Published : 16 Mar 2018 09:47 AM
Last Updated : 16 Mar 2018 09:47 AM

உ.பி. - பிஹார்: பாஜகவுக்கு எதிராகப் புதிய அலை!

த்தர பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர், பிஹாரின் அராரியா மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு கள் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளுக்கு வெற்றிகளையும் உற்சாகத்தையும் பாரதிய ஜனதாவுக்குத் தோல்வியையும் அளித்திருக்கிறது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி கோரக்பூர், பூல்பூர் தொகுதியில் போட்டியிட முடிவுசெய்த பிறகு அதற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தார் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி. சமாஜ்வாடியுடன் தன்னுடைய கட்சியால் இணைந்து செயல்பட முடியுமா என்பதைச் சோதிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார்.

1998 முதல் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து ஐந்து முறை வெற்றிபெற்ற கோரக்பூரில் பாஜகவுக்குக் கிடைத்திருக்கும் தோல்வி அரசியல் பின்னடைவு மட்டுமல்ல, மிகப் பெரிய அவமானமும்கூட. போதாக் குறைக்குத் துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மௌரியா வெற்றிபெற்ற பூல்பூர் தொகுதியிலும் பெருந்தோல்வியே ஏற்பட்டிருக்கிறது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவருக்கும் அவர்களுடைய சொந்தத் தொகுதி யிலேயே ஆதரவு கரைந்துவிட்டதையே இது காட்டுகிறது. இதற்குக் காரணம், மாநில நிர்வாகத்தின் தரமா அல்லது மத்திய அரசின் செயல்பாடா, அல்லது இரண்டும் சேர்ந்ததன் விளைவா என்பதைக் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

பாஜகவின் தொடர் வெற்றிகள்தான் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தது. அமோக வெற்றி கண்டுள்ள இந்தக் கூட்டணி தொடருமா, வலுவடையுமா என்று பார்க்க வேண்டும். அப்படித் தொடர்ந்தால் 2019 மக்கள வைப் பொதுத் தேர்தல் வெற்றி பாஜகவுக்கு எளிதாக இருக்காது என்று சொல்லிவிடலாம்.

பிஹார் மாநிலத்தின் அராரியா மக்களவைத் தொகுதியிலும் ஜெஹனாபாத் சட்டப் பேரவைத் தொகுதியிலும் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் அமோக வெற்றிபெற்றிருக்கிறது. நிதீஷ் குமார் பாஜகவுடன் சேர்ந்துவிட்டதால் தங்களுடைய கட்சி காணாமல் போய்விடாது என்பதை நிரூபித் துக் காட்டியிருக்கிறார் லாலு பிரசாத். லாலுவுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் ஆதாயம் கிடைக்கும். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பிஹார் ஆகிய இந்தி பேசும் மாநிலங்களில் அடுத்தடுத்து இடைத் தேர்தலில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்துவருவது பாஜக வின் தேசியத் தலைமைக்கும் மத்திய ஆட்சியாளர்களுக்கும் கடும் சவாலை உருவாக்கியுள்ளது. எதிர்க் கட்சிகளின் வாக்குகள் சேருவதால் ஏற்படும் கூட்டுத் தொகையால் மட்டுமல்ல, மத்திய ஆட்சிமீது மக்களுக்கிருக்கும் அதிருப்தியும்தான் இந்தத் தோல்விக்குக் காரணம் என்பதே உண்மை.

பாஜகவைத் தோற்கடிக்கவே முடியாதோ என்ற கவலை எதிர்க்கட்சிகளுக்கு முற்றாக நீங்கியிருக்கிறது. இனி அவை வலுவான, நிலையான ஆட்சிக்கான கூட்டணியை அமைக்கத் தங்களுக் குள் உத்தி வகுக்க வேண்டும். தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராகப் புதிய அரசியல் கூட்டணி வலுப்பெற்று வருவதையே இம்முடிவுகள் காட்டுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x