குரங்கணி காட்டுத் தீ உணர்த்தும் பாடம்!
தே
னி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கானுலா (ட்ரெக்கிங்) சென்றிருந்தவர்கள் காட்டுத் தீயில் சிக்கிய சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாக கானுலா சென்றவர்கள் இதில் பலியாகியிருக்கிறார்கள். பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் வனப் பகுதிகளுக்குக் கானுலா செல்வதற்கான அனுமதியை மறுக்க வேண்டிய வனத் துறை, இவ்விஷயத்தில் ஏன் தவறியது என்றும், காட்டுத் தீ தொடர்பாக முன்பே விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் ஏன் அலட்சியம் செய்யப்பட்டன என்றும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
குரங்கணி வனப்பகுதி கடினமான நிலப்பரப்பைக் கொண்டது என்பதால், காட்டுத் தீயில் சிக்கிக்கொண்ட பலரால் அதிலிருந்து தப்பிக்க முடியாமல் போய்விட்டது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்ட மீட்புப் பணியும் சவால் மிகுந்ததாக இருந்ததற்கு அதுவும் ஒரு காரணம். காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்பதிலும் நிவாரண உதவிகளை வழங்கியதிலும் மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் மேற்கொண்ட பணி பாராட்டத்தக்கது.
வளமான நிலப்பகுதிகளும் வனப்பகுதிகளும் கொண்ட நமது நாட்டில், நகர வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து ஒதுங்கி இதுபோன்ற கானுலாப் பயணங்கள் மேற்கொள்ள மக்கள் விரும்புவது இயல் பானதுதான். எனினும், இதுபோன்ற சாகசப் பயணங்களின்போது, மற்ற எல்லா விஷயங்களையும்விட மிக முக்கியமானது பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதுதான் என்பதை இந்தக் கோர சம்பவம் உணர்த்தியிருக்கிறது. பாதுகாப்பு வழிமுறைகளை விதிப்பதில் அரசுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு.
குறிப்பாக, குரங்கணியிலிருந்து கொலுக்குமலை இடையிலான பகுதி பல்வேறு சவால்களைக் கொண்டது. குறிப்பாக, காட்டுத் தீ. இந்திய வனப்பகுதிகளில் 55% இதுபோன்ற காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பு அதிகம் என்று இஸ்ரோ நடத்திய ஆய்வில் தெரியவந்திருக் கிறது. நாஸா போன்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செயல்படும் தேசிய தொலைஉணர் மையம், இதுபோன்ற காட்டுத் தீ தொடர்பாக வனத் துறையினருக்குத் தொடர்ந்து எச்சரிக்கைகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இதுபோன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டனவா, முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்று விசாரணை நடத்துவது அவசியம். கோரைப்புற்கள் கொளுத்தப்பட்டதுதான் இதற்குக் காரணம் என்று எழுந்திருக்கும் புகார்களும் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். காட்டுத் தீ தொடர்பான தகவல்கள், எச்சரிக்கைகள் இணையத்தில் வெளியிடப்பட வேண்டும்.
காட்டுத் தீயிலிருந்து தப்புவது தொடர்பான பயிற்சிகளை, இதுபோன்ற பயணங்களுக்கு ஏற்பாடுசெய்யும் நிறுவனங்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மேலும், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களைக் கொண்டுசெல்வது அவசியம். மிக முக்கியமாக, இதுபோன்ற பயணங்களில் குழந்தைகளை அழைத்துச்செல்வது தவிர்க்கப்பட வேண்டும். சுற்றுலாப் பயணங்களின் போது பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். எத்தகைய விபத்து நேரிட்டாலும் அதில் பாதிக்கப் படுபவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதிலும், அதற்கேற்ற உள் கட்டமைப்புகளை மேம்படுத்திக்கொள்வதிலும் மாவட்ட மருத்துவ மனைகள் தயாராக இருக்க வேண்டும்.
