

கடந்த வாரம் ஏப்ரல் 4 அன்று ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்ஸுக்குத் தேவையான இரண்டாவது செயற்கைக்கோளை இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ஏவுகலம் வெற்றிகரமாக ஏவியிருக்கிறது. இதன் மூலம் தொடர்ச்சியாக, வெற்றிகரமாக 25 செயற்கைக்கோள்களை இந்த ஏவுகலம் ஏவிய பெருமையைப் பெற்றிருக்கிறது.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். (இந்தியா தழுவிய இடம் உணர் செயற்கைக்கோள் அமைப்பு) என்பது அமெரிக்காவின் ஜி.பி.எஸ்ஸைப் போலத்தான். ஆனால், இந்திய அளவில் மட்டுமே இது செயல்படும். 24 செயற்கைக்கோள்களைக் கொண்ட ஒரு வலைப்பின்னல் அமைப்பில் அந்தச் செயற்கைக்கோள்கள் அனுப்பும் சமிக்ஞைகளைக் கொண்டு ஜி.பி.எஸ். முறை துல்லியமாகச் செயலாற்றுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்க ராணுவத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட இந்த அமைப்பு, பிறகு பரவலான பயன்பாட்டை எட்டியது.
வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றில் ஜி.பி.எஸ். பெருமளவில் பயனளிக்கிறது. வரைபடங்களைத் தரும் கைபேசிகளும் ஜி.பி.எஸ். முறையைத்தான் பயன்படுத்துகின்றன. ரஷ்யாவிடமும் இதுபோன்ற இடம் உணர் அமைப்பும் இருக்கிறது. கலிலியோ என்ற பெயரில் ஐரோப்பாவும் இடம் உணர் செயற்கைக்கோள் அமைப்பை நிறுவும் முயற்சியில் இருக்கிறது. சீனாவின் பெய்தோ இடம் உணர் செயற்கைக்கோள் அமைப்பு 2012-ல் உள்ளூர் சேவையை வழங்க ஆரம்பித்தது. ஜப்பானும் இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். முழுக்கவும் இந்தியக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளுக்கு உதவுவது இதன் பிரதான நோக்கம். இவ்வளவு முக்கியமான இந்தச் சேவையை எப்போதும் கிடைக்கும்படி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செய்யும். ராணுவம் சார்ந்த நடவடிக்கைகளெல்லாம் செயற்கைக்கோள்களின் இடம் உணர் அமைப்பை நம்பியிருக்கின்றன.
நெருக்கடியான தருணங்களில் பிற நாடுகளின் இடம் உணர் அமைப்பை நம்பியிருப்பது ஆபத்து. செலவுகளைக் குறைப்பதற்காக ஏழு செயற்கைக்கோள்களை மட்டும் உள்ளடக்கிய ஒரு வலைப்பின்னலை இஸ்ரோ நிறுவவிருக்கிறது. இந்தியா முழுமையையும், கூடவே இந்திய எல்லைகளிலிருந்து 1,500 கிலோ மீட்டர் வரைக்கும் இந்த அமைப்பு உள்ளடக்கும். இதற்கான முதல் செயற்கைக்கோள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ கடந்த வருடம் ஜூலை மாதம் செலுத்தப்பட்டது. இரண்டாவதாக, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி இப்போது அதன் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டிருக்கிறது.
இந்த வருடம் மேலும் இரண்டு செயற்கைக் கோள்கள் செலுத்தப்படும். எஞ்சியுள்ள மூன்று செயற்கைக்கோள்களும் அடுத்த வருடத்தின் நடுவில் செலுத்தப்படும். மேலும், நான்கு செயற்கைக்கோள்களை அதிகரிப்பதன் மூலம், இந்த அமைப்பின் செயல்பாட்டு எல்லையை விரிவுபடுத்தும் சாத்தியமும் இருக்கிறது.
ஜி.பி.எஸ். போலவே இந்தியாவின் இடம் உணர் அமைப்பும் ராணுவப் பயன்பாட்டையும் தாண்டிப் பெருவாரியான மக்களைச் சென்றடைய வேண்டிய அவசியம் இருக்கிறது. அப்போதுதான் இதுபோன்ற தொழில்நுட்பங்களுக்கு ஜனநாயகத் தன்மை அதிகரிக்கும். மேலும், இந்தத் தொழில்நுட்பம் பொருளாதாரரீதியாக வெற்றிகரமாகச் செயல்படுவதற்கான முகாந்திரமும் அப்போதுதான் உருவாகும்.