Published : 14 Jun 2019 08:33 AM
Last Updated : 14 Jun 2019 08:33 AM

கட்சித்தாவல் தடைச் சட்டத்தில் சீர்திருத்தத்தைச் சுட்டும் தெலங்கானா விவகாரம்

தெலங்கானா சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஆறு மாதங்களுக்கு முன் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 உறுப்பினர்களில் 12 பேர் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதியில் சேர மன்றத் தலைவர் பி.சீனிவாச ரெட்டி அனுமதிப்பது நியாயமல்ல; கட்சித் தாவல் தடைச் சட்ட விதிகளின்படி இந்த முடிவு சரியே என்று வாதிடலாம்; தார்மிகரீதியில் இது நியாயப்படுத்தவே முடியாதது.

120 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் ஆளும்  தெலங்கானா ராஷ்டிர சமிதி ஏற்கெனவே தேர்தலில் 88 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் சூழலில், தெலுங்கு தேசம், அனைத்திந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரையும் ஒரு சுயேச்சை உறுப்பினரையும் தன் கட்சியில்  சேர்த்துக்கொண்டது. இது போதாது என்று இப்போது  காங்கிரஸின் 18 உறுப்பினர்களில் 12 பேரைத் தனதாக்கிக்கொள்கிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்பது அடையாளமாகக்கூட இருக்கக் கூடாது என்ற மனவோட்டமே இதற்குக் காரணம்.

எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஒரு ஜனநாயக அரசு முழுமை பெறாது. வலிமையான எதிர்க்கட்சிகளும் அவர்களுக்கான உறுதியான இடமும்தான் சட்டம் இயற்றும் மன்றங்களின் மாண்பை மகத்துவப்படுத்துகின்றன. முக்கியமாக ஆளுங்கட்சியின் தவறான போக்குகளையும்  திட்டங்களையும் சுட்டிக்காட்டித் திருத்தும் முக்கியப் பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது. ஆளுங்கட்சிகள் தடம் புரண்டுவிடாமல் தடுக்கும் சக்தியாக எதிர்க்கட்சிகள் திகழ்வதைப் பல நாடுகளிலும் பார்க்கிறோம். மக்கள் செல்வாக்குள்ள தலைவர்கள் தங்களை ஒரு கட்சிக்கான பிரதிநிதியாகக் கருதிவிடாமல் ஒட்டுமொத்த நாட்டுக்குமான தலைவர்களாக அடுத்த தளம் நோக்கி நகர்த்திக்கொள்ள எதிர்க்கட்சிகளைத் தங்குதடையின்றிச் செயல்பட ஊக்குவிப்பதை ஓர் உத்தியாகக் கையாள்வதும்கூட உண்டு. தெலங்கானாவின் செல்வாக்கு மிக்க தலைவராக உருவெடுத்திருக்கும் சந்திரசேகர ராவுக்கு அப்படியான வாய்ப்பைக் காலம் அருளியிருக்கிறது. ஆயினும், தன்னை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுருக்கில்கொள்வதில்தான் ஆர்வம் கொண்டிருக்கிறார் அவர் என்பதையே எதிர்க்கட்சிகளை முடக்கும் இத்தகு நடவடிக்கைகள் சுட்டுகின்றன.

இந்த விவகாரத்தில் சட்டமன்றத் தலைவர் நடுநிலைமையுடன் செயல்படவில்லை. இப்போதெல்லாம் கட்சித் தாவல் விஷயங்களில் எல்லா மன்றத் தலைவர்களும் தங்கள் கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருக்கவே தலைப்படுகின்றனர்; சட்டமன்றத் தலைவருக்குரிய தனித்தன்மையைப் பாதுகாக்க எவரும் விரும்புவதில்லை. ஆக, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் போதாமையைத்தான் அடுத்து நாம் கவனிக்க வேண்டியதாகிறது.

இன்று கட்சித் தாவல் என்பது ‘சில்லறையாக’ இல்லாமல் ‘ஒட்டுமொத்தமாக’ நடப்பதை ஊக்குவிப்பதாக நடைமுறையில் இச்சட்டம் மாறிவிட்டிருப்பதைப் பார்க்கிறோம். தெலங்கானாவில் மட்டுமல்ல ஆந்திரம், கோவா, மணிப்பூரிலும் இதைத்தான் பார்த்தோம். ஆக, இச்சட்டத்தைத் திருத்த மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள அரசுகளை வலியுறுத்துவது நம் கடமை. கட்சித் தாவல் தடைச் சட்டம் அதன் அடிப்படை நோக்கத்தைப் பூர்த்திசெய்யும் வகையில் திருத்தப்பட தேசிய அளவிலான ஒரு விவாதம் தேவைப்படுகிறது. இதையே தெலங்கானா விவகாரம் உறுதிப்படுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x