்பாறைப் படலம் உருகி, கடல் மட்டம் உயரும் அபாயம் உருவாகியிருப்பதை அறிவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 2 டிகிரி செல்சியஸ் உயர்வுகூட கிரீன்லாந்து பனிப்பாறைப் படலத்தைப் பலவீனமடையச் செய்யும் என்று கூறப்படுகிறது. உலக சராசரி வெப்பநிலையில் 1.5 டிகிரி செல்சியஸ் உயர்வதன் விளைவுகள் குறித்து, பருவநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கு இடையிலான குழு அக்டோபரில் வெளியிடவிருக்கும் அறிக்கை, இந்தப் பிரச்சினைகள் குறித்த ஆழமான புரிதலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேரழிவுகளைத் தவிர்க்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கத் தாங்கள் தயார் என்று காட்டும் வகையில் உலகத் தலைவர்கள் செயலாற்ற வேண்டிய தருணம் இது!