சூடானில் மக்களாட்சியைக் கொண்டுவருவது சர்வதேசத்தின் கடமை

சூடானில் மக்களாட்சியைக் கொண்டுவருவது சர்வதேசத்தின் கடமை
Updated on
1 min read

சூடானில் சர்வாதிகாரி ஒமர் அல்-பஷீர் ஏப்ரலில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு, அங்கு நிலவும் சூழல் கவலையை மேலும் அதிகமானதாக்குகிறது. அந்நாட்டின் ராணுவத் தளபதிகள் முன் இரு வழிகள் உள்ளன. ஒன்று துனீஷிய உதாரணம் - சுமுகமான முறையில் தேர்தலை நடத்தி மக்களாட்சி மலர ஒத்துழைப்பது; மற்றொன்று எகிப்திய உதாரணம் - முதலில் மக்களாட்சிக்கு வழிவகுப்பதைப் போல நடந்துவிட்டு, பிறகு ராணுவமே ஆட்சியைத் தனதாக்கிக்கொள்வது. சூடானிய ராணுவத் தளபதிகள் எகிப்திய வழியில் செல்ல முடிவெடுத்துவிட்டதையே இப்போதைய போக்குகள் காட்டுகின்றன. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

சூடான் அரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தவர்கள் மக்களைப் பிரதிநிதிகளாகக் கொண்ட இடைக்கால அரசிடம் அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டனர். அதன் பிறகு, நியாயமாகவும் சுதந்திரமாகவும் பொதுத் தேர்தல் நடக்கட்டும் என்றனர். ராணுவத் தளபதிகளோ எல்லா அதிகாரங்களையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டிருக்கின்றனர். இதை எதிர்த்துத் தலைநகர் கார்ட்டூமில் ராணுவத்துக்கு எதிராக சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது பழைய நாட்களிலிருந்து சூடான் மீளவில்லை என்பதையே காட்டுகிறது. சூடான் வரலாற்றில் கடுமையான அடக்குமுறைகளுக்குப் பேர்போன ‘விரைவு அதிரடிப் படை’ என்கிற துணை நிலை ராணுவப் படையே இந்தப் படுகொலையையும் நிகழ்த்தியிருக்கிறது. 2000-ல் சூடானின் மேற்கு மாகாணத்தில் தார்ஃபூரில் நடந்த மக்கள் கிளர்ச்சியை ஒடுக்க துப்பாக்கிச்சூடு நடத்திய இப்படையினர், தங்கள் தாக்குதலில் எத்தனை பேர் இறந்தனர் என்று யாரும் கணக்கெடுத்துவிடக் கூடாது என்று இறந்துபோனவர்களின் சடலங்களை நைல் நதியில் தூக்கி வீசியதை உலகம் இன்னும் மறந்துவிடவில்லை. ஆம், அதே அடக்குமுறைக்குள் சூடான் மக்கள் மீண்டும் திணிக்கப்பட்டிருக்கின்றனர்.

அடுத்த ஒன்பது மாதங்களில் தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடுவோம் என்று ராணுவத் தலைவர் அப்துல் ஃபட்டா அல்-புர்ஹான் கூறினாலும் அதை நம்புவதற்கேற்ற சூழல் அங்கு இல்லை. சர்வதேச அரங்கில் தங்களுக்கேற்ற சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கும் துணிச்சலிலேயே சூடான் ராணுவத் தளபதிகள் இந்த ஆட்டம் போடுகின்றனர். சூடான் விவகாரத்தில் ஐநா சபை உறுதியான கண்டனம்கூடத் தெரிவித்துவிடாமல், சீனா பார்த்துக்கொண்டது; ரஷ்யாவும் அதற்கு முழு ஆதரவளித்தது. சவுதியின் நிதியுதவியும் அவர்களுக்குக் கிடைக்கிறது.

இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாகத் தொடர்ந்து பேசுவது என்று சூடான் ராணுவமும் எதிர்க்கட்சிக் குழுக்களும் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டிருக்கின்றன. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இடைக்கால ராணுவ கவுன்சில் ஒப்புக்கொண்டுள்ளதும் சிறிது முன்னேற்றமே.

சர்வதேசத்தின் மௌனம் தரும் ஊக்கம்தான் சூடானில் ஜனநாயகத்தைக் கீழே வீழ்த்தியிருக்கிறது. இந்நிலை மாற வேண்டும்; சூடானின் ஜனநாயக வீழ்ச்சி சர்வதேச அறத்தின் வீழ்ச்சி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in