

பொ
து சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) முறை அமலுக்கு வந்துவிட்டதால் மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்தைக் கண்காணிக்கவும் வரி ஏய்ப்பு நடைபெறாமல் தடுக்கவும் ‘சரக்கு மின்னணு வரி ரசீது' முறையை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த உத்தேசித்திருக்கிறது பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி தலைமையிலான மாநில நிதியமைச்சர்கள் குழு. இந்நடைமுறை எளிமையானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பின்படி, ரூ.50,000 மதிப்புக்கும் அதிகமுள்ள சரக்குகளை வெளிமாநிலங்களுக்குக் கொண்டுசெல்ல இந்த சரக்குப் போக்குவரத்து ரசீது அவசியம். பிப்ரவரி 1 முதல் அமல்படுத்த முதலில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இதற்கான மென்பொருள் தொழில்நுட்பம் முதல் ஒரு மணி நேரத்தில் பதிவேற்றப்பட்ட 5 லட்சம் ரசீதுகள் தொடர்பான தரவுகளின் சுமை தாங்காமல் முடங்கியதால் கைவிடப்பட்டது. ஜிஎஸ்டி தொடர்பான இணையவழித் தகவல் பதிவு முறையை மேலும் எளிமையாக்கும்படி தொழில், வர்த்தகத் துறையினர் கேட்டுக்கொண்டதால் அதையும் சீரமைப்பதற்காகத் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அனைத்து மாநிலங்களையும் மத்திய ஆட்சிக்குள்பட்ட ஒன்றியங்களையும் எடுத்த எடுப்பிலேயே மின்னணு வழி சரக்குப் போக்குவரத்து ரசீது முறைக்குள் கொண்டுவராமல், சரக்கு கொண்டுசெல்லப்படும் நான்கு அல்லது ஐந்து மாநிலங்களுக்கு இடையில் மட்டும் இதை முதலில் சோதித்துப் பார்க்கலாம் என்று மாநில நிதியமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இதுவும் புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். சில உற்பத்தி மாநிலங்களில் அதன் எல்லைக்குள்ளேயேகூட இந்த மின்னணு வழி சரக்குப் போக்குவரத்து ரசீது அவசியமாகலாம். தொழில் துறையினருக்கு இந்த மின்னணு வழி ரசீது முறை மீது நிறைய அதிருப்தி இருக்கிறது. சரக்கைக் கொண்டுசெல்லும் தொலைவு 10 கிலோ மீட்டரைத் தாண்டினாலே ரசீது வேண்டும் என்பதை அவர்கள் ஏற்கவில்லை.
மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்துக்கு மின்னணு வழி ரசீது முறையை உடனடியாகக் கொண்டுவர மத்திய அரசு துடிப்பதற்குக் காரணமிருக்கிறது. ஜிஎஸ்டி வரி வசூல் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சராசரியாக ரூ.90,000 கோடியாக இருந்தது. அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் இந்த சராசரி ரூ.84,294 கோடியாகக் குறைந்திருக்கிறது. பதிவுசெய்துகொண்டவர்களில் கணிசமானவர்கள் வரி செலுத்துவதைத் தவிர்க்கும் வழிகளையும் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். ஜிஎஸ்டியின் அடுத்த பேரவைக் கூட்டத்தில் இது விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டியை அனைவரும் செலுத்துவதை உறுதிசெய்தால்தான் வரி விகிதங்களை மேலும் சீரமைத்து வரியைக் குறைக்க முடியும் என்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. மின்னணு சரக்குப் போக்குவரத்து ரசீது முறை மாநில அரசுகளுக்கும் தொழில் துறைக்கும் எளிமையாகவும் வசதியாகவும் இருக்க வேண்டும். அதற்கு தகவல் தொழில்நுட்பத் துறையின் கட்டமைப்பு கைகொடுக்க வேண்டும். வரி வருவாய் உயர்ந்தால்தான் மாநிலங்கள் ஜிஎஸ்டிக்கு மாறியதால் எதிர்கொள்ளும் வருவாய் இழப்பை மத்திய அரசால் ஈடுசெய்ய முடியும்!