

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளகச்சேரி என்ற கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த மதுமிதா என்ற 3 வயதுச் சிறுமி, 18 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டத்தின் இறுதியில் மீட்கப்பட்டும்கூட, கடந்த ஞாயிறு அன்று உயிரிழந்திருக்கிறாள்.
ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறப்பதும், அதைத் தொடர்ந்து சில நாட்கள் மக்கள் மிகுந்த கோபத்துடன் அதைப் பற்றிப் பேசுவதுமாக இருப்பது ஒரு தொடர் நிகழ்வாகவே ஆகிவிட்டது. இந்த விபத்துகளைத் தடுப்பது சாத்தியமே இல்லாத ஒரு விஷயம்போல் ஆகிவிட்டது. மேலோட்டமாகப் பார்த்தால்கூட, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு மிக எளிதானது என்ற விஷயம் நமக்கு விளங்கிவிடும். ஆனாலும் என்ன பயன்?
ஆழ்துளைக் கிணற்றின் உரிமையாளருடைய தவறுக்கு அவருடையே மகளே பலியாகியிருக்கிறார் என்பது இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தன்னுடைய விவசாய நிலத்துக்காக 500 அடி ஆழத்தில் இந்த ஆழ்துளைக் குழாய்க் கிணற்றை அமைத்தவர், தண்ணீர் கிடைக்கவில்லை என்றதும் அந்தக் கிணற்றை வெறுமனே பாலிதீன் சாக்குப் பையைப் போட்டு மூடி வைத்திருக்கிறார்.
தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த மதுமிதா அந்த சாக்குப்பை மீது தவறுதலாக நடந்தபோதுதான் கிணற்றுக்குள் விழுந்திருக்கிறாள்.
இது போன்ற விபத்துகளைக் குறித்துக் கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிகளை உத்தரவாகவே பிறப்பித்திருக்கிறது: “ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு முன், அது தோண்டப்படும் இடம், கிணற்றின் ஆழம், தோண்டுபவர் பெயர், முகவரி ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்துக்குக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் கிடைக்காவிட்டால் அதைத் திறந்துபோடாமல் உரிய மூடியைக் கொண்டு மூட வேண்டும், யாரும் அதை நெருங்க முடியாதபடிக்குத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும், பயன்படுத்தாத அல்லது கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மண்ணைக் கொண்டு மூடிவிட வேண்டும்.”
எல்லா ஊர்களிலும் பயன்படுத்தப்படாத, பயன்படுத்த முடியாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவது கட்டாயம் என்பதை மாவட்ட வருவாய்த்துறை, காவல்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பாக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறு அமைக்கும் நிறுவனத்தார் வேலையைத் தொடங்கும்போதே வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தந்து குழாய் பதித்தாலும்கூட அந்த இடத்தின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டியது உரிமையாளரின் பொறுப்பு.
இதில் கடமை தவறும் கிணற்று உரிமையாளர், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் ஒப்பந்ததாரர், வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு அவரவர் பொறுப்பு, தன்மைக்கேற்ப கடுமையான தண்டனைகளை வழங்குமாறு சட்டம் இயற்றப்படுவது அவசியம்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் ஏதோ பாடம் கற்றதைப் போலவும், இனியாவது எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்றும் மனச்சாந்தி அடைகிறோம். ஆனால், விபத்துக்கள் தொடரத்தான் செய்கின்றன. நமது அக்கறை யின்மையும் அலட்சியமும் ஆழ்துளைக் கிணறுகளைவிட மிக ஆபத்தானவை என்பதுதான் இந்த விபத்துகள் நமக்குச் சொல்லும் செய்தி.