Published : 13 Mar 2018 09:36 AM
Last Updated : 13 Mar 2018 09:36 AM

சிறுபான்மையினர் மீதான வன்செயல்களை இலங்கை ஒடுக்க வேண்டும்

லங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் திடீரென அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. இதற்கு முன்னால் நடந்த மோதல்களைப் போல இது பரவலானது அல்ல என்றாலும், வெவ்வேறு இனங் களுக்கு இடையில் சுமுகமான உறவைப் பராமரிக்க வேண்டியது இலங்கை அரசின் கடமை.

கண்டி மாவட்டத்தில் நடந்த முதல் சம்பவத்தின் எதிரொலி பல பகுதிகளிலும் அடுத்தடுத்துப் பரவியது. முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், மசூதிகள் தாக்கப்பட்டன. எரிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் வீட்டிலிருந்து கருகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது. சிங்கள வலதுசாரி அமைப்புகள் சமூக வலைதளத்தில் இட்ட வதந்திகளால் நாடு முழுக்கக் கொந்தளிப்புகள் ஏற்பட்டதன.

இலங்கையில் 2011-க்குப் பிறகு இப்போதுதான் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட வும் அமைதியை மீட்கவும் இது அவசியம் என்றாலும், வெகு விரைவாக நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்படும் வகையில் அமைதி ஏற்பட வேண்டும். துருப்புகளை விரைவாக எல்லா இடங்களிலும் காவலுக்கு நிறுத்தவும், தேவைப்பட்டால் வீடுகளிலும் பிற இடங்களிலும் சோதனை போடவும் ஆயுதங்களைக் கைப்பற்ற வும் சந்தேகத்துக்குரியவர்களைக் கைதுசெய்து விசாரிக்கவும் நெருக்கடி நிலைப் பிரகடனம் உதவும்.

இலங்கையில் சிங்களர், தமிழர்களுக்கு அடுத்ததாக உள்ள பெரிய தனியினம் முஸ்லிம்கள். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையில் பல ஆண்டுகளாக நடந்த மோதல்களில் முஸ்லிம்கள் யார் பக்கமும் சேராமல் தனித்தே இருந்தனர். விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, புதிய எதிரிகளைத் தேடும் சிங்கள வலதுசாரிகள், முஸ்லிம்களை இலக்காக்கிக் கொண்டுள்ளனர். ‘போது பல சேனா’ போன்ற அமைப்பு கள் இதில் அடங்கும். மியான்மரிலிருந்து தப்பும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் இலங்கையில் அடைக்கலம் தேடுகின்றனர் என்ற தகவல், சிங்கள வலதுசாரிகளை உசுப்பிவிட்டிருக்கிறது. ஏதாவ தொரு காரணத்தை முன்வைத்து, நாட்டில் மீண்டும் இன மோதலை ஏற்படுத்த சிலர் முயலலாம். அதைத் தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

இப்போதுள்ள அரசை, சிறுபான்மையினருக்கு எதிரான அரசு என்று கூறிவிட முடியாது. ஆனால், எதை வேண்டுமானாலும் செய்துவிட்டுத் தப்பிக்கலாம் என்ற சூழலைக் கடந்த சில நாட்களுக்கு அனுமதித்ததற்காக அரசுக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஐநா சபையின் அரசியல் துறை துணைச்செயலர் ஜெஃப்ரி பெல்ட்மென், இலங்கையில் நடந்த வன்செயல்களுக்குப் பின்னாலிருப்பவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

கண்டியில் நடந்த வன்செயல்களை விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் மூவரைக்கொண்ட குழுவை நியமித்திருக்கிறார் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா. சிறுபான்மைச் சமூக மக்களை அச்சுறுத்திவிட்டோ, தாக்கிவிட்டோ தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் பெரும்பான்மைச் சமூகத்துக்கு வர அனுமதித்துவிடக் கூடாது. பாரபட்சமின்றியும் திட்டவட்டமாகவும் நடவடிக்கை கள் எடுப்பதை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் உறுதிப்படுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x