

தன்பாலின உறவாளர்களுக்கான உரிமையை அங்கீகரித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு. 2013-ல் சுரேஷ்குமார் கௌசல் வழக்கில் 2 நீதிபதிகளைக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்ற அமர்வால் வழங்கப்பட்ட தவறான தீர்ப்பு தற்போது சரிசெய்யப்பட்டிருக்கிறது. தாமதமாகக் கிடைத்த தீர்ப்பு எனினும் பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் முன்னோடித் தீர்ப்பு இது.
தன்பாலின உறவாளர்கள் தங்களுடைய விருப்பப்படி அந்தரங்க உறவுகொள்ளவும் தங்களுடைய அந்தரங்கத்தையும் கண்ணியத்தையும் பாதுகாத்துக்கொள்ளவும், அச்சமின்றி வாழவும் உரிமை படைத்தவர்கள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு எதிர்பாராதது அல்ல. முன்பு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தொடுத்த வழக்கில்தான் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 2013 தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியதை அடுத்து 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வின் பரிசீலனைக்கு ‘கௌசல் வழக்கு’ பரிந்துரைக்கப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் ‘அந்தரங்க உறவு’, ‘பாலியல் நாட்டம்’ தொடர்பாக அளிக்கப்பட்ட இரண்டு முக்கியத் தீர்ப்புகள், சமீபத்தியத் தீர்ப்புக்கான சட்ட அடிப்படையாக அமைந்தன. திருநங்கைகள்-திருநம்பிகள் உரிமைகள் தொடர்பான ‘தேசிய சட்ட சேவைகள் ஆணையம்’ (2014) வழக்கில் ‘பாலியல் நாட்டம்’, ‘பாலின அடையாளம்’ அடிப்படையில் பாரபட்சம் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. கே.எஸ்.புட்டசாமி (2017) அல்லது ‘அந்தரங்க வழக்கு’ விவகாரத்தில் 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ‘பாலியல் நாட்டம்’ தனியுரிமை சார்ந்தது, அரசியல் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டது என்று தீர்ப்பு வழங்கியது.
அரசியல் சட்டமானது மாறிவரும் சூழலுக்கேற்ற உயிர்ப்புள்ள ஆவணம், அது பல்வேறு உரிமைகளை முற்போக்காக உணர்ந்துகொள்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. அங்கீகரிக்கப்பட்ட சட்ட உரிமையைத் திரும்பப் பெற இயலாது என்ற சட்டக் கோட்பாட்டையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனிநபர் சுதந்திரம் என்பதின் எல்லை விரிவடைகிறது என்பதையும் பொதுக்கருத்துகளால் ஏற்பட்ட அழுத்தங்களிலிருந்து தனிநபர் உரிமைகள் பற்றிய சிந்தனைகள் விடுதலை பெற்றுள்ளன என்பதையும் எடுத்துக்காட்டும் வகையிலேயே மற்ற நீதிபதிகள் நால்வரது தீர்ப்புகளும் அமைந்துள்ளன.
முக்கியமாக, எல்ஜிபிடிகியூ சமூகத்தவரின் உரிமை, இத்தனை ஆண்டுகளாகக் குற்றச்செயலாகவே பார்க்கப்பட்டதால் வரலாறு அவர்களிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்று நீதிபதி இந்து மல்ஹோத்ரா வருத்தம்தோயக் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவு தளர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம். இந்தத் தீர்ப்பின் மூலம் பாலியல் சிறுபான்மையினர் தங்கள் உரிமைகளைக் காத்துக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.