வட கிழக்கில் பாஜகவின் அசாதாரண வெற்றி!

வட கிழக்கில் பாஜகவின் அசாதாரண வெற்றி!
Updated on
1 min read

தி

ரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய வட கிழக்கு மாநிலங்களில் நடந்த சட்ட மன்றத் தேர்தல்களில் பாஜகவுக்குப் பெரும் வெற்றி கிடைத்திருக்கிறது. திரிபுராவில் அக்கட்சிக் குத் தனிப் பெரும்பான்மை கிடைத்திருக்கும் நிலையில், நாகாலாந்திலும் மேகாலயத்திலும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கவிருக்கிறது. சிறிய மாநிலம் என்றாலும், திரிபுராவில் ஆட்சியைப் பிடித்திருப்பதில் அக்கட்சிக்குப் பெரும் மகிழ்ச்சி. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாத பாஜக இப்போது 35 தொகுதிகளில் வெற்றிபெற்றிருப்பதுடன் அரசையும் அமைக் கிறது. இது சாதாரண வெற்றியல்ல என்பதில் சந்தேகமில்லை.

சித்தாந்தரீதியாகத் தங்களுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்கும் இடதுசாரிக் கட்சிகளைத் தோற்கடித்ததைப் பெரிய சாதனையாகக் கருதுகின்றனர் பிரதமர் மோடியும் கட்சித் தலைவர் அமித் ஷாவும். மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் உள்ள பாஜக தொண்டர்கள் இந்த வெற்றி குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இடதுசாரிகள் உண்மையில் தங்கள் அரசியல் செல்வாக்குக்குப் பொருந்தாத வகையில் அதிகமாகவே மதிக்கப்படுகின்றனர் என்ற ஆதங்கம் பாஜகவுக்கு நீண்ட நாட்களாகவே உண்டு; அத்துடன் மதச்சார்பற்ற அணி அமைத்து காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளையும் தங்களிடமிருந்து பல ஆண்டுகளாகப் பிரித்துவைத்துத் தனிமைப்படுத்தியதும் இடதுசாரிகள்தான் என்பதையும் பாஜக மறக்கவில்லை.

இடதுசாரிகளுக்கு எதிரானவர்களும், தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அரசு மீது அதிருப்தி கொண்டவர்களும், இந்த முறை பாஜகவை ஒரு மாற்றுசக்தியாகக் கருதி ஆதரித்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியுடன் இடதுசாரிகள் கூட்டணி வைத்திருந்தாலும்கூட இந்தத் தோல்வியைத் தவிர்த்திருக்க முடியாது. ஆனால், பழங்குடிகளின் வாக்குகள் அவர்களுக்கு ஆதரவாகத் திரும்பியிருக்கலாம். அதையும் திரிபுரா மக்கள் முன்னணி என்ற பழங்குடிக் கட்சியுடன் கூட்டுவைத்து எடுத்துக்கொண்டுவிட்டது பாஜக.

நாகாலாந்தில் 11 தொகுதிகளில் வென்றுள்ள பாஜக தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியில் அமரும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. மேகாலயத்தில் அதிக தொகுதிகளில் வென்ற தனிப்பெருங்கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும், இரண்டே தொகுதிகளில் வென்ற பாஜக மற்ற கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஏற்பட வழிசெய்திருக்கிறது. மணிப்பூர், கோவா மாநிலங்களில் கடந்த முறை ஆட்சியமைக்கும் வாய்ப்பை நூலிழையில் காங்கிரஸ் இழந்தது. மேகாலயத்தில் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோதே காங்கிரஸின் மூத்த தலைவர்கள் முற்றுகையிட்டும், பாஜகவின் வியூகங்களுக்கே வெற்றி கிடைத்திருக்கிறது.

வட கிழக்கு மாநிலங்கள் விவசாயம், தொழில் ஆகியவற்றில் வளர்ச்சியடைந்தவை அல்ல. எனவே, மத்திய அரசின் நிதியுதவியை எதிர்பார்ப்பவை. மத்தியில் ஆளும் கட்சியை ஆதரித்தால் தான் அவற்றுக்குப் போதிய நிதி வசதி கிடைக்கும். எனவே, காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவுசெய்திருப்பதில் வியப்பேதும் இல்லை. மத்தியில் அமையவுள்ள ஆட்சியைத் தீர்மானிக்க வட கிழக்கு மாநிலங்களால் பெரிதும் உதவிட முடியாதுதான்; இருந்தாலும் வட கிழக்கைக் கைப்பற்றுவதில் பாஜக காட்டிய தீவிரம் குறிப்பிடத்தக்கது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in