

மக்களவைத் தேர்தலில் ஏக ஆர்ப்பாட்டமாகப் பேசப்பட்டுவந்த பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சியின் கூட்டணி, தேர்தல் தோல்வியின் தொடர்ச்சியாக முடிவுக்குவந்திருக்கிறது. நாட்டின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தின் இரு பெரும் கட்சிகளும் பாஜகவை எதிர்கொள்ளும் விதமாக அமைத்த இக்கூட்டணியின் மூலம் மாநிலத்திலுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் குறைந்தது 60 தொகுதிகளையேனும் கைப்பற்றலாம் என்று இரு தலைவர்களும் எதிர்பார்த்தனர்; வெறும் 15 தொகுதிகளோடு வெற்றி சுருங்கிவிட்ட நிலையில், கூட்டணியை இப்போது இரு தலைவர்களும் முறித்துக்கொண்டிருக்கின்றனர். அடுத்து வரவிருக்கும் 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தன்னுடைய கட்சி தனித்தே போட்டியிடும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்ததைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியும் அதே பாதையை வரித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் எப்போதும் கடுமையான போட்டிக் கட்சிகளாகத்தான் இருந்திருக்கின்றன. சமூகத் தளத்திலும் இந்த அரசியல் பகையுணர்வு இரு கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலும் ஊடுருவியிருந்தது. 2014 மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து, 2017 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக அபார வெற்றியைப் பெற்ற பிறகு, பாஜகவைக் கட்டுப்படுத்தும் வியூகமாக இரு கட்சிகளும் சேர்ந்து செயல்படும் முடிவை எடுத்தன; இவர்களுடன் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியும் சேர்ந்துகொண்டது.
2018-ல் நடந்த மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் இந்தக் கூட்டணியின் வேட்பாளர்கள் பாஜகவைத் தோற்கடித்தபோது கிடைத்த உற்சாகம் அடுத்து 2019 மக்களவைப் பொதுத் தேர்தலிலும் இதே கூட்டணியைத் தொடர்வதற்கான உத்வேகத்தை அவர்களுக்குத் தந்தது. ஆனால், வெறும் பாஜக எதிர்ப்பு கோஷம் மட்டுமே இந்த அரசியல் கூட்டணியை நெடுநாளைக்கு உயிர்ப்போடு வைத்திருக்கப் போதுமானதல்ல என்பதையோ, அரசியல் கூட்டணி அடுத்தகட்டத்துக்கு நகர அதற்கு ஒரு பொது இலக்கும் கனவும் தேவை என்பதையோ இத்தலைவர்கள் உணரவில்லை. குறைந்தபட்சம் தங்கள் கூட்டணியை எதிர்க்கட்சிகளின் ஒரே குடையாக்கும் தாராள மனம்கூட அவர்களிடம் இல்லை. வெறும் எண்ணிக்கை வேட்கை மட்டுமே அவர்களை வழிநடத்தியது.
நாடு முழுக்க மோடி அலை இந்தத் தேர்தலிலும் வீசியடித்த நிலையில், பாஜக முன்வைத்த கோஷங்களுக்கு மத்தியில் உத்தர பிரதேசத்திலும் மகா கூட்டணி கரைந்துபோனது. நல்ல தலைவர்கள் ‘மக்கள் ஏன் நிராகரித்தனர்?’ என்று யோசித்துப்பார்த்து தங்களை மேலும் பலப்படுத்திக்கொள்வார்கள். ஆனால், குறுகிய காலக் கணக்குகளோடு கூட்டணி அமைத்தவர்கள் தோல்வி தந்த வேகத்தில் கூட்டணியை உடைத்ததன் மூலம், கூட்டணி சம்பந்தமான மக்களின் நம்பகத்தன்மையையும் சேர்த்து உடைத்திருக்கிறார்கள். இம்முடிவு மக்கள் அவர்களை நிராகரித்ததற்கு நியாயம் சேர்ப்பதாகவே அமைந்திருக்கிறது.