

வெளிப்படையாகவும் முறையான வழிமுறைகளிலும் ஒதுக்கப்படவில்லை என்ற காரணத்துக்காக 1993 முதல் வழங்கப்பட்ட நிலக்கரி வெட்டியெடுப்பு உரிமைகளுக்கான 214 உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்திருக்கிறது.
முறையாக விலையை நிர்ணயிக்காமல் ஆட்சியாளர்களின் விருப்பப்படி இந்த ஒதுக்கீடுகள் செய்யப்பட்டதால் அரசுக்குக் கடுமையான நிதி இழப்பு ஏற்பட்டது; தனியாருக்கோ கொள்ளை லாபம்! நிலக்கரித் துறையின் செயலாளர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும் இந்த ஒதுக்கீடுகள் நடந்திருக்கின்றன. ஆட்சேபித்த அதிகாரி வேறு துறைக்கு மாற்றப்பட்டார். ஆளும் தரப்பும் அதிகார வர்க்கமும் ஊழலால் எந்த அளவுக்குப் புரையோடிப்போயிருக்கின்றன என்பதற்கு மற்றுமொரு உதாரணம்தான் இந்த மாபெரும் ஊழல். சற்றுத் தாமதமாக விழித்துக்கொண்டாலும் சாட்டையைக் கொஞ்சம் கடுமையாகவே சுழற்றியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
வளர்ச்சி என்ற உச்சியை அடைய ஊழல் என்ற ஏணியையே பயன்படுத்தும் தொழில்துறைக்கும், அதற்கு ஆதரவாக இருக்கும் அரசியல் தரப்புக்கும் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் எப்படி உவப்பானவையாக இருக்க முடியும்? தொழில் நிறுவனங்களுக்கும் மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கும் நிலக்கரி கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படும் என்றும், அபராதம் விதித்திருப்பதால் தொழில் முனைவோருக்கு முதலீட்டு ஆர்வம் குறையும் என்றெல்லாம் போலி அக்கறையில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். 214 நிறுவனங்களின் உரிமம் ரத்தாகும்போது, நிலக்கரி அகழ்வில் பிரச்சினைகள் ஏற்படும் என்பதை மறுக்க முடியாது. அதற்காக மத்திய அரசிடம் முன்கூட்டியே பேசி, அந்த நிலையைச் சமாளிக்க முடியும் என்று மத்திய அரசு உறுதியளித்த பிறகுதான் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
இவ்வளவு நாளாக மிகக் குறைந்த விலையில் நிலக்கரியை வெட்டி எடுத்துக்கொண்டிருந்த நிறுவனங்கள், தாங்கள் சம்பாதித்த லாபத்தின் சிறு பகுதியைத்தான் - டன்னுக்கு ரூ.295 - அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இருப்பினும், நிலக்கரி உரிமங்களை ரத்துசெய்த உச்ச நீதிமன்றம், மார்ச் 31, 2015 வரை தொடர்ந்து நிலக்கரியை வெட்டி எடுத்துக்கொள்ள அனுமதி தந்திருக்கிறது. அதற்குள் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசுடையது.
இந்திய நிலக்கரி நிறுவனத்தின் திறனை நம்பியே மத்திய அரசு இந்த உறுதிமொழியை அளித்திருக்கிறது. இந்திய நிலக்கரி நிறுவனத்தால் இது முடியும் என்றால், தனியாரிடம் எதற்காக நிலக்கரி அகழ்வை விட வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.
நிலக்கரி தொடர்ந்து இதே அளவில் கிடைக்குமா, விலை உயராமல் பார்த்துக்கொள்ளப்படுமா, நிலக்கரி ஒப்பந்ததாரர்களுக்குக் கடன் கொடுத்த வங்கிகள் கடனைப் புதிய ஏலதாரர்களிடமிருந்து திரும்ப வசூலிக்க முடியுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் திருப்தியான பதில் கிடைப்பதில்தான் இந்த முடிவின் எதிர்காலம் இருக்கிறது.
லாப வேட்டைக்காரர்களான பெருநிறுவனங்கள் மட்டுமல்லாமல், அரசும்கூட உச்ச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் கையைக் கட்டிக்கொண்டு நிற்பதுதான் பெரும் அவலம். இது போன்ற தீர்ப்புகள்தான் அந்த அவலத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.