

நாட்டின் 40% மக்களுக்கு கட்டணமற்ற மருத்துவ சிகிச்சை அளிக்க வகைசெய்யும் ‘ஆயுஷ்மான்’ மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார் பிரதமர் மோடி. ஏழை மக்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் திட்டமான இந்தத் திட்டம் வரவேற்புக்குரிய ஒன்று. எனினும், போதுமான அளவில் நிதி ஒதுக்காததும், அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தாததும், ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் பாஜக அரசு இதை அறிமுகப்படுத்தியிருப்பதும் பல கேள்விகளை எழுப்புகின்றன.
இத்திட்டத்தின்கீழ், சமூகப் பொருளாதார நிலைகளில் பின்தங்கியிருக்கும் 10.74 கோடிக் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. அக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வசதியளிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. ஆனால், நலிவுற்ற நிலையில் இருக்கும் மக்கள் குறிப்பிட்ட கால அளவுக்குள் மருத்துவக் காப்பீட்டு வசதியைப் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. நடப்பு ஆண்டில் இத்திட்டத்துக்கு வெறும் ரூ.2,000 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருக் கிறது. பெரும் எண்ணிக்கையிலான மக்களின் மருத்துவத் தேவைக்கு இந்தத் தொகை உத்தரவாதம் வழங்க முடியுமா எனும் கேள்வி இயல்பானது. சில மாநிலங்கள் இன்னும் இத்திட்டத்தின் கீழ் இணையாத நிலையில் இந்தத் திட்டம் எப்படி முழுப் பலனைத் தரும் என்பது இன்னொரு கேள்வி.
தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தி செலவைக் குறைத்து மருத்துவ சேவைக்கு உத்தரவாதம் கொடுக்க முடியும். ஆனால், இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மருத்துவ சிகிச்சைக்கும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டணங்களைப் பல மருத்துவமனைகள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. லாப நோக்கம் கொண்ட மருத்துவமனைகள், இந்தக் கட்டணங்கள் நடைமுறைக்குச் சாத்தியமில்லாதவை என்று ஒதுங்குகின்றன. பாஜக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், மாநில அரசுகளின் வாயிலாக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளை மருத்துவ நிறுவனங்கள் (பதிவு மற்றும் ஒழுங்குபடுத்தல்) சட்டம், 2010-ஐப் பயன்படுத்தி ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும். மருத்துவ வசதிகளைத் தரம் உயர்த்துவது பற்றியும் சிகிச்சைகளுக்கு நியாயமான கட்டணங்களை வசூலிப்பது பற்றியும் விரிவாகப் பேசும் சட்டம் அது. தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரிகள், அரசு மருத்துவமனைகளிலிருந்து சில அத்தியாவசியமான சிகிச்சைகளைப் பெற முடியும் என்று அறிவித்திருக்கிறார்கள். இது மக்களிடம் நம்பகத்தன்மையை உருவாக்குமா என்பதும் சந்தேகம்தான்.
அதிகக் கட்டணங்களை வசூலிக்கும் மருத்துவமனைகளைத் தவிர்த்துவிட்டு, நோய்த் தடுப்பு முறைகளிலும் ஆரம்ப சுகாதாரத்திலும் அரசு தீவிர கவனம் செலுத்துவது அவசியம். அரசு மருத்துவமனைகளின் வாயிலாகவே அனைவருக்கும் இலவச மருத்துவம் என்ற இலக்கை எட்ட முடியும். மக்களின் ஆரோக்கியம் மீது அக்கறை கொண்டிருக்கும் ஓர் அரசு செய்ய வேண்டியது அதைத்தான்!