

பிஜியின் புதிய பிரதமராகியிருக்கிறார் ஒரேக் பைனிமராமா. பிஜியில் கடந்த எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக நாடாளு மன்றத்துக்குத் தேர்தல் நடந்து, முறைப்படி பிரதமர் தேர்ந் தெடுக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்துக்கு நல்லது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்து பிரதமரும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதால், ராணுவம் பாசறைக்குத் திரும்ப வேண்டும். நாட்டின் நலன் கருதி நாங்கள் எப்போது வேண்டுமானாலும் தலையிடுவோம் என்று ராணுவத் தலைமை சமீபத்தில்கூட எச்சரித்திருப்பது நல்ல விஷயம் அல்ல. என்றாலும், சூழல் மாறும் என்று நம்புவோம்.
பிஜியில் 1987 முதலே ஆட்சிக் கலைப்பு, ராணுவ ஆட்சி, மக்கள் எதிர்ப்பு என்று மாறிமாறிக் காட்சிகள் அரங்கேறிவருகின்றன. 18,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட பிஜியின் மொத்த மக்கள்தொகை 8.6 லட்சம். இவர்களில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர்கள். அவர்களில் 84% பேர் வாக்களித்து, 50 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில், பைனிமராமா தலைமையிலான பிஜி ஃபர்ஸ்ட் பார்ட்டிக்கு 59% வாக்குகளையும் சோஷியல் டெமாக்ரடிக் லிபரல் பார்ட்டிக்கு 28% வாக்குகளையும் கொடுத்துள்ளனர். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் அங்கு தேர்தல் நடப்பதால், பிஜி ஃபர்ஸ்ட் பார்ட்டி 32 இடங்களையும், சோஷியல் டெமாக்ரடிக் லிபரல் பார்ட்டி 15 இடங்களையும், நேஷனல் பெடரேஷன் கட்சி 3 இடங்களையும் பெற்றுள்ளன.
பிஜியில் ஊழலை ஒழிப்போம், இனரீதியிலான பிளவுபடுத்தலைத் தடுப்போம், இனரீதியில் பாகுபடுத்தும் கொள்கைகளைக் கைவிடுவோம், பூர்வகுடிகள் அல்லாத மக்களின் உடமைகளைப் பறிப்பதைத் தடுப்போம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்துள்ளார் பைனிமராமா. பிஜியின் மொத்தக் குடிமக்களில் 43% பேர் இந்திய வம்சாவளியினர். 1900 முதல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இந்தியர்கள் இங்கே குடியமர்த்தப்பட்டனர். பிஜியின் கரும்பு, கோதுமைச் சாகுபடிக்கு இந்தியர்கள்தான் முக்கியக் காரணம். அங்குள்ள சர்க்கரைத் தொழிலும் அவர்கள் கையில்தான் இருக்கிறது. பிஜியின் பொருளா தார வளர்ச்சிக்குக் காரணமான இந்திய வம்சாவளியினர் நாட்டின் அதிபர், பிரதமர் பதவிக்கு வர முடியாதபடி அரசியல் சட்டம் திருத்தப் பட்டிருக்கிறது. இந்தியர்களுடைய உழைப்பைப் பெற்று முன்னுக்கு வந்திருந்தாலும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடுதான் இதர பிஜியர்கள் பார்க்கின்றனர். அவர்களுடைய படிப்பு, கலாச்சாரம், தொழில் திறமை, இதர திறமைகள், ஒற்றுமை ஆகியவை மற்றவர் களுக்கு உறுத்தலாக இருக்கிறது. எனவே, ராணுவம், போலீஸ் மூலம் இந்திய வம்சாவளியினரை எப்போதும் அடக்கிவைக்கவே நினைக் கின்றனர். இந்த ஆட்சி மாற்றத்துக்குப் பிறகாவது நிலைமை மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அனைவருக்கும் சம உரிமை, சம நீதி, சம வாய்ப்பு என்கிற சூழலே ஒரு நாட்டின் நிலைத்த அமைதிக்கும் நீடித்த வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்க முடியும். மீண்டும் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியிருக்கும் பிஜி, இந்தத் திசையை நோக்கித் தன் பயணத்தை அமைத்துக்கொள்ளட்டும்!