

மா
லத்தீவில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை விலக்கிக்கொள்வதென்று அந்நாட்டு அரசு முடிவுசெய்திருப்பது நிம்மதியைத் தருகிறது. இது ஜனநாயகத்தை அங்கு மீண்டும் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் ஒன்று என இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. எனினும், மாலத்தீவின் நீதித் துறை மீதும் நாடாளுமன்றத்தின் மீதும் தன்னுடைய பிடியை அதிபர் அப்துல்லா யமீன் உறுதி செய்துகொண்ட பிறகே, நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது என்று முன்னாள் அதிபர் முகம்மத் நஷீத் தலைமையிலான எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலர் இன்னமும் தலைமறைவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 1-ல், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 தலைவர்களுக்கு அரசு விதித்த தண்டனையை ரத்துசெய்து மாலத்தீவு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது. தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளைக் கைதுசெய்ய உத்தரவிட்ட அதிபர் யமீன், முன்னாள் அதிபர் அப்துல் கயூம் உள்ளிட்ட பலரைக் கைதுசெய்தார். இதற்கிடையே உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் திருத்தியமைக்கப்பட்டது. இதற்கு ராணுவக் கெடுபிடி காரணமாக இருக்கலாம் என்றே தெரிகிறது. தற்போது நெருக்கடி நிலை விலக்கப்பட்டாலும், சகஜ நிலை இன்னமும் திரும்பவில்லை.
இந்தச் சூழலில், இந்திய-மாலத்தீவு உறவுகளைச் சீர்படுத்தி மீண்டும் சுமுகமாக்குவது என்பது எளிதான விஷயமல்ல. நெருக்கடி நிலை அறிவிப்பைக் குறைகூறி இந்தியத் தரப்பில் விடுக்கப்பட்ட அறிக்கைகளுக்கு மாலத்தீவு அரசு காரசாரமாக பதில் அளித்தது. அதுமட்டுமல்ல, நெருக்கடி நிலையைத் திரும்பப் பெற்றதை வரவேற்று இந்தியா விடுத்திருக்கும் அறிக்கையையும் மாலத்தீவு விரும்பவில்லை. இத்தனைக்கும், சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை இந்தியாவுடன் இணைந்து பணிபுரியும் தருணங்களுக்குக் காத்திருப்பதாகக் கூறிவந்தது மாலத்தீவு. சமீப ஆண்டுகளாகச் சீனாவுடன் நெருக்கம் காட்டுகிறது. மாலத்தீவின் அடித்தளக் கட்டுமானங்களில் சீனா முதலீடுசெய்கிறது.
சீனாவின் உறவு காரணமாக இந்தியாவோ, அமெரிக்காவோ தன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று மாலத்தீவு கருதுகிறது. மாலத்தீவில் தற்போது ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது தனது ராஜதந்திர பலம் முழுவதையும் அந்நாட்டு அரசுக்கு ஆதரவாகப் பயன்படுத்தியது சீனா. தேவைப்பட்டால் எதிர்க்கட்சிகளுடன் பேசி சமாதானப்படுத்தத் தயார் என்றும் மாலத்தீவு அரசிடம் கூறியது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்ற நிகழ்வுகள் நடந்தபோது, அங்கே சமரசம் செய்யும் நாடாக இந்தியாதான் இருந்தது. 1988-ல் மாலத்தீவு நெருக்கடிக்கு உள்ளானபோது இந்திய ராணுவம் சென்று அந்நாட்டுக்குப் பாதுகாப்பு அளித்தது. ஆனால், சமீபத்திய சம்பவங்களின்போது இந்தியா தேவைக்கும் அதிகமாக தனது கருத்துகளை வெளியிடாமல் நிதானம் காட்டி புத்திசாலித்தனமாக நடந்துகொண்டது. நியாயமாகவும் அனைத்துத் தரப்பையும் அரவணைத்துச் செல்லும் விதத்திலும் ஜனநாயகப் பாதைக்கு அதிபர் யமீனைத் திரும்ப வைப்பதும், மாலத்தீவுக்கு இந்தியாவும் முக்கியமான நாடுதான் என்று உணர வைப்பதும் இந்திய வெளியுறவுத் துறைக்கு உள்ள சவால்மிக்க பணிகள். இவையெல்லாம் நடக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!