நோயாளிகளின் உயிரோடு விளையாடாதீர்கள்

நோயாளிகளின் உயிரோடு விளையாடாதீர்கள்
Updated on
1 min read

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒரே தருணத்தில் நேரிட்ட ஐந்து நோயாளிகளின் மரணம் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டியது; தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த இந்த நோயாளிகள் ஐவரும் உயிரிழக்க மின் தடையே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டாலும், இன்னமும் அது உறுதிபடுத்தப்படவில்லை; ஆனால், இந்தப் பிரச்சினையோடு தொடர்புபடுத்தப்படும் விஷயங்கள் பொதுச்சமூகத்தின் கவனத்தைக் கோருகின்றன.

அரசு மருத்துவமனைகளில் - குறிப்பாக, இத்தகைய கோடை காலங்களில் - மின் தடை ஏற்படும் சமயங்கள் நோயாளிகளுக்குத் தாங்கவியலா சங்கடத்தை உண்டாக்கக்கூடியவை. எல்லா ஊர்களின் அரசு மருத்துவமனைகளிலும் தடையில்லா மின்சாரம் எனும் சூழலுக்கு இன்னும் நாம் நகரவில்லை என்றாலும், 24 மணி நேர தடையில்லா மின் விநியோகத்துக்காகத் தனி துணை மின் நிலையம், ஜெனரேட்டர்கள், இன்வெர்ட்டர்கள் போன்ற வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகளில் ஒன்று மதுரை மருத்துவமனை. ஆனால், இந்த நோயாளிகளின் மரணத்தினூடாக அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் மதுரை மருத்துவமனையிலேயே இந்நிலை என்றால், மாநிலத்தின் சாதாரண மருத்துவமனைகளில் நிலைமை எப்படியிருக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறது.

தரமான மருத்துவ உபகரணங்களை அரசு கொள்முதல் செய்வதில்லை; இப்படி வாங்கப்படும் உபகரணங்கள் பழுதானால் அவற்றைச் சீரமைக்க ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக்கூட அந்தந்த மாவட்ட மருத்துவத் துறைக்குப் பகிர்ந்தளிக்காமல் மேலிருந்து முடிவுகளை எடுக்கிறார்கள்; ஒவ்வொன்றுக்கும் பின்னணியில் பணம் விளையாடுகிறது என்று சுகாதாரத் துறை வட்டத்தைத் தாண்டியும் இன்று பேசப்படுகிறது. மதுரை விவகாரத்திலேயே, “அரசு மருத்துவமனைகளுக்குத் தமிழக சுகாதாரத் துறை சில மாதங்களுக்கு முன் அனுப்பிய 160 யுபிஎஸ்களில் மதுரை அரசு மருத்துவமனைக்கு மட்டும் 16 கருவிகள் வந்தன. ஆனால், இரண்டரை மாதத்துக்கு மேலாக அவை பொருத்தப்படாமல் கிடந்தன” என்கிறார்கள். தமிழகம் முழுக்க அவற்றைப் பொருத்தும் பணி ஒரே நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதும் அந்த நிறுவனத்தின் தாமதமே இதற்கான காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாமே தீவிரமானவை. தலைமை மருத்துவமனை முதலாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை எல்லா மருத்துவமனைகளிலும் சீரான மின் விநியோகத்தையும், அங்கு தேவைப்படும் உபகரணங்களின் தரத்தையும் உறுதிசெய்தல் அரசின் கடமை.

தினமும் 6.5 லட்சம் வெளிநோயாளிகள், 70 ஆயிரம் உள்நோயாளிகளைக் கையாள்கின்றன தமிழக அரசு மருத்துவமனைகள். இந்திய அளவில் தமிழகம் மெச்சப்படுவதற்கான காரணங்களில் ஒன்று நமது பொது சுகாதாரத் துறை. அங்கு விழும் எந்த ஓட்டையும் பல்லாயிரக்கணக்கான உயிர்களோடு சம்பந்தப்பட்டவை என்ற உணர்வோடு அரசு செயல்பட வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in