

கு
ழந்தைகள் பிறந்த ஒரு மாதத்துக்குள் இறந்துவிடும் ‘சிசு மரண இறப்பு விகிதம்’ தொடர்பான புதிய தரவுகள் இந்தியாவுக்கு ஒருபுறம் நம்பிக்கையையும் இன்னொரு புறம் தலைக்குனிவையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஐநா சபையின் குழந்தைகள் நல நிதியம் இத்தரவுகளைத் திரட்டியிருக்கிறது. வங்கதேசம், நேபாளம், ருவாண்டா ஆகிய நாடுகளைவிட இந்தியா இதில் பின்தங்கியிருப்பது தலைக்குனிவு. சிசு மரணத்தைக் குறைப்பதற்கு நிதிப் பற்றாக்குறை காரணமல்ல, ஆட்சியாளர்களின் அக்கறையின்மைதான் காரணம்.
‘எல்லாக் குழந்தையும் உயிருடன் வாழ' என்ற தலைப்பிலான யூனிசெஃப் அறிக்கைப்படி, பணக்கார நாடுகளுடன் ஒப்பிடும்போது வளரும் நாடுகளில் சிசு மரணம் ஒன்பது மடங்கு அதிகமாக இருக்கிறது. அதேசமயம் சில ஏழை நாடுகள் இதில் வெற்றி கண்டுள்ளன. இலங்கை, உக்ரைன் போன்ற குறைந்த நடுத்தர வருவாய் நாடுகளில் இந்த சிசு மரண விகிதம் 2016-ல் 5/1,000 என்று குறைந்திருக்கிறது. அமெரிக்காவில் இது 3.7/1,000. நபர்வாரி வருமானம் 1,005 டாலர்களாக இருக்கும் ருவாண்டாவில் 1990-ல் 41/1000 ஆக இருந்த சிசு மரண விகிதம் 2016-ல் 16.5/1,000 ஆகக் குறைந்திருக்கிறது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இளம் தாய்மார்களை இலக்காக வைத்து அவர்களுக்கு ஊட்டச்சத்து, மருத்துவ வசதிகளை அளித்ததால் இது குறைந்திருக்கிறது. 2016-ல் 25.4/1,000 என்ற சிசு மரண விகிதம் உலக அளவில் 31-வது இடத்துக்கு இந்தியாவைத் தள்ளியிருக்கிறது. 6,40,000 குழந்தைகளை இழந்திருக்கிறோம். இப்பிரச்சினைக்குத் தீர்வுகள் எல்லாமே அதிக நிதிச்செலவை ஏற்படுத்துபவை அல்ல.
சிசு மரணத்தைத் தடுக்க எல்லா மகப்பேறு மருத்துவமனைகளும் 10 முக்கியப் பொருட்களைக் கைவசம் வைத்திருக்க வேண்டும். குழந்தையின் உடல் சில்லிடாமல் இருக்க துணியாலான துண்டு வேண்டும். தாய்ப்பாலைக் குடிக்குமாறு தாயின் மார்பருகில் குழந்தையைக் கிடத்த வேண்டும். கிருமிநாசினிகளும் நோயுயிர் முறி மருந்துகளும் இருந்தால் சீழ்பிடிக்காமலும் மூளைக்காய்ச்சல் தொற்றாமலும் சிசுவைக் காப்பாற்றிவிடலாம்.
தாய்க்கு விழிப்புணர்வையும் ஊட்டச்சத்தையும் கொடுத்தாலே பாதிப் பிரச்சினை தீர்ந்துவிடும். பிரசவத்தின்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிசுக்கள் மரணிக்கின்றன. இப்படி நேராமல் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ள மருத்துவமனையில்தான் பிரசவிக்கச் செய்ய வேண்டும். ‘ஜனனி சுரக்ஷா யோஜனா’ திட்டத்தை உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். பொது சுகாதாரம் தாண்டியும் சில அம்சங்கள் இருக்கின்றன. பெண் குழந்தைகளுக்குக் கல்வியறிவு புகட்டப்பட வேண்டும். கல்வி மூலம் கிடைக்கும் விழிப்புணர்வால் சிசு இறப்பு குறைய சில ஆண்டுகள் பிடிக்கும். கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பொது சுகாதாரத் துறையில் ஏற்படுத்தியுள்ள வசதிகளை எல்லா மாநிலங்களும் செய்து தர வேண்டும். இதனால் சிசு மரணத்தை தேசிய அளவில் 15/1,000 என்று வெகு விரைவில் கொண்டுவந்துவிடலாம். அரசியல் தலைமையும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இதில் நெருங்கி ஒத்துழைக்க வேண்டும்!