

நான்காவது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் நிலையில், தமிழ் எழுத்துலகோடு மேலும் நெருக்கமாகிறது ‘தி இந்து’. சனிக்கிழமைதோறும் புத்தகங்களுக்காக ஒரு பக்கம் வெளிவந்துகொண்டிருந்த நிலையில், மேலும் ஒரு பக்கம் இன்று முதல் வெளியாக விருக்கிறது. ஏற்கெனவே ஞாயிற்றுக் கிழமைகளில் கலை இலக்கியத்துக்கு என்று பிரத்யேகமாக ஒரு பக்கத்தை நாம் கொண்டுவருகிறோம். இப்போது எழுத்தாளர்களைக் கொண்டாடும் மரபுக்கு வித்திடும் முயற்சியாக இந்த முயற்சியில் இறங்குகிறோம். புத்தகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உள்ள உறவை, எழுத்தாளர்களுக்கும் அவர்களுடைய உலகத்துக்கும் உள்ள உறவை இந்தப் பக்கம் அதிகம் பேசும்.
பண்பாட்டுத் தளத்தில் நிறைய ஆக்கபூர்வமான புதிய சலனங்கள் ஏற்பட்டுவரும் காலம் இது. தமிழ்ப் படைப்பாளிகள் உலகத் தரத்தில் எழுதினாலும் தமிழ்நாட்டுக்குள்ளேயே சில ஆயிரம் வாசகர்களைத் தாண்டாமல் இருந்த நிலை இன்று இல்லை. இன்றும் அவர்களுடைய வீச்சு லட்சங்களைத் தொட்டுவிடவில்லை என்றாலும், லட்சக்கணக்கான வாசகர்களுக்குத் தமிழின் முக்கியமான படைப்பாளிகளின் பெயர்களாவது தெரியும். அவர்களை அவர்களுடைய படைப்புகளுடன் அறிமுகம் செய்துவைப்பதில் ஊடகங்களுக்கு முக்கியமான பங்குண்டு.
ஆனால், ஒரு தமிழ் எழுத்தாளர் இறந்துபோன செய்தியைக்கூட ஊடகங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடியாத சூழல் ஒன்றும் இங்கே இருந்தது வாசகர்களுக்குத் தெரியும். அது ஒரு சமூக அவலம்தான். எழுத்தாளர் என்பவர் ஒரு சமூகத்தில் மேலும் ஒருவர் கிடையாது; அந்தச் சமூகத்தின் முன்னத்தி ஏர். அறிவியக்கமே அடுத்தடுத்த நிலைகளுக்கு ஒரு சமூகத்தை முன்னெடுத்துச் செல்கிறது. ஆக, எழுத்தாளருக்கும் அறிவியக்கத்துக்கும் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் சமூகக் கடமை. இதை ‘தி இந்து’ முழுமையாக உணர்ந்திருக்கிறது. அந்தக் கடமையின் தொடர்ச்சியே இது. கடந்த மூன்று ஆண்டுகளில் ‘தி இந்து’ முன்னெடுத்துவரும் முயற்சிகள் ஒட்டுமொத்தத் தமிழ் ஊடக உலகிலும் எதிரொலிப்பது நமக்குக் கிடைத்திருக்கும் கூடுதல் வெற்றி.
பண்பாட்டுத் தளத்தில் ஏற்பட்டுவரும் ஆரோக்கியமான சலனங்களை அக்கறையோடும், நியாயமான விமர்சனக் கண்ணோட்டத்துடனும் அணுகி, அவற்றை மேலும் வளமூட்டுவதே இந்த விரிவாக்கத்தின் அடிப்படை. அந்தப் பணியில் படைப்பாளிகள், பதிப்பாளர்கள், வாசகர்கள் ஆகியோரின் துணையோடு களம் இறங்கியிருக்கிறோம். தமிழால் இணைவோம். தமிழை உலக அரங்கில் முன்னணிக்குக் கொண்டுவருவோம்!
நூல் வெளி பக்கத்துக்குச் செல்ல >>கருத்துப் பேழை - நூல் வெளி