Published : 12 Jun 2019 09:57 AM
Last Updated : 12 Jun 2019 09:57 AM

பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தொடரட்டும்

புதிய அரசு அமைந்த பின் பொருளாதார முடுக்கத்துக்குக் கொடுக்க வேண்டிய உத்வேக நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி தொடங்கியிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் கூட்டத்தில், அனைவரும் எதிர்பார்த்தபடியே வங்கிகளுக்குத் தரும் பணத்துக்கான வட்டியை 0.25% குறைத்திருக்கிறது. அத்துடன் இந்த வட்டிக் குறைப்பை வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கும் தர வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், பணம் இல்லாத மின்னணுப் பரிமாற்றங்களை அதிகரிக்க ஏதுவாக ரூ.2 லட்சத்துக்கான பெருந்தொகைகளை வங்கிக் கணக்கு மூலம் மாற்றவும், ரூ.2 லட்சத்துக்கும் குறைவான தொகைகளை தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றம் மூலம் மாற்றவும் இனி கட்டணம் வசூலிப்பதில்லை என்ற நல்ல முடிவையும் ரிசர்வ் வங்கி எடுத்திருக்கிறது. தானியங்கிப் பணப்பட்டுவாடா மையங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டணங்களையும்கூட மறுசீரமைக்கவும் அது முடிவெடுத்திருக்கிறது. இவையெல்லாமே வரவேற்கப்பட வேண்டிய முயற்சிகள்.

பணவீக்க விகிதம் 4%-க்கும் குறைவாக இருப்பதால் ரிசர்வ் வங்கி இன்னும்கூட துணிந்து 0.50% அளவுக்குக்கூட வட்டி வீதத்தைக் குறைத்திருக்கலாம் என்பது பலரின் கருத்து. ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தைக் குறைத்தபோதெல்லாம் எல்லா வங்கிகளும் அதன் பலனைத் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துவிடவில்லை. வங்கிகளின் லாப விகிதம் குறைந்ததும் வாராக்கடன் அளவு அதிகரித்ததும்தான் அதற்கான முக்கியமான காரணம். பணப்புழக்கம் குறைவாக இருப்பதால்தான் வைப்புத்தொகை மீதான வட்டியை வங்கிகளால் குறைக்க முடியவில்லை, அப்படி வைப்புத்தொகை மீதான வட்டி குறையாதபட்சத்தில் வங்கிகளுக்குச் செலவுகள்தான் அதிகம் என்பதால் நிதிநிலை மேம்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு வட்டி வீதத்தை அளவோடு குறைத்திருப்பதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்படியும் வங்கிகளில் வீட்டுக் கடன், வாகனக் கடன்களை வாங்கியோருக்கு இதனால் கொஞ்சம் பலன் இருக்கும்.

வங்கிகள் வாராக் கடன்களாலும் வேறு வகைகளாலும் பாதிக்கப்படாமல் இருக்க கடைப்பிடிக்கப்பட வேண்டிய ‘பேசல்’ நடைமுறைகளையொட்டி, வாடிக்கையாளர்களுக்கு அதிக நிதி கிடைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ரிசர்வ் வங்கி ஆராய்ந்திருக்கிறது. இந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என்று ஏப்ரலில் கூறியிருந்த ரிசர்வ் வங்கி, அது 7% ஆகத்தான் இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது. எப்படியும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி தன்னுடைய அதிகார வரம்புக்குட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவிட்டது. இனி நிதியமைச்சகம்தான் தன் திறமையைக் காட்ட வேண்டும். ஜூலை 5 மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் நாள். சீர்திருத்த நடவடிக்கைகளை அடையாளம் காட்டவும் அன்றைய நாளை அரசு பயன்படுத்திக்கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x