

மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொண்டு மாநிலத்தில் ஆட்சியை இழந்ததோடு, மக்களவைத் தேர்தலிலும் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே வெற்றியைப் பெற்றிருக்கிறது தெலுங்கு தேசம் கட்சி. இக்கட்சி பெரும் பூகம்பத்தையும் அடுத்தடுத்த அதிர்வுகளையும் எதிர்கொண்டுவருகிறது. அந்தக் கட்சிக்கு மட்டும் அல்லாது எல்லா மாநிலக் கட்சிகளுக்கும் இதில் எச்சரிக்கை செய்தி இருக்கிறது.
சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 175 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி இம்முறை வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கிறது; கடந்த முறையைக் காட்டிலும் 79 இடங்கள் குறைவு. அதேபோல மக்களவைத் தேர்தலில் மாநிலத்திலுள்ள 25 தொகுதிகளில் 3 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது. கடந்த முறையைக் காட்டிலும் இது 12 தொகுதிகள் குறைவு. எதிர்க்கட்சியுடன் கடந்த காலங்களில் நல்லுறவைப் பேணாததால், புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தாக்குதலை மாநில அளவில் எதிர்கொண்டுவரும் தெலுங்கு தேசம் கட்சி, மத்தியிலும் பாஜகவின் தாக்குதலை இப்போது எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. அக்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆறு பேரில் நால்வரைத் தன் கட்சிக்குத் தூக்கியிருக்கிறது பாஜக.
ஒரு கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கட்சி தாவும்போது அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது என்பதை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் நான்கு பேரும் கட்சி தாவியிருக்கிறார்கள். ஆக, மாநிலங்களவையிலும் தெலுங்கு தேசம் கட்சியின் பலம் இரண்டாகக் குறைந்திருக்கிறது. பாஜகவுக்குத் தாவிய உறுப்பினர்களில் சிலரின் மீது சிபிஐ விசாரணை, சட்டம் ஒழுங்கு விசாரணை, வருமானவரித் துறை விசாரணை போன்றவை நிலுவையில் இருப்பதும், அவர்கள் கட்சி தாவியதற்கு இந்த விசாரணைகளிலிருந்து தப்பிக்கும் நோக்கமும் ஒரு காரணம் என்பது இங்கே கவனிக்கக் கூடியது. கடந்த காலங்களில் எவ்வளவோ வெற்றி - தோல்விகளிலிருந்து கட்சியை மீட்டெடுத்து வந்தவர், இப்போதைய வீழ்ச்சியிலிருந்து மீள்வது அவ்வளவு எளிதாகத் தோன்றவில்லை.
சித்தாந்தரீதியாகக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளீடற்றுப்போகும் மாநிலக் கட்சிகள், ஒருகட்டத்தில் இரண்டாம்நிலைத் தலைவர்கள் உருவெடுக்காமல் தலைவர்களால் பார்த்துக்கொள்ளப்படும் கட்சிகளாகவும் மாறிவிடுகின்றன; குடும்ப, வாரிசு அரசியலை முன்னிறுத்த கட்சியின் தலைவர்களால் மேற்கொள்ளப்படும் உத்திதான் இது. குடும்ப வாரிசுகள் போதிய செல்வாக்கைப் பெறத் தவறி, அதிகாரத்தை இழக்கும்போது கட்சிகள் கலகலத்துப்போகின்றன. சந்திரபாபு நாயுடு தன் மகனை அடுத்த வாரிசாக்க முற்பட்டதும், அது போதிய செல்வாக்கைப் பெறத் தவறியதுமே தெலுங்கு தேசம் கட்சியை இந்நிலையில் தள்ளியிருக்கிறது. இது எல்லா மாநிலக் கட்சிகளுக்குமே ஒரு பாடம்தான்!